கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன் அதிகம் பேசப்பட்ட தமிழர். ஒற்றை மனிதனாக மக்களை திரட்டி தங்கள் பகுதி மக்களுக்கு பாதிப்பை விளைவிக்கும் அணு உலைகளை நிறுவிய வல்லாதிக்க அரசுகளை எதிர்த்தவர். சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் மிக நீண்ட காலம் நடைபெற்ற மக்கள் திரள் போராட்டம் அது.
தமிழக மண்ணின் பெரும்பான்மையிரான மீனவர்களை ஒன்று திரட்டி அந்த மக்களுக்கு போராட்ட உணர்வை ஊட்டி அவர்கள் தண்ணீருக்குள் நின்று எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு போராடிய காட்சிகள் இன்னும் நம் கண்களில் இருந்து மறையவில்லை.
முதலில் ஹெலிக்காப்டர்கள் வந்தன, பின்னர் வஜ்ரா வாகனங்களுடன் காவல்துறையின் குண்டர்படைகள் வந்தன, பின்னர் அச்சுறுத்தும் தேசிய பாதுகாப்பு சட்ட வழக்குகள் வந்தன எல்லாவற்றையும் எதிர்கொண்டனர் அந்த பகுதி மக்கள். இந்த அத்தனை பெரிய தியாகத்தின் பின்னாலும் மக்களுடன் இருந்தவர் சுப. உதயகுமாரன் எனும் முதியவர்.
ஒரு கட்டத்தில் ஊடகங்கள் மறந்து போக , மக்களும் வேறு பக்கம் கவனத்தை திருப்ப இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும் அந்த போராட்டத்தின் கோணத்தை வேறு வழியில் முயற்ச்சித்து பார்க்க துவங்கினார் அய்யா சுப.உதயகுமாரன். எல்லா சமூக நீதி போராளிகளையும் போல இவரையும் காலம் தேர்தல் அரசியல் நோக்கி தள்ளியது.
அணு உலை எதிர்ப்பு என்ற ஒற்றை புள்ளியின் அடிப்படையில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மியுடன் இணைந்து போட்டியிட்டார். இதுவர ஆதரவு கொடுத்த அனைவரும் விலகிச்சென்றனர். ஆம் தேர்தல் அரசியல் விசித்திரமானது எது எப்படி நடக்கும் என்று தெரியாது. இறுதியாக அந்த தேர்தல் தோல்வியையே பரிசளித்தது. காமராஜர் தோற்றார் , கலைஞர் தோற்றார் என்று சமாதானம் சொல்லி கடந்து போக இயலாது. அதிகாரத்தை பிடிக்க வேண்டும் என்று இறங்கி விட்டு அதன் அத்தனை வழிகளையும் முயன்று பார்க்க வேண்டும். அதுதான் உண்மையான முயற்ச்சி. எனவே தொடர்ந்து களமாடிக்கொண்டிருக்கிறார். இன்று பச்சை தமிழகம் கட்சியின் சார்பில் தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார்.
எல்லாவற்றிலும் ஒரு நேரான பார்வை இருக்கிறது. இயற்கை பற்றி , சமூக நீதி பற்றி , சிறுபான்மை நலன் பற்றி , முஸ்லிம்கள், தலித்துகள் , மதவாதம், ஃபாஸிசம் என்று அனைத்தும் நேரான சிந்தனைகள். ஒரு எழுத்தாளராக , சமூக போராளியாக எப்பொழுதும் சிறுபான்மை மக்களுடன் இணைந்து நிற்கிறார். ஒரு எழுத்தாளராக , கட்டுரையாளராக அவருடைய பார்வை முக்கியத்துவம் வாய்ந்தது.
தன்னை தமிழனாக முன்னிறுத்துகிறார் ஆனால் இனவாதம் பேசவில்லை!.
அரசை எதிர்த்து வீரியமாக போராடுகிறார் ஆனால் அதில் மக்களை பாதுகாக்கும் அஹிம்சை வழி இருக்கிறது!.
சிறுபான்மையினருக்காக பேசுகிறார், அதில் உரிமையுடன் அவர்களுடைய அரசியல் பிழைகளும் சுட்டிக்காட்டப்படுகிறது..
தன் மீதான அத்தனை குற்றச்சாட்டுகளையும் மக்களுக்காக சுமந்து , தன்னுடைய மக்களுக்காக வழக்குகளை சந்தித்து , மீண்டும் தன்னுடைய மக்களுக்காகவே தேர்தல் அரசியலிலும் களமிறங்கியிருக்கும் அய்யா சுப.உதயகுமாரன் அவர்களை சட்டமன்றத்திற்குள் அனுப்ப வேண்டியது காலத்தின் கட்டாயம்.
நமக்காக பேசும் ஒருவரை நாம் பேச வேண்டிய இடத்தில் அமரச்செய்வதன் முக்கியத்துவத்தை இராதாபுரம் தொகுதி வாக்காளர்கள் உணர வேண்டும்.
காத்திருப்போம் .. சிலர் முன்னேறும்போது சரித்திரம் வழிமாறும்!..
- சஹீத்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக