தேர்தலில் வெற்றி பெற்றால் தொகுதியிலேயே தங்கி மக்களுக்காக பணியாற்றுவேன். யாரிடமிருந்தும் எந்தக் காரணத்துக்காகவும், எந்தவிதத்திலும் கையூட்டு பெற மாட்டேன். எம்எல்ஏ பதவி முடியும் காலம் வரை ஆண்டுதோறும் சொந்தக் கணக்கையும், வருமான வரிக் கணக்கையும் பொதுவெளியில் வெளியிடுவேன். வாக்குக்கு லஞ்சம் தரமாட்டேன். சாதி, மத உணர்வுகளுக்கு இடம் அளிக்க மாட்டேன். கூடங்குளத்தில் உள்ள முதல் 2 அணு உலைகளையும் மூட நடவடிக்கை எடுக்கப்படும்.
கூடுதல் உலைகளுக்கான பணிகளை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும். கடலுக்கும், கடலோடிகளுக்கும் தீங்கு விளைவிக்கும் தாது மணல் ஆலைகள், ரசாயன ஆலைகள் மூடப்படும். மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீரிணையில் உள்ள பவளப் பாறைகளை அழிக்கும் சேதுசமுத்திரத் திட்டத்தை தொடர்ந்து எதிர்ப்பேன். நதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும். விளைநிலங்களைப் பாதுகாக்கவும், வேளாண்மையை விருத்தி செய்யவும், இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தொழில் வளம், வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம் அளிப்பது, மருத்துவம், சுகாதாரம், போக்குவரத்து, கல்வி, சுற்றுலா, திசையன்விளை வளர்ச்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த ஒப்பந்தத்தை அவர் வெளியிட்டார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
இடிந்தகரையில் நடந்த போராட்டம் ஓயவில்லை. தொடர் வழக்கு, நீதிமன்ற அலைக்கழிப்பு உள்ளிட்டவற்றால் சற்று சோர்வடைந்துள்ளனர். கூடங்குளம் அணு உலைகள் மூடப்படும்வரை போராட்டம் நீடிக்கும்.
தலித் விரோத செயல்களை முன்னிலைப்படுத்தும் பாமகவின் ஆதரவு தேவையில்லை. தேமுதிகவின் ஆதரவும் வேண்டாம். மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள வைகோ, தொல்.திருமாவளவன் ஆகியோர் கூடங்குளம் எதிர்ப்பு போராட்டத்துக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதால் அவர்களது ஆதரவை ஏற்பேன். இல்லையெனில், மக்கள் நலக் கூட்டணி வேட்பாளரையும் எதிர்த்து களம் காணுவேன். தமிழக முதல்வராகும் தகுதி விஜயகாந்துக்கு இல்லை.
ஜனவரி 18-இல் பச்சைத் தமிழகம் தொடங்கப்பட்டது. எனவே, முதல்கட்டமாக ராதாபுரம் தொகுதியில் மட்டும் போட்டியிடுகிறோம். கூடங்குளம் எதிர்ப்பு குறித்த எங்களது குரலை பேரவையில் நாங்களே எழுப்ப இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வோம் என்றார் அவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக