பா.ஜ.க தலைவர் சுப்பிரமணிய சுவாமியின் பெரும் தலைவலியாக இருப்பவர் தனது இருபதுகளில் இருக்கும் ஒரு இளைஞர். சுப்பிரமணிய சுவாமியின் பதிவுகளை கிண்டல் செய்யும் விதத்தில் பதிவுகளைப் போட்டு அசத்தி வரும் அவரின் “Unofficial: Subramaniam Swamy” பக்கத்திற்கு கிட்டதட்ட
இரண்டு லட்சம் பார்வையாளர்கள் உள்ளனர். பல முறை இவரது பக்கத்தை முடக்க சுப்பிரமணிய சுவாமி முயற்சி செய்தும் அவை பயனளிக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் அவரின் அந்த முயற்சிகள் அவரது பக்கத்தையே ஃபேஸ்புக் முடக்க காரணமானது.
விஞ்ஞானிகள், விளையாட்டு வீரர்கள் என உலகின் பிரபலங்கள் இந்து வம்சாவளியை சேர்ந்தவர்கள் என்று சுவாமி பாணியில் கலாய்ப்பது, சுவாமியின் கருத்துகளுக்கு உடனுக்குடன் பதிலடி கொடுப்பது, இன்னும் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. மற்றும் மோடியின் கொள்கைகளை கேலி செய்வது முதலான பதிவுகளை அந்த இளைஞரின் பக்கத்தில் காணலாம்.. இதனால் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளை விட பா.ஜ.க விற்கு இவர்தான் பெரிய சவாலாக மாறிவிட்டார்.
ஒரு செய்தி இணையதளத்திற்கு அளித்துள்ள பேட்டியில் இது குறித்து அவர் கூறியதாவது, சுப்பிரமணிய சுவாமியின் பதிவுகள் நகைப்புக்குரியதாகவும் அதே நேரம் ஆபத்தானவையாகவும் இருந்தது. அவை பகுத்தறிவுக்கு பொருந்தாமல் எரிச்சலூட்டுபவையாக இருந்தது. அதனால் அதே போன்று ஒரு பக்கத்தை ஃபேஸ்புக்கில் தொடங்க முடிவு செய்தேன், என்னுடைய முதல் பதிவுக்கு பெரும் வரவேற்ப்பு கிடைத்தது. அது என்னை மேலும் தொடர ஊக்கப்படுத்தியது. அதனால் தொடர்ந்து கேலி பதிவுகளையும் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க, மற்றும் சுவாமியின் பதிவுகளுக்கு எதிர்பதிவுகளையும் பதிவிட்டு வருகிறேன் என்று கூறியுள்ளார்.
மேலும் தன்னை குறித்த தகவல்களை இரகசியமாக வைத்துகொள்ள அறிவுறித்திய அவர், தான் அந்த பக்கத்தை நடத்துவது தனது பெற்றோர்களுக்கும் கூட தெரியாது என்று கூறியுள்ளார். அவர்களுக்கு தெரிந்தால் என்னை அந்த பக்கத்தை முடக்க வைத்துவிடுவார்கள் என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் சுப்பிரமணிய சுவாமி கூறுவது போல் தான் எந்த கட்சியையும் சார்ந்தவன் அல்ல என்றும் அதனால் சுதந்திரமாக யாருடைய குறைகளை வேண்டுமானாலும் சுட்டிக்காட்டலாம் என்றும் கூறியுள்ளார்.
நம் நாடு பல்வேறு மதங்களை பின்பற்றக் கூடிய மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழும் ஒரு நாடு என்றும் சுவாமி போன்ற தலைவர்கள் இந்த ஒற்றுமையை குலைப்பதற்கு தங்களால் முடிந்த அளவிற்கு முயற்சி செய்து வருகின்றனர் என்றும் கூறியுள்ளார்.
இவரது பக்கம் சமீபத்தில் ஃபேஸ்புக்கினால் முடக்கப்பட்டது. ஆனால் இதனை பலர் கண்டிக்கவே வேறு வழியின்றி ஃபேஸ்புக் அதனை மீண்டும் நிறுவியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக