Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 28 ஜூலை, 2015

சொல்லும், செயலும். – சிறுகதை

முஹம்மது யாகூப், ஒரு இஸ்லாமிய அமைப்பின் அந்த பகுதியின் பொறுப்பாளியாவார். நல்ல பேச்சாளர், ஊரில் அவருக்கு நல்ல மரியாதை. எலெக்டிரிக்கல் கடை சொந்தமாக வைத்திருக்கிறார். ஓரளவு வசதியானவர்.  இஸ்லாம் சம்மந்தமாக இளைஞர்கள் பலர் அவரிடம் பல்வேறு சந்தேகங்களை கேட்பார்கள். அதற்கு அவர் சரியான, தெளிவான விளக்கத்துடம் பதில் அளிப்பார். அதனால் இளைஞர்களுக்கும் அவரை பிடிக்கும். 
ஒவ்வொரு மாதமும் ஏதாவது ஒரு தலைப்பில் சொற்பொழிவாற்றுவார். அன்றொரு நாள் மாலை பொழுது கடைவீதியில் மக்கள் கூட்டம் அலைமோதியது. அவர் சொற்பொழிவை மக்கள் ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டிருந்தனர். “உறவுகளை பேணுவது குறித்தும், அண்டை வீட்டாருடன் எப்படி நடந்து கொள்வது” அந்த உரை இருந்தது.
“உங்களிடையே அன்பையும், கருணையையும் அல்லாஹ் தோற்றுவித்தான்” எதற்காக உங்கள் உறவினர்களிடமும், அண்டை வீட்டாரிடம் செயல்படுத்துவதற்காக. அப்போதுதான் அல்லாஹ் உங்கள் மீது அன்பை பொழிவான், உங்கள் மீது கருணை காட்டுவான்.
“அண்டை வீட்டார் பசியோடு இருக்க, நீங்கள் மட்டும் உண்பது இறை நம்பிக்கை ஆகாது”. என பல குரான், ஹதீஸ் மேற்கோள் காட்டி பேசினார். அந்த சொற்பொழிவு சிறப்பாக இருந்ததாக அங்கு வந்த பலர் பாராட்டினர். அதில் குறிப்பாக காசிம் பாய் அவரை சந்தித்து “உங்கள் பேச்சு அற்புதம். இந்த மக்களுக்கு நல்ல அறிவுரை கூறியுள்ளீர்கள்”. என்றார்.
வீட்டிற்கு வந்தும்கூட அதைபற்றியே சிந்தித்தார். மனைவி கதீஜா “என்னங்க என்னமோ யோசிக்கிறமாதிரி இருக்கு”.
“இல்ல கதீஜா. இன்னிக்கு கடைவீதியில ஒரு பயான் நடந்திச்சி. அதில உறவினர்களிடமும், அண்டை வீட்டார்களிடமும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து அருமையாக ஒருவர் பேசினார். கூட்டத்தில் இருந்தவர்களும் அவருடைய பேச்சை வரவேற்றனர்.
“அதுக்கென்ன, யோசிக்கிறீங்க”.
“எனக்கு என்ன சந்தேகன்னா, மக்கள் இந்தமாதிரி சொற்பொழிவுகளை வரவேற்கிறாங்க. நல்ல கூட்டம். ஆனா ஏன் அதன்படி நடக்க மாட்டேங்கிறாங்க”. அதபத்திதான் யோசிச்சிட்டு இருந்தேன்.
“சரி வாங்க சாப்பிடலாம்” என்றாள் கதீஜா.
அதன்பிறகு காசிமும், யாகூப்பும் அடிக்கடி சந்தித்து பேசிக்கொள்வார்கள். யாகூப்பின் வீட்டின் அருகில்தான் காசிமுடைய நண்பர் முஸ்தபா வாடகை வீட்டில் தங்கிருந்தார். முஸ்தபா ஒரு ஏழை. டீ கடையில் வேலை செய்கிறார். அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள், ஒரு பையன். அவன் பெயர் சலீம் ஏழாம் வகுப்பு படிக்கிறான். மாலை நேரங்களில் தந்தையுடன் டீ கடையில் வேலைபார்ப்பான்.
காசிமுடைய வீட்டிற்கு முஸ்தபா பல தடவை சென்று வருவார். வேறு எதற்கு உதவி கேட்கத்தான். காசிமும் முஸ்தபாவின் நிலை அறிந்து உதவுவார். அதேபோல அன்று காலை காசிம் வீட்டில் சாப்பிட்டுவிட்டு வெளியே செல்வதற்காக தயாராகி கொண்டிருந்தார். அப்போது முஸ்தபா அங்கே வந்தார். “காசிம் பாய் ஒரு உதவி. ஒரு ஆயிரம் ரூபாய் தேவைப்படுது. பையனுக்கு ஸ்கூல் பீஸ் கட்டனும்’. காசிமும் எப்போதும்போல் அவர் கேட்ட பணத்தை கொடுத்தார். அப்போதுதான் அவருக்கு யாகூப் நினைவு வந்தது.
“முஸ்தபா உனக்கு ஒரு ஐடியா சொல்லட்டும்மா” என்ன பாய் என்றார் முஸ்தபா. “உன் வீட்டுக்கு பக்கத்துல்ல யாகூப் இருக்கார்ல. அவர பார்த்தா நல்ல மனிதர் போல தெரிது. அவர் ஒருதடவ அண்டை வீட்டார்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும் என்று பயான் பண்ணினார். சிறப்பாக இருந்தது அவரிடம் உன் நிலைமையை சொல்லி உதவி கேட்காலாமே?”
“அதை ஏன் கேட்குறிங்க பாய். அவரிடமும் பலமுறை என்னுடைய கஷ்டத்திற்கு உதவி கேட்டுள்ளேன். அதற்கு ஒரு தடவைகூட அவர் எனக்கு உதவில்லை”. என்றார் முஸ்தபா.
“எங்கள் வீட்டில் பல நாட்கள் நாங்கள் சாப்பிடாமல் இருந்துள்ளோம். ஆனால் அவர் வீட்டில் அடிக்கடி விருந்து நடக்கும். அவர்கள் நடத்தும் பல கூட்டங்களுக்கு அவர் வீட்டிலிருந்துதான் சாப்பாடு போகும். ஆனால் என்ன செய்வது அந்த சாப்பாட்டின் மீதி கூட எங்களுக்கு கிடைக்கவில்லை”. என்று விரக்தியுடன் சொல்லி,
ஒருமுறை என்பையன் படிப்பிற்கு யாகூபிடம் உதவி கோரியபோது,
“நீ ஏம்பா அந்த ஸ்கூல்ல படிக்க வைக்கிற”. கவர்மென்ட் ஸ்கூல்ல படிக்க வைக்கலாம்ல. என்னிடம் இப்போது பணம் இல்லை. பிறகு பார்க்கலாம்” என்று சொல்லிவிட்டார். அதன் பிறகு நான் அவரிடம் உதவி கேட்பதில்லை.
“என்ன முஸ்தபா, யாகூப் இப்படிபட்டவரா? நான் கூட அவரை நல்ல மனிதர் என்றல்லவா நினைத்தேன். அவர் பயானை கேட்டதற்கு பிறகு அவ்வளவு அற்புதமான பேச்சை ஏன் மக்கள் செயல்படுத்த வில்லை” என்று நான்கூட பல நேரம் சிந்தித்துருக்கிறேன்.
“அதற்கு இப்போதுதான் விடை கிடைத்துள்ளது. இஸ்லாம் என்பது சொல்லும், செயலும் இணைந்ததுதான். ஆனால் இங்கு பல பேர், இஸ்லாத்தின் மாண்புகளை, சிறப்புகளை பேசுகிறார்கள். அதன்படி செயல்பட மறுக்கிறார்கள். அதனால் தான் இன்று பல இடங்களிலும் இஸ்லாமிய சொற்பொழிவுகள் நடந்தாலும், மக்கள் என்னவோ இஸ்லாத்திற்குள் இன்னும் வர மறுக்கிறார்கள்”
“சரி முஸ்தபா பாப்போம், எனக்கு கொஞ்சம் வேல இருக்கு. நான் கிளம்புறேன்”.
“எனக்கு உதவி செஞ்சதுக்கு ரொம்ப நன்றி பாய்”. என இரண்டு கிளம்பினார்கள்…

- வி.களத்தூர் பாரூக்

1 கருத்து: