தமிழகத்தில், மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்’ என, அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள், முதல்வர் ஜெயலலிதாவை வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கோவை மாவட்டத்தில், பள்ளி மாணவி ஒருவர், மது அருந்தி விட்டு, நடு ரோட்டில் ரகளை செய்த விவகாரம், தமிழக மக்களிடம் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. அதேபோல், திருவண்ணாமலை மாவட்டத்தில், மூன்று வயது சிறுவனுக்கு இளைஞர் ஒருவர் பால் கொடுப்பது போல, மதுவை ஊற்றி கொடுத்த சம்பவமும் பொதுமக்கள் மனதை பதை பதைக்க வைத்தது.
இந்நிலையில், தி.மு.க., தலைவர் கருணாநிதியின், சென்னை கோபாலபுரம் இல்லத்தில், நேற்று மாலை கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை அவர் சந்தித்தார்: தமிழகத்தில், தற்போது மதுவிலக்கு அமலில் இல்லாததால், ஏழை, எளிய விவசாய பெருங்குடி மக்கள், தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள், மனம் போன போக்கில் மது அருந்தி, நுாற்றுக்கணக்கில் உயிர்ப்பலி ஆகின்றனர்.இந்த கொடுமைக்கும், கொடூர பழக்கத்திற்கும் ஆண்கள் மட்டுமின்றி, பெண்களும், பச்சிளம் குழந்தைகளும் பலியாகின்றனர் என்ற செய்திகளும் தொடர்ந்து வருகின்றன.அதனால், மீண்டும் மதுவிலக்கு சட்டத்தை அமல்படுத்தினால், என்ன என்ற கேள்வி எழத்தான் செய்கிறது. எனவே, தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்தால், சமுதாய மாற்றத்திற்கும், ஏற்றத்திற்கும் வழி வகுக்கும் வகையில், மதுவிலக்கை அமல்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக