வியாபம் ஊழலில் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் மற்றும் பாஜக அமைச்சர்கள் சிக்குகின்றனர். ஊழல் பணம் பங்கு போட்டுக் கொடுக்கப்பட்டுள்ளதை என்டிடிவி செய்தி நிறுவனம் அம்பலப்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச தேர்வாணையத்தின் ஊழலில் ஆர்எஸ்எஸ் புள்ளிகள், அமைச்சர்கள் பெரிய அளவில் சிக்கியுள்ளனர். பெரிய பெரிய புள்ளிகளுக்குப் பணம் பட்டுவாடா திட்டமிட்ட வகையில் நடைபெற்றுள்ளது. என்டிடிவி நிறுவனம் விலாவாரியாக அம்பலப்படுத்தியுள்ளது.
வியாபம் ஊழலில் முக்கியக் குற்றவாளியான சுதிர்சர்மா என்பவரிடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் இணைச்செயலாளர் சுரேஷ் சோனி, பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்தரப் பிரதான் மற்றும் பாஜக எம்பி அணில் தவான் போன்றோர் ஊழல் பணத்தை பங்கிட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. வியாபம் குற்றவாளிகள் பட்டியலில் உள்ள மாநில கல்வியமைச்சர் லஷ்மிகாந்த் சர்மா, 2003 முதல் 2013 வரை பதவி வகித்தார். இவருக்கு முன்பு சிவ்ராஜ்சிங் சவுகான் கல்வியமைச்சராக இருந்தார். தன்னுடைய நெருங்கிய நண்பரான லஷ்மிகாந்த் சர்மாவிற்கு 2003 ஆம் ஆண்டு தான் வகித்த கல்வியமைச்சர் பதவியை வழங்கினார்.
லஷ்மிகாந்த் சர்மா பதவியேற்ற உடன் தனது நண்பரான சுதிர் சர்மாவை மாநில கல்வித்துறை சிறப்பு இயக்குநராக பதவி நியமனம் செய்தார். சாதாரண தனியார் பயிற்சி கல்லூரி ஒன்றில் பகுதி நேர ஆசிரியராக பணி புரிந்து வந்த சுதிர் சர்மாவிற்கு இந்தப் பதவியை தருவதற்கு இதர பாஜக அமைச்சர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால் முதல்வராக இருந்த சிவ்ராஜ் சிங் சவுகான் இவர் விவகாரத்தில் தலையிடவில்லை.
மிதிவண்டிக்காரர் ரூ.4000 கோடி குவித்தது எப்படி?
2001 ஆம் ஆண்டு மிதிவண்டியில் சென்று கொண்டு இருந்த சுதிர் சர்மா 2007 ஆம் ஆண்டு ரூ.4000 கோடிக்கு அதிபதியானார். லஷ்மிகாந்த் சுதிர் சர்மா ஆகியோர் ஒரு தலைமைக்குக் கட்டுப்பட்டு தங்களது ஊழல் பணியை சிறப்பாக செய்து வந்தனர். வியாபம் மூலம் வரும் வருமானத்தை சரியான முறையில் பங்கிட்டுக் கொடுக்க சுதிர் சர்மாவை நியமித்தது ம.பி. அரசு. சுதிர் சர்மா மத்தியப் பிரதேச கல்வித்துறை சிறப்பு இயக்குநராக இருந்தபோதும் வியாபம் என்ற மத்தியப் பிரதேச தேர்வு ஆணையத்திலும் முழு அதிகாரம் செலுத்தினார். ஆணையம் முழுவதும் இவரது கட்டுப்பாட்டில் இயங்கியது.
சுதிர் சர்மா ஆர்எஸ்எஸ் அமைப்பின் முக்கிய பொறுப்பில் உள்ளவர். அவர் ஆர்எஸ்எஸ் மபி சிக்சாமண்டல் என்ற பிரிவில் உயர் பொறுப்பை வகித்து வந்தார். மேலும் ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு பெருமளவில் நிதியை மாதம் ஒருமுறை தொடர்ந்து வழங்கி வந்தார். இந்தப்பதவியை வகித்துக் கொண்டே அவர் சுரங்க ஒப்பந்தங்களையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தார். இதன் மூலம் மாதாமாதம் பல கோடிகளுக்கு அதிபதியானார். 2011 முதல் வியாபம் தேர்வு தலைமை இயக்குநராகவும் பதவி வகித்தார்.
2013 ஆம் ஆண்டு மத்தியப் பிரதேச தேர்வு வாரியத்தின் துணை இயக்குநர் பங்கஜ் திரிவேதி என்பவர் மீது கொலைவழக்கு பதிவு செய்யப்பட்டு அவரது வீட்டில் சோதனை நடைபெற்றது. அப்போது பல ஆவணங்கள் கிடைத்தன. அந்த ஆவணங்களை ஆய்வு செய்தபோது கல்வியமைச்சர் லஷ்மிகாந்த் சர்மா, சுதிர் சர்மா போன்றோர் பெயர் வெளியாயின. முக்கியமாக வியாபம் ஊழல் தொடர்பான பணம் அனைத்தும் சுதிர் சர்மா மூலம் தான் கைமாறியது தெரியவந்தது. இந்த நிலையில் 2013 தேர்தலில் லஷ்மிகாந்த் சர்மா தோல்வியடைந்தார். தேர்தலில் தோல்வியடைந்தது, லஷ்மிகாந்த் சர்மா வியாபம் ஊழலில் கைதானார்.
இதனை அடுத்து சுதிர் சர்மாவின் அலுவலகம் மற்றும் அவரது வீடுகளில் சிறப்புப் புலன் விசாரணைக் குழுவினர் சோதனை செய்தனர். இதில் அவர் சுமார் ரூ.4000 கோடி அளவில் சொத்து சேர்த்ததும் வியாபம் ஊழலில் முக்கியப் பங்கு வகித்ததும் தெரியவந்தது. இதனடிப்படையில் சுதிர் சர்மாவும் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.
சிக்கிய பிரமுகர்கள் யார்? யார்?
சுதிர் சர்மாவிடம் நடத்திய விசாரணையில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் முக்கிய தலைவர்களின் பெயர்கள் வெளியாகின. சுரேஷ் சோனி, தர்மேந்திரப் பிரதான், பிரமோத் ஜா, விக்ரம் பட் போன்றோர் வியாபம் ஊழலின் முக்கிய பங்கு வகித்ததாக தெரியவந்தது. ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக தலைவர்கள் மத்தியப் பிரதேசம் வருகை தரும்போதெல்லாம் சுதிர் சர்மாவை சந்தித்ததும், ஆர்எஸ்எஸ் அமைப்பிற்குக் கோடிக்கணக்கான மதிப்புள்ள நிலங்களை இலவசமாக கொடுத்ததும் தெரியவந்துள்ளது.
வியாபம் ஊழலின் முக்கிய குற்றவாளி சுதிர் சர்மாவிடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கும் தொடர்பு இருப்பது அம்பலமாகியுள்ளது. வியாபம் ஊழல் பணத்தை தர்மேந்திரப் பிரதானுக்கு ஆதாயம் அளிக்கும் வகையில் சுதிர் சர்மா கொடுத்துள்ளார். அதுபோல், பாஜக துணைத்தலைவர் பிரபாத் ஜா, அவருடைய 2 மகன்கள் ஆகியோருக்கும் பணம் கொடுத்துள்ளார்.
ஆர்எஸ்எஸ் இணைப் பொதுச்செயலாளர் சுரேஷ் சோனி, பாஜக எம்.பி. அனில் தாவே ஆகியோருக்கும் வியாபம் ஊழல் பணத்தை கொடுத்துள்ளார். சுதிர் சர்மாவிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் மூலம் ஆர்எஸ்எஸ் அமைப்பு வியாபம் ஊழலை பல்வேறு பினாமிகள் மூலம் நடத்திவந்ததும் ஊழல் பணத்தை நன்கொடைகள் என்ற பெயரில் பெற்றதும் தெரியவந்துள்ளது. ஊழல்வாதிகளுக்கு விருந்துகொடுத்த பிரதமர் பிரதமராக பதவியேற்றுக்கொண்ட மோடி கடந்த ஆண்டு ஜூலை 28 ஆம் தேதி ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், பொதுச்செயலாளர் சுரேஷ் ஜோஷி, இணைப் பொதுச்செயலாளர்கள் சுரேஷ் சோனி, தத்தாத்ரேயா ஹோஸ்பெல் மற்றும் கிருஷ்ண கோபால் ஆகியோருக்கு விருந்து அளித்தார். அப்போது மக்களவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றிபெற கடினமாக உழைத்த ஆர்எஸ்எஸ் தலைவர்களைப் பாராட்டி நன்றி தெரிவித்தார். இந்த விருந்தில் கலந்துகொண்டவர்களில் வியாபம் ஊழலில் பெரும்பங்கு வகித்த ஆர்எஸ்எஸ் இணைப் பொதுச்செயலாளர் சுரேஷ் சோனியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் பிரச்சாரம் நடந்து கொண்டு இருந்தபோது மே 15, 2014 அன்று மத்தியப் பிரதேசத்தில் உள்ள போபாலில் வியாபம் ஊழல் மூலம் பணம் பெற்ற ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர்களுள் ஒருவராக சுரேஷ் சோனி மற்றும் மபி பாஜக தலைவர்களுள் ஒருவரான அணில் தாவேவை (இவரும் வியாபம் ஊழலில் பங்குவகித்துள்ளனர்) பாஜக தலைவராக இருந்த ராஜ்நாத் சிங் சந்தித்தார். இந்த சந்திப்பை அப்போதைய காங்கிரஸ் தலைவர் திக்விஜய்சிங் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு என்டிடிவி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக