மெலனோமா சருமப் புற்றுநோய் சம்பந்தமாக சர்வதேச அளவில் நடத்தப்பட்டுள்ள இரண்டு ஆய்வுகளில் ஊக்கம் தரும் முடிவுகள் வந்துள்ளதாக புற்றுநோய் சிகிச்சை நிபுணர்கள் கூறுகின்றனர்.
சருமத்தில் ஆரம்பித்து மற்ற உடலுறுப்புகளுக்கு பரவிவிட்ட மெலனோமா புற்றுநோயாளிகளின் ஆயுளை அதிகரிப்பதில் இந்த புதிய மருந்துகள் முன்னேற்றம் கண்டுள்ளன.
ஒருவருடைய நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டே புற்றுநோய் உயிரணுக்களை இலக்குவைத்து தாக்கும் வகையில் Pembrolizumab, Nivolumab ஆகிய இந்த மருத்துகள் வடிவமைக்கப்பட்டிருந்தன.
நோய் எதிர்ப்பு சக்தியால் அடையாளம் காணப்படாமல் இருப்பதற்காக புற்றுநோய் உயிரணுக்கள் பயன்படுத்திக்கொள்கிற இரசாயன மாறுவேடத்தை தடுத்து செயலிழக்கச் செய்து இந்த மருந்துகள் செயலாற்றுகின்றன. மெலனோமா வகை சரும புற்று நோய் முற்றிவிட்டால் அதற்கு சிகிச்சை அளிப்பதென்பது மிகவும் சிரமம். அப்படி பரவியவர்கள் சராசரியாக ஆறு மாதங்கள் மட்டும் உயிர்வாழ முடியும் என்ற நிலை, அண்மைக்காலம் வரையில் இருந்துவந்தது.
Pembrolizumab மருந்தை 411 நோயாளிகளிடம் பரிசோதித்துப் பார்த்ததில், அவர்களில் கிட்டத்தட்ட 70% குறைந்தது ஒரு வருடத்துக்காவது உயிர் பிழைத்திருந்தனர்.
Ipilimumab எனப்படும் நோய் எதிர்ப்பு சக்தி வலுவூட்ட சிகிச்சை முறையுடன் Nivolumab மருந்தை சேர்த்துக் கொடுத்து 53 நோயாளிகளிடம் பரிசோதித்தபோது, அதில் 85% ஒரு ஆண்டைத் தாண்டியும் 79% இரண்டு ஆண்டுகளைத் தாண்டியும் உயிர் பிழைத்திருந்தனர்.
பெரிய அளவில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்புகளின் ஒப்புதல் பெறப்பட்ட பின்னரே இந்த மருந்துகள் பரவலான பயன்பாட்டுக்கு வரும்.
ஆனாலும் இம்மியூனோதெரபி எனப்படும் நோய் எதிர்ப்பு வழியான சிகிச்சை முறை புற்றுநோய் சிகிச்சையில் பெரிய ஊக்கம் தருவதாக இருக்கிறது.
நன்றி நியூஇந்தியா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக