இந்தியா முழுவதும் பொது சிவில் சட்டத்தை கால நிர்ணயம் செய்து அமல்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இது தொடர்பாக மூல்சந்த் குசேரியா என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவை பரிசீலித்த தில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஜி. ரோஹிணி, நீதிபதி ஆஸ்.எஸ். என்ட்லா ஆகியோர் அடங்கிய அமர்வு, “நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்று ஏற்கெனவே அளித்துள்ள தீர்ப்பில் உச்சநீதிமன்றம் ஆலோசனை தெரிவித்திருந்தாலும், இந்த வழக்கில் மனுதாரர் குறிப்பிடுவதைப்போல், அந்த சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று உத்தரவிடவில்லை.
மேலும், குறிப்பிட்ட சட்டத்தை இயற்ற வேண்டும் என்று மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது. ஆகையால், இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.” என்று உத்தரவிட்டனர்.
மூல்சந்த் குசேரியா தாக்கல் செய்திருந்த மனுவில், “1995ஆம் ஆண்டு ‘சரளா முத்கல்’ வழக்கில், நாடு முழுவதும் மத்திய அரசு பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த உச்சநீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. பொது சிவில் சட்டத்தை காலநிர்ணயம் செய்து நிறைவேற்ற மத தலைவர்கள் அல்லது நிபுணர்கள் அடங்கிய குழுக்களை அமைக்க வேண்டும்.” என்று குறிப்பிட்டிருந்தார்.
நன்றி நியூஇந்தியா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக