புயல்களுக்கு பெண் பெயர் சூட்டப்பட்டிருந்தால் அதனை மக்கள் பெரிதும் கண்டுகொள்வதில்லையாம்; ஆனால் அத்தகைய புயல்களால் அதிகம் பேர் உயிரிழந்திருப்பதாகவும் பாதிப்பு அதிகம் ஏற்பட்டுள்ளதாகவும் ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
பெண் பெயர் சூட்டப்பட்ட புயல்களை மக்கள் பிரச்னைக்குரியதாக மனதளவில் கருதுவதில்லை என்றும், அவற்றுக்கு எதிராக சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் மேற்கொள்வதில்லை என்றும் இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு கூறுகிறது. அமெரிக்காவின் அரிஸோனா மாநில பல்கலை, இல்லினாய்ஸ் பல்கலை ஆகியவை இணைந்து கடந்த 6 தலைமுறைகளாக வந்த புயல்களை ஆய்வு மேற்கொண்டது. 1950ல் இருந்து 2012 வரை வந்த புயல்களுக்கு பாலின ரீதியாக சூட்டப்பட்ட பெயர்களை வைத்து, ஆய்வு மேற்கொண்டது.
47 மிக மோசமான புயல்களில், பெண் பெயர் சூட்டப்பட்ட புயல்களால் உயிரிழப்பு அதிகம் ஏற்பட்டிருக்கிறது. சராசரியாக 45 பேர் இவற்றில் உயிரிழந்திருக்கின்றனர். அதே நேரம் ஆண் பெயர் சூட்டப்பட்ட புயல்களால் சராசரியாக 23 பேர் உயிரிழந்துள்ளனராம். இந்த ஆய்வில் கத்ரினா, ஆட்ரெ புயல்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லையாம்.
இந்த ஆய்வு மாதிரி கூறும் ஆலோசனை, மிக மோசமான புயலின் பெயரை சார்லி என்பதிலிருந்து எலாய்ஸ் என மாற்றம் செய்தால் அதனால் ஏற்படும் உயிரிழப்பு மூன்று மடங்காக இருக்கும் என்கிறது. பெண் என்றால், மென்மையான அணுகுமுறையுடன் கூடிய அலட்சிய மனோபாவம்தான் இத்தகைய கூடுதல் அழிவுக்குக் காரணமாம். மேலும், புயலுக்குப் பெண் பெயர்களை வைத்தால் அதனால் அழிவும் அதிகம் ஏற்படுகிறது என்கிறார்கள் இந்த அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள்.
ஆண் பெயர்களை புயலுக்கு வைக்கும்போது, அந்தப் பெயர்களின் அச்சவுணர்வு காரணமாக அதிக முன்னெச்செரிக்கையை மக்கள் எடுத்துக் கொள்கிறார்களாம். ஆனால் பெண் பெயர்களை வைக்கும்போது அவ்வளவு அச்ச உணர்வை அது மக்கள் மனதில் ஏற்படுத்துவதில்லையாம்! எனவே, குறைந்த அளவு முன்னெச்சரிக்கையையே மக்கள் எடுத்துக் கொள்கிறார்கள் என்றும் இந்த ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இத்தகைய மனோபாவத்தை மாற்றி, எத்தகைய புயலின் விளைவையும் சந்திக்கத் தயார் நிலையில் இருந்தால் பிரச்னை இல்லை என்று கூறும் ஆய்வாளர்கள், புயல் மற்றும் சூறாவளிகளுக்கு பெயர் சூட்டும் முறையில் மாற்றம் வேண்டும் என்றும் கூறுகிறார்கள்.
இந்த ஆய்வு முடிவுகளை வைத்து, பெயர் எத்தகையது என்று பார்க்காமல், ஒவ்வொரு புயலும் எந்த அளவுக்கு அச்சுறுத்தலைத் தோற்றுவிக்கிறது என்பதை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும், முன்னெச்சரிக்கையுடன் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அமெரிக்க தேசிய புயல் தடுப்பு மையம் அறிவுரை கூறியுள்ளது.
நன்றி தூது ஆன்லைன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக