டிரைவர் செல்போன் பேச்சால் மினி பஸ் கவிழ்ந்து புதுப்பெண் பரிதாப பலி: 10 பேர் படுகாயம் ஆம்புலன்ஸை சிறை பிடித்து போராட்டம்
பெரம்பலூர், : குன்னம் அருகே மினி பஸ் கவிழ்ந்து புதுப்பெண் பலியானார். இதில் 10 பேர் படுகாயமடைந்தனர். டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மீட்பு பணிக்காக வந்த ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனத்தை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகேயுள்ள வேப்பூர் கிராமத்திலிருந்து மினி பஸ் ஒன்று லப்பைக்குடிக்காடுக்கு நேற்று மதியம் 3.30 மணியளவில், 35க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. நன்னை- மண்டபம் கிராமங்களுக்கிடையே சின்னாறு ஓடை பாலமருகே சென்றபோது பஸ் டிரைவரின் செல்போன் ஒலித்தது. இதையடுத்து செல்போனில் பேசியபடி டிரைவர் பஸ்சை இயக்கினார். அப்போது பஸ் ஒரு பள்ளத்தில் ஏறி இறங்கியது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மினி பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் வடக்களூர் கிராமம் காலனித்தெருவைச் சேர்ந்த பூமிநாதன் என்பவரின் மனைவி தெய்வக்கன்னி (26), என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இவருக்கு கடந்த 2 மாதத்திற்கு முன்னர்தான் திருமணம் நடைபெற்றது. மேலும் இந்த விபத்தில் சாத்தநந்தம் கிராமத்தை சேர்ந்த முருகேசன் மனைவி அஞ்சுகம்(26) உட்பட 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இதனிடையே பஸ் விபத்துக்குள்ளானதும் பஸ் டிரைவர் சோலைராஜ்(25) மற்றும் கண்டக்டர் புதுவேட்டக்குடியை சேர்ந்த பிரபு(22) ஆகியோர் தப்பியோடினர். விபத்து குறித்து தகவலறிந்த குன்னம் போலீசார் காயமடைந்தவர்களை மீட்க 108 ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு உள்ளிட்ட வாகனங்களுடன் சம்பவ இடம் வந்தனர். அங்கிருந்த தெய்வக்கன்னி உறவினர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் மீட்பு 108 ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனத்தை சிறைபிடித்தனர். மேலும் நீண்ட நாட்களாக சாலையோரம் உள்ள பாதுகாப்பற்ற பள்ளத்தை செப்பனிட்டு தரக்கோரி பல மாதங்களாக முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததால் தான் இதுபோன்ற விபத்துகள் நடப்பதாகவும்.
விபத்து ஏற்படுத்திய பஸ் டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியும், சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதனால் வேப்பூர் -லப்பைக்குடிக்காடு தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த பெரம்பலூர் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி சந்திரமோகன், குன்னம் தாசில்தார் மணிவேலன் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் பிரகாஷ், சிவசுப்ரமணியம் உள்ளிட்ட போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
குறிப்பு இந்த பெண் நமதூரில் உள்ள சன் டிஜிட்டலில் வேலை பார்த்து வந்தது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக