“இன்னதைச் செய் மற்றும் இன்னதைச் செய்யாதே என்று உரைக்கும் அதிகாரமும் அதனை மீறுகிற எவரையும் தண்டிக்கிற அதிகாரமுமே சட்டம்” என சட்டத்தை சுருக்கி வரையறை செய்திடலாம். இச் சட்டம்தான், ஆட்சியாளர்கள் முதல் அன்றாடம் காய்ச்சிகள் வரை அனைவரிடமிருந்தும் நீதியையும் , உரிமையையும் அனைத்து மக்களுக்கும் பெற்றுத் தந்திட திறம்பட வழிவகுக்கிறது. இவ்வாறான சட்டங்களை, மக்கள் நலனை மட்டுமே முன்னிறுத்தி வரையப்பட்டதுதான் நமது இந்திய அரசியலமைப்பு, ஆட்சியியல் சட்டமும் மற்ற சட்டங்களும்.
ஆனால் கார்பொரேட்களின் உபயத்தில் கரை சேர்ந்த மோடி தலைமையிலான அரசு, அவர்களுக்கு பணி செய்வதை மட்டுமே தன் முதற்கண் சேவையாக மட்டுமல்ல, முற்றிலுமான சேவையாய் வைத்துள்ளது. அடிமைச் சேவகம் புரிவதற்கான சட்டங்களை இயற்றுவதில் மட்டுமே ஆர்வம் காட்டி வருகிறது. இந்நாட்டின் வளங்களை அந்நியர்களுக்கு தாரை வார்ப்பதிலும், இந்நாட்டு முதலைகளுக்கு… ஸாரி முதலாளிகளுக்கு தாரை வார்ப்பதிலும், முந்தைய காங்கிரஸ் அரசுக்கு சற்றும் சளைத்தவர்களல்ல தாங்கள் என்பதை மணிக்கொரு முறை நிரூபிக்கின்றது மங்குனி அமைச்சர்கள் கூட்டம்!
மே 26, 2014 நரேந்திர மோடி தலைமையிலான அரசு செயல்படத் தொடங்கியது முதல் ஜனவரி 20 , 2015 வரை , 225 நாட்களில் 8 முறை அவசரச் சட்டங்கள் பிறப்பித்துள்ளது முதாலாளிகள் நலன் காக்கும் மோடி தலைமையிலான மத்திய அரசு.
இந்தியாவில் அதிகமான அவசரச் சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டது இந்திராகாந்தி ஆட்சிக் காலத்தில் தான். அவர் 5825 நாட்களில் 208 முறை அவசர சட்டத்தை பிறப்பித்தார். சராசரியாக 28 நாட்களுக்கு ஒருமுறை ஒரு அவசரச் சட்டம். திருவாளர் மோடி அதே வேகத்தை 225 நாட்களில் எட்டிப் பிடித்து அசுர சாதனை செய்துள்ளார். ஆம் சராசரியாக 28 நாட்களுக்கு ஒருமுறை மோடியும் ஒரு அவசரச் சட்டத்தை பிறப்பித்துள்ளார்.
சட்டத்தை இயற்றுவதில் ஏன் இந்த அவசரம்? மக்களுக்கு நன்மை புரிய அவ்வளவு ஆர்வமா நம்மை ஆள்பவர்களுக்கு? ஐயகோ…மெய் சிலிர்க்கிறதே! என்று அவசரப்பட்டு வசனத்தை விட்டு வார்த்தைகளை வீணாக்கிவிடாதீர்கள்!! இவர்களது அவசரச் சட்டங்களெல்லாம் 120 கோடி மக்களில் 100 பேருக்கு மட்டுமே சாதகமாக இருக்கும் என்பதை, அரங்கேறியிருக்கும் சட்டங்களை பார்த்தால் அக்கணமே புரிந்துவிடும்.
காப்பீட்டுத்துறையில் அந்நிய முதலீட்டு வரம்பை 26% சதவிகிதத்தில் இருந்து 49% அதிகரிப்பதற்கும், மருத்துவ உபகரணங்கள் உற்பத்தித்துறையில் 100 சதவீத அந்நிய முதலீட்டை அனுமதிப்பதற்கும், நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் பெரும் முதலாளிகளுக்கு ஆதரவாக திருத்தங்கள் கொண்டு வருவதற்கும், முறைகேடு காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலக்கரி சுரங்கங்களை மீண்டும் முதலாளிகளுக்கு ஏலம் விடவும் அவசரச்சட்டங்கள் மோடி அமைச்சரவையினால் கொண்டுவரப்பட்டுள்ளன.
மக்களவையில் அசுர பலத்தோடு அமர்ந்திருந்தாலும், மாநிலங்களவையில் அமைதியாகத்தான் உட்கார வேண்டிய பரிதாபகர நிலையில் பாஜக கூட்டணி உள்ளது. 245 உறுப்பினர்களைக் கொண்ட மாநிலங்களவையில் அக்கூட்டனிக்கு ஆதரவான உறுப்பினர்கள் 57 மட்டுமே!. எனவே போதிய பெரும்பான்மை இல்லாததால், அவசரச்சட்டம் எனும் பின்வாசல் வழியை பின்பற்றி எஜமானர்களுக்கு சேவை புரிந்து வருகிறது மோடி அரசு .
சட்டங்கள் அனுப்பப்பட்டால் சட்டைப்பையிலுள்ள பேனாவை எடுத்து ஒப்பமிடும் ஜனாதிபதியே மோடி அரசின் அணுகுமுறையால் கொதித்து விட்டார் போலும்!. “அசாதாரணமான சூழ்நிலையில், அசாதாரணமான முறையில் கொண்டுவரப்படுபவதே அவசரச்சட்டம் ஆகும். சாதாரண நடைமுறைகள் மூலம் நிறை வேற்றப்படவேண்டிய சட்டங்களை அவசரச்சட்டம் மூலம் நிறைவேற்றுவது உரிய நடைமுறையல்ல” என்று மோடி அரசுக்கு அறிவுரை வழங்கி இருக்கிறார் நம் முதல் குடிமகன் பிரணாப் முகர்ஜி.
அவசரச் சட்டம் என்பது இந்திய நாடாளுமன்றம், மாநில சட்டமன்றங்கள் நடைபெறாத நேரங்களில் குடியரசுத் தலைவராலோ அல்லது மாநில ஆளுநராலோ பிறப்பிக்கப்படும் சட்டமாகும். இச்சட்டங்கள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களால் பிறப்பிக்கப்படும் சட்டத்தைப் போன்றவை. ஆனால் இச்சட்டங்களுக்கு 6 வாரத்திற்குள் அல்லது 60 நட்களுக்குள் நாடாளுமன்றம் அல்லது மாநில சட்டமன்றங்களின் ஏற்பைப் பெற வேண்டும்.
எனவேதான் கொண்டு வந்த சட்டங்களின் ஆயுள் காலத்தை நீட்டிக்க, காங்கிரஸ் காலையும் பிடிக்க தயாராகிவிட்டனர் மோடி அண்ட் கோ ! அதன் வெளிப்பாடுதான் “நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் சுமுகமாக நடந்திட எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு நல்கிடவேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்திருப்பதும்,சோனியா காந்தியை அவர் இல்லத்திலேயே வெங்கைய்யா நாயுடு சந்தித்து இருப்பதும் எனலாம்.
(லாலு – முலாயம் இல்ல திருமண விழாவில் மோடி பங்கேற்பதை தயவு செய்து வாசகர்கள் இதனோடு முடிச்சு போட்டு பார்க்க வேண்டாம்…. அதெல்லாம் அரசியல் நாகரீகம்ணா…!)
“மக்களுக்கு உதவாத மசோதாக்கள், அவசர சட்டங்களுக்கு காங்கிரஸ் ஆதரவு தராது” என்று தெரிவித்திருக்கிறார் மாநிலங்களவை எதிர்க்கட்சித்தலைவர் குலாம் நபி ஆசாத். “பிரிட்டிஷ் ஆட்சியின்போது இருந்ததைவிட பலவகைகளில் மோசமானது என்ற அளவுக்கு தற்போதைய அரசு நில சட்டத்தை மாற்றுகிறது. இதை எதிர்த்துப்போராடுவோம்” என்று தெரிவித்திருக்கிறார் ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ். “நில அவசர சட்டத்தை புதிய சட்டமாக மாற்றும் மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வுக்கு உட்படுத்த மாறுதல்கள் பற்றி பரிசீலிக்கவண்டும்” என தெரிவித்துள்ளார் இந்திய தேசிய லோக் தளம் கட்சித் தலைவர் துஷ்யந்த் சவுதாலா.
நிலம் கையகப்படுத்தல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரும் அரசின் முயற்சிக்கு முட்டுக்கட்டை போட தயாராக இருப்பதை தெரிவிக்கும் கட்சிகள், அந்நிய முதலீடுகள் குறித்து சிறிது கூட வாய் திறக்கவில்லை என்பது வேதனையான மற்றுமொரு விஷயம்.
பின்வாசல் வழியாக சட்டங்கள் அரங்கேறுவதை, அன்னியர்களுக்காகவும், அம்பானிகளுக்காகவும் ஆதரித்தால் , நாடாளுமன்ற ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்படும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. எனவே எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பும், மக்களின் எதிர்ப்பும், ‘அதிகாரத் தொனியில் அரங்கேறும் அவசரச் சட்டங்களை’ எதிர்த்து ஓங்கி ஒலிக்கும்போது தான் ஜனநாயகம் தழைத்தோங்கும்!
நம் எதிர்ப்பு ஓங்கி ஒலிக்கட்டும்!!!
நன்றி தூது ஆன்லைன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக