புத்தகக் கண்காட்சி களை கட்டி கோடிக்கு மேலாக விற்பனையிலும் வியாபாரத்திலும் விறுவிறுப்பபடைந்து அமைதி காக்கும் சூழலில் வாங்கிய புத்தகங்கள் நம் கரம் பற்றி இதயம் தழுவ நம்மை அழைப்பதை உங்களால் உணர முடிகிறதா…?
ஆம் எனில் புத்தகத்தின் காதலை கரம் பற்றி ஏற்க நாமும் தயாராவோம்.
“வாசிப்பு” என்பதன் பொருளையும், அதன் இனிமையையும் எழுத்தால் எழுதி மாளாது. வாசிப்பை நண்பனாக பாவித்து பார்ப்பவர்களுக்கு அவை நண்பனாக தோள் சாய்ந்திடும். அறிவு மலர ஆணையிடும். மகிழ்ச்சியின் தருணத்தில் முகிழ்ந்திடும். கவலையின் கண்களுக்கு அமைதி தரும் என ஓராயிரம் பலன்கள் உண்டு. வாசிப்பு உங்களிடம் உரையாடத் துவங்கும், பின் கேள்விக் கணைகளை தொடுக்கும், நீங்கள் அறிவு ஆயுதம் ஏந்தினால் வாசிப்பு உங்களை வானை நோக்கி உயர்த்தும். இலட்சோப இலட்சம் மக்கள் சங்கமித்து தற்பொழுது அமைதியை நம்மிடையே ஒப்படைத்துவிட்ட புத்தகத் திருவிழாவிற்கு பின் நாமெல்லாம் வாசிப்பின் வரலாற்றையும் தெரிந்து கொள்ள ஆயத்தமாகும் தருணம் இது.
1400 வருடங்களுக்கு முன்பு கவிதைகளால் இலயித்தும், இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டும் இருந்த காலகட்டத்தில் இலக்கிய நயத்தோடு, குறைஷிகளின் மனதில் குடிகொண்டிருந்த அறியாமை கதவை தகர்த்தெறிந்தது அல்-குர்ஆன். ஸஹாபாக்களது வாழ்வினில் குர்ஆன் வசனங்கள் ஒவ்வொன்றும் அதிர்வையும், தாக்கத்தையும் ஏற்படுத்தின. உமரிடையே குர்ஆன் அவர் ஆழ்மனதில் எழும்பிய கேள்விகளுக்கு விடைகளால் வியப்பூட்டியது. வாசிப்பின் அடிப்படை அளவுகோல் அவை நம்மிடம் உரையாட வேண்டும் என்பதே! அல்குர்ஆனோ நண்பனைப் போல உரையாடியது.
அவை பலரிடம் பேசியது, சிந்திக்கமாட்டீர்களா? அறியமாட்டீர்களா? கவனிக்க வேண்டாமா? போன்ற பல்வேறு கேள்விகளை முன்வைத்து, அமைதிக்கு பகரமான சிந்தனைப் போரினை துவக்கியது.
அல்குர்ஆனின் வாசிப்பும் அவை ஏற்படுத்திய தாக்கமும் இன்றளவும் அதன் தொடர்ச்சியால் சாதனைகளை புரிந்து வருகின்றன.
இலக்கியத்தில் கேள்வி தொடுத்த மக்களுக்கு அவை இலக்கியத்தால் சூளுரைத்தது. வரலாற்றை அறிய முற்பட்டவர்களுக்கு அவை வரலாற்றினை கற்றுத் தந்தது. இன்றோ அறிவியலால் கேள்விகளை தொடுப்பவர்களுக்கு அவை அறிவியலால் பதில் அளிக்கிறது. அறிவுலகில் புரட்சியை தந்த குர்ஆனையே வாசிப்பின் முதல் அடையாளமாக பார்க்க வேண்டும்.
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள் “டிஸ்கவரி ஆஃப் இந்தியா” என்ற புத்தகத்தில் “ஐரோப்பா கண்டம் அறியாமை எனும் இருளில் மூழ்கியபோது, அதற்கு ஒளி வீசிய பெருமை பாக்தாதில் உள்ள அந்நூர் பல்கலைக்கழகத்திற்கு உண்டு” என்கிறார்.
அரேபியா தொடங்கி ஆசியா வரை இன்றும் இஸ்லாமும், குர்ஆனும் அறியாமை இருளை அகற்றி சமத்துவத்தை விதைத்து கொண்டிருக்கிறது. எனவேதான் அறியாமைக்கு ஆதரவான வர்க்கம் இஸ்லாத்திற்கு எதிரான போரை நடத்தி ஈராக்கை கைப்பற்றிய போது பொன்னையும், வைடூரியங்களையும் கொள்ளையிட அதிக ஆர்வம் காட்டியதற்கு பதிலாய் பாக்தாத் பல்கலைக்கழக நூலகத்தின் பொக்கிஷங்களான புத்தகங்களை கொள்ளையிட்டனர். தேவையானவற்றை தங்கள் கூடாரத்திற்குள் பாதுகாப்பாய் தாழிட்டார்கள். தங்களுக்கு வேண்டாதவற்றை டைக்ரிஸ் ஆற்றில் எறிந்தார்கள். ஒரு வருடத்திற்கு மேலாய் அந்த ஆறு புத்தக மையினால் கருப்பாக ஓடியதையும், அதற்கு பின்பாக முஸ்லிம்களின் அறிவு தளத்தில் நீண்ட தேக்க நிலை ஏற்பட்டதையும் வரலாற்றின் மூலம் காண்கிறோம்.
சரி… விடயத்திற்கு வருவோம். வாசிப்பின் மூலம் அறிவு சார்ந்த விடயங்களுக்கான பயணத்தில் நம்மை அழைத்து செல்ல அவை காத்திருக்கின்றன. அவை நம்மைச் சார்ந்து இயங்குபவற்றின் நகர்தலை துல்லியமாக நம்மிடையே பதிவு செய்கின்றன. வாசிப்பின் மிக முக்கியமான அம்சத்தைப் பற்றி பேசியே தீர வேண்டும். வாசிப்பு உணர்வுகள் சார்ந்தவையும் கூட. பலரது உணர்வுகளை அல்லது நம்மால் அறியப்படாத நாம் சார்ந்த உணர்வுகளையும் அவை வெளிக்கொணரும் தன்மையுடையது. கவிதை, இலக்கியம், நாவல் என உணர்வுகளை பிரதிபலிக்கும் பல்வேறு புத்தகங்கள் உணர்வுப்பூர்வமான தேடலை உறுதி செய்கின்றன. இதனை உணர்வு சார்ந்த அறிவு (Emotional Intelligence) என உளவியலாளர்கள் வரையறுக்கின்றனர். நாம் அதிகம் நேசிக்கும் உயிர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளும் திறவுகோலாக வாசிப்பு உள்ளது.
இன்றைய துடிப்பான இளைய சமூகம் வெவ்வேறு தளங்களில் பொதுநலன் சார்ந்தோ, சுயநலன் சார்ந்தோ இயங்குவதை காண முடிகிறது. தொழில்நுட்ப உலகில் தங்களால் இயன்ற சேவை, களப்பணி என குறைந்தபட்ச வாய்ப்பினை வகுத்து சமூக களத்தில் துளிர்விட துவங்கும் இத்தகையவர்கள் அறிவுக்கான தேடலை இணையத்தின் வாயிலாக மட்டுமே சுருக்கிக் கொண்டு நடைபயிலுவதை பார்க்கிறோம்.
மாணவர்களின் வீரியமான உரிமை மீட்புப் போராட்டங்கள் அரசியல் பின்புலத்துடனோ அல்லது தன்னார்வத் தலைவர்களின் அரசியல் பிழைப்புக்குப் பின்னாலோ வீணாவதும் தொடர்ந்து நடைபெறுகிறது. இவற்றிற்கெல்லாம் அடிப்படைக் காரணம் வாசிப்பில் மிக நீண்ட இடைவெளி இருக்கிறது என்பதே.
“புத்தகங்கள் இல்லாமல் புரட்சிகள் சாத்தியமில்லை” என்ற சொற்றொடர் இத்தருணத்தில் மிகப் பொருத்தமானதாக இருக்கும். இளைய சமூகம் எவ்வளவுதான் தங்களது சமூக பங்களிப்பை உறுதி செய்ய களமிறங்கினாலும் அதனை ஒழுங்குபடுத்தி நிலைகுலைவை தடுக்கும் மாமருந்தாக “வாசிப்பு” அமையும் என்பதில் ஐயமில்லை.
அடுத்ததாக சமூகத்தின் சரிபாதி அங்கமான பெண்களின் வாசிப்பு குறித்தும் கவலைப்பட வேண்டிய தேவை உள்ளது. “நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்” என்ற சொற்றொடர் ஞாபகத்தில் வருகிறது. குடும்பங்களின் பொறுப்புகளை வகிக்கும் நம் தாய்மார்களின் வாசிப்பு குறித்தும் சற்று கேள்வி எழுப்ப வேண்டியுள்ளது. சமூகத்தின் அறிவு தளத்திற்கு முதற் புள்ளியிடும் குடும்பத்தில் வாசிப்பிற்கான ஊக்குவித்தல் துவங்குமெனில் பல்கலைக்கழகமாக குடும்பங்கள் பரிணமிப்பதில் ஆச்சரியமில்லை.
வாசிப்பு என்பது பலரது ஆழ்மனதின் அமைதிக்கு வழிவகுக்கிறது. போராளிக்கு உத்வேகமாய், அறிவுஜீவிகளின் சிந்தனைக் கொத்தாய், அன்பை தேடுபவர்களுக்கு ஆழமான நேசமாய், பொழுதுபோக்கர்களுக்கு நேரம் கடத்தியாய், அடிமைத்தனத்திற்கான விடுதலையாய், வாசிப்பின் போதையில் மிதப்பவர்களுக்கு கிண்ணம் நிரம்பிய எழுத்து ரசமாய்… இன்னும் இன்னும் எத்தனையோ உணர்வுகளைத் தாங்கி வாசிப்பு அனேகர் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
வாசிப்பின் வாசனையை வர்ணிக்க வார்த்தைகள் போதாது…!
வாசிப்போம்… வாசிப்பில் வாழ்வோம்…!
நன்றி தூது ஆன்லைன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக