– அஷ்ஷெய்க் அக்ரம் அப்துஸ் ஸமத் நளீமி
இஸ்லாமிய தாவாவில் கணவன் மனைவி இருவரும் முக்கிய தலைமைப் பொறுப்புகளில் இருந்து செயலாற்றும் நிலையை தாவாக் களத்தில் பொதுவாக காண முடிகிறது. பல சமயங்களில் தலைமைப் பொறுப்புகளை வகிக்காத போதும் கூட மிகுந்த ஈடுபாடு கொண்டவர்களாக
சமகாலத்தில் இருவரும் காணப்படுகிறார்கள்.
தாவா தனிமனிதர்கள் என்ற நிலையைத் தாண்டி தாவா குடும்பங்கள் தோற்றம் பெற்றிருக்கின்றமை தாவா களத்தில் சந்தோஷம் கொள்ளத்தக்க ஒரு விஷயம் என்றிருந்த போதிலும் இந்நிலை குடும்பக் கட்டமைப்பில் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் குறித்தும் நாம் சிந்திக்க வேண்டியிருக்கிறது. இஸ்லாமிய தாவாவின் வளர்ச்சிப் படிகளில் நாம் கவனம் செலுத்த வேண்டிய மற்றொரு பரப்பாக இது பரிணமித்திருக்கிறது.
தாவாவில் நன்கு அனுபவம் வாய்ந்த பலர் குறித்து அவர்களது மனைவிமார்களிடத்தில் பல முறைப்பாடுகள் இருக்கின்றன. வீட்டுக்கு நேரம் ஒதுக்குவது, மனைவியை கவனிப்பது, பிள்ளைகள் விஷயத்தில் அக்கறை காட்டுவது என்று பல விஷயங்களில் போதாமைகள் இருப்பதாக மனைவிமார்கள் கவலைப்படுகிறார்கள்.
மறுபுறத்தில் கணவன்மாரிடத்திலும் முறைப்பாடுகள் இல்லாமல் இல்லை. மனைவி வீட்டில் இல்லை. அதிகமான நேரங்கள் தொலைபேசியுடன் இருத்தல், ஒரே உணவையே குளிர்சாதனப் பெட்டியில் வைத்து மீண்டும் மீண்டும் சாப்பிடுதல் என்று அவர்களது பட்டியலும் நீண்டு செல்கின்றது.
இது போன்றதொரு நிலை இஸ்லாமிய தாவாவில் ஆரோக்கியமானதல்ல. ஏனெனில், குடும்ப வாழ்வு ஆரோக்கியமாக கட்டியெழுப்பப்படுதல் என்பது கூட இஸ்லாமிய தாவாவின் இலக்குகளில் ஒன்றுதான். சமூக தாவாவுக்காக குடும்ப வாழ்வு விலையாக அமைந்து விடக்கூடாது.
இந்தப் பின்புலத்தில் தாவாக் குடும்பங்கள், அதிலும் குறிப்பாக கணவனும் மனைவியும் கருத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்களை இங்கு தொட்டுச் செல்ல விரும்புகிறேன்.
மனைவிமார்களே! முதலில் உங்களது மனதோடு கொஞ்சம் பேச விரும்புகிறேன். நீங்கள் அல்குர்ஆனில் சூரதுத் தஹ்ரீமை படித்திருப்பீர்கள். அதன் முதல் வசனம் நபியவர்களை நோக்கி கண்டனத் தொனியில் பேசுகிறது. “உங்கள் மனைவிமாரின் திருப்திக்காக நீங்கள் ஏன் அல்லாஹ் ஹலாலாக்கிய ஒரு விஷயத்தை ஹராமாக்கிக் கொள்கிறீர்கள்?” என்று கேட்கிறது.
நபி(ஸல்) அவர்களின் மனைவியர் சிலரின் செயல்பாடுகளின் காரணமாக சில சிக்கல்கள் தோன்றின. நபி(ஸல்) அவர்கள் தம் மனைவியரை தலாக் சொல்லிவிட்டார்கள் என்று கூட செய்தி பரவியது.
இந்த சம்பவத்தால் நபியவர்களது குடும்ப வாழ்வில் அமைதியற்ற ஒரு நிலை தோன்றியது. இந்நிலையில் அல்குர்ஆன் மனைவிமாரை வன்மையாகக் கண்டித்தது. நபியவர்களுடன் நீங்கள் நல்ல முறையில் நடந்து கொள்ளாவிட்டால் நாம் அவர்களுக்கு சிறந்த வேறு பெண்களை திருமணம் செய்து கொடுப்போம் என்று அல்குர்ஆன் கூறியது.
நபியவர்களின் மனைவிமாரை நோக்கிய அல்குர்ஆனின் அந்த கடுமையான கண்டனத்திற்கான காரணம் என்ன? இங்குதான் மனைவிமார் மனதில் கொள்ள வேண்டிய ஒரு முக்கிய உண்மை இருக்கிறது. சமூகத்திற்கு தலைமை தாங்குபவர்களுடைய குடும்ப வாழ்வு அமைதியானதாய்க் காணப்படல் வேண்டும். இந்த உலகில் நபியவர்கள் மேற்கொள்வது மிகப்பெரும் சமூகப் பணி. அந்தப் பணியை அவர்கள் சிறந்த முறையில் மேற்கொள்ள அவர்களது குடும்ப வாழ்வு அமைதி நிறைந்ததாய் இருக்க வேண்டும். இல்லையென்றால் சமூக வழிகாட்டலில் தவறிழைக்க வாய்ப்பிருக்கிறது.
நபியவர்களின் இந்தப் பாத்திரத்தைத்தான் இன்று அதிகமான அழைப்பாளர்கள் வகிக்கிறார்கள். அழைப்பாளர்கள் மாத்திரமின்றி ஒவ்வொரு ஆண்மகனின் நிலையும் இதுதான். ஏதோ ஒரு வகையில் அவன் ஒரு சமூகப் பொறுப்பை மேற்கொள்கின்றவனாகவே காணப்படுகிறான்.
மனைவிமார்களே! தாவா ஒரு கடமை. உங்கள் கணவன் அதனை மிகச் சரியாக மேற்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்களா? சமூகப் பணியில் அவர்களது தீர்மானங்கள் மிகச் சரியாக அமைய வேண்டும் என்று நினைக்கிறீர்களா? உங்கள் கணவரை சாதனையாளராகப் பார்க்க ஆசைப்படுகின்றீர்களா? வீடு அவர்களுக்கு அமைதியளிக்கும் இடமாக இருக்கட்டும். அல்குர்ஆன் குறிப்பிடுவது போல் மனைவியும் பிள்ளைகளும் கண்
குளிர்ச்சியை வழங்கட்டும்.
மனைவிமார்களே! ஒரு விஷயத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அல்லாஹ்வின் படைப்பியலில் வீட்டைப் பற்றிய ஆணுடைய பார்வை என்ன தெரியுமா? வீடு என்பது அவன், ஓய்வெடுப்பதற்குரிய இடம் என்பதுவே ஆணுடைய மனோநிலை. வீடு ஒரு கடமை என்ற மனநிலை பெண்களுக்கு உரியது. அதனால், வீட்டுக்கு வந்தவுடனேயே எல்லாக் கடமைகளையும் இயந்திரம் போல ஆண்கள் செய்வார்கள் என்று எதிர்பார்க்க வேண்டாம்.
வீட்டுக்கு வந்தவுடனேயே அதைச் செய்ய வேண்டும். இதைச் செய்ய வேண்டும் என்ற ஒரு பட்டியலை சமர்ப்பிக்க வேண்டாம். அவர்கள் ஆசுவாசமாய் அமர சந்தர்ப்பம் அளியுங்கள். அவர்களது தேவைகளை நிறைவு செய்து கொடுப்பதற்கு முன்னுரிமை அளியுங்கள்.
ஆண்களை வீட்டு வேலைகளில் ஈடுபடுத்தக்கூடாது என்று கூறவில்லை. ஆனால், அது கட்டளையாகவோ நச்சரிப்பாகவோ அமையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
நபியவர்கள் மனைவிமார் பற்றி கூறிய ஒரு உண்மையை தெரிந்து கொள்ளுங்கள். “இவ்வுலகில் ஒரு மனிதனுக்கு கிடைக்கும் மிகவும் பிரயோசமான சொத்து ஸாலிஹான மனைவியாகும். ஸாலிஹான மனைவி என்பவள், அவளைக் காண்கின்ற போதே சந்தோஷம் ஏற்படும். கணவன் இல்லாத சமயங்களில் தனது கற்பையும், கணவனது செல்வத்தையும் பாதுகாப்பாள்.”
இங்கு மனைவியின் நளினம், கரிசனை, ஒழுக்கம், முகாமைத்துவத்திறன் போன்ற விஷயங்கள் ஸாலிஹான மனைவி என்பதற்கான அடையாளங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன. ‘ஸாலிஹ்’ என்பதன் பொருள் பொறுத்தமானது, உகந்தது என்பதாகும். எனவே, குடும்ப வாழ்வுக்குப் பொறுத்தமான மனைவி எவ்வாறு இருக்க வேண்டும் என்பதையே மேற்சொன்ன ஹதீஸில் நபியவர்கள் சுட்டிக் காட்டினார்கள்.
இங்கு மிக முக்கிய விஷயம் என்னவெனில், கணவன் தனது சமூகப் பணியின் களைப்புகள், கவலைகள் அனைத்தையும் தனது மனைவியை பார்த்தவுடனே மறந்து போய்விட வேண்டும். அத்தகைய ஓர் ஆறுதலாய் அவள் காணப்பட வேண்டும். அவளது நளினம், கரிசனை, புன்னகை, ஆதரவு இவை ஒரு கணவனை அமைதிப்படுத்தக் கூடியவை. சந்தோஷப்படுத்தக் கூடியவை.
மனைவிமார்களே! வீட்டுக்கு வரும் கணவனின் மன அமைதிக்கு உத்தரவாதமளிக்கும் நான்கு விஷயங்களை உங்களுக்கு சொல்கிறேன். என்றைக்கும் இவற்றை மறந்து விடாதீர்கள்.
- கணவனுக்கு பசி ஏற்படுகின்ற போது உணவு தயாராக இருக்க வேண்டும். உணவின் சுவையும் பன்முகப்பட்ட தன்மையும் கூட இங்கு முக்கியமானதுதான். ஏதோ ஒன்றை வைத்து சமாளித்துக் கொள்ளும் அணுகுமுறையை தயவு செய்து தவிர்த்துக் கொள்ளுங்கள்.
- கணவனுக்கு தூக்கம் வருகின்றபோது அவனது படுக்கை தயாராக இருக்க வேண்டும். அது ஒழுங்கீனமாகவோ அல்லது வேறு பொருட்கள் வைக்கப்பட்டோ இருந்து விடக்கூடாது.
- கணவன் வீட்டுக்கு வரும் வேளையில் வீடு ஒழுங்கின்றி அலங்கோலமாகக் காட்சி தரக்கூடாது. பிள்ளைகளின் விளையாட்டுப் பொருட்களும் புத்தகங்களும் வாசலில் சிதறி இருக்கக்கூடாது. நாற்காலிகளிலும் மேசைகளிலும் ஆடைகளும், பத்திரிகைகளும் ஆங்காங்கு போடப்பட்டிருக்கக்கூடாது. இவற்றை கணவனது வருகைக்கு முன்னர் முடிந்தளவு சீர் செய்து விடுங்கள். அழகும் நேர்த்தியும் சுத்தமும் எப்பொழுதும் மனதுக்கு சந்தோஷத்தையும் அமைதியையும் தரக்கூடியவை.
- கணவனது உடலுறவுத் தேவை மறுதலிக்கப்படக்கூடாது. பல சமயங்களில் கணவன் சூசகமாகவே இத்தேவையை உணர்த்துவான். கணவனது சமிக்ஞையை புரிந்து கொள்ளும் புத்திசாலித்தனம் உங்களிடம் வேண்டும். புரிந்து கொண்டாலும் புரியாதது போல் ஒரு போதும் நடிக்காதீர்கள். மலக்குமார்களின் சாபத்துக்குரிய ஒரு செயல் அது.
கணவன்மார்களே! உங்களுடனும் சில வார்த்தைகள் பேச வேண்டும். உங்களைப் போலவே உங்கள் மனைவிக்கும் தாவாக் கடமைகள் இருக்கின்றன. சில சமயங்களில் சமுதாயப் பணிகளுடன் தொழில் செய்கின்ற மனைவியாய் இருக்கும் பொழுது கணவன் புறத்திலிருந்து பல விட்டுக் கொடுப்புகள் அவசியப்படுகின்றன.
கணவன்மார்களே! உங்களுக்கு ஆறு உபதேசங்களை சொல்கிறேன். இவற்றை கடைப்பிடித்தால் இன்ஷா அல்லாஹ் வெற்றி பெறுவீர்கள்.
- குடும்பத்திற்காக நேரம் ஒதுக்குங்கள். சூரதுல் ஹுஜுராத்தில் நபியவர்கள் வீட்டில் இருக்கும் போது, வெளியில் இருந்து சப்தமிட்டு அவரை அழைக்கக் கூடாது என்றும், அவர் வெளியில் வரும் வரை காத்திருப்பதே சிறந்தது என்றும் அல்குர்ஆன் கூறுகிறது. அவ்வாறு செய்யும் நாட்டுப்புற அரபிகளை கண்டிக்கவும் செய்கிறது.
இது ஏன்? ஒரு கோணத்தில் இது தலைமைக்கு செலுத்தும் மரியாதை மற்றோர் கோணத்தில் தலைமை தனது குடும்பத்துடன் நேரத்தைக் கழிக்க சந்தர்ப்பம் அளிக்கப்படல் வேண்டும் என்பதையும் இது குறிப்பிடுகிறது. எனவே, நபியவர்கள் குடும்பத்திற்கு நேரம் ஒதுக்கியிருக்கிறார்கள். அந்தப் பண்பாடு எமது தாயிக்களிடமும் அவசியப்படுகிறது. மாத்திரமன்றி அவர் அவ்வாறு நேரம் ஒதுக்குவதற்கான வாய்ப்பை அங்கத்தவர்கள் வழங்கவும் வேண்டும்.
- தாவா தொடர்பான ஒரு கடமைக்காக வெளியே செல்லும் போது மனைவியிடம் தெளிவாகச் சொல்லி விட்டுச் செல்லுங்கள். எங்கே செல்கிறீர்கள்? எதற்காகச் செல்கிறீர்கள்? நான் அங்கே செல்வதால் மனைவிக்கு என்ன நன்மை இருக்கிறது போன்ற விஷயங்களை தெளிவாகப் பேசுங்கள். எந்தத் தகவலும் சொல்லாமல் போகாதீர்கள். இதுதான் நீங்கள் உங்கள் மனைவிக்கு வழங்கும் உயர்ந்த கௌரவமாகும்.
மூஸா (அலை) அவர்கள் தனது மனைவியை அழைத்துக் கொண்டு வரும் வழியில் இடையில் ஒரு வெளிச்சத்தைக் கண்டபோது, மனைவியைப் பார்த்து “இங்கே இருங்கள். நான் அங்கே போகிறேன். சிலவேளை தீப்பந்தம் ஒன்று கிடைக்கலாம் அல்லது எங்கு செல்ல வேண்டும் என்று ஏதாவது வழி கிடைக்கலாம்” என்று சொல்லி விட்டுத்தான் சென்றார்கள். தாவாக் கடமைகளை மனைவியிடம் மறைத்துக் கொண்டிருப்பதில் எந்தப் பயனுமில்லை.
- மனைவியின் வீட்டுக் கடமைகளைப் புரிந்து கொள்ளுங்கள். பல சமயங்களில் கணவன்மாருக்கு வீட்டில் மனைவிக்கு என்ன வகையான பணிகள் இருக்கின்றன என்பது தெரியாது. ஒரு நாளில் வீட்டில் மனைவியுடனிருந்து வீட்டில் மனைவி செய்யும் வேலைகளை பட்டியலிட்டுப் பாருங்கள். மலைத்துப் போவீர்கள். இவற்றிற்கு அப்பால்தான் அவர்கள் தமது தொழில்சார்ந்த கடமைகளையும், சமூகம் சார்ந்த கடமைகளையும் செய்து கொண்டிருக்கிறார்கள். மனைவியின் சுமையைப் புரிந்து கொள்ளுங்கள். இயல்பாய் அவள் மீது அன்பும் மரியாதையும் ஏற்படும்.
- வீட்டுக் கடமைகளில் மனைவிக்கு உதவி செய்யுங்கள். நபியவர்களின் முன்மாதிரிகளில் இது முக்கியமான ஒன்று. மாத்திரமல்ல, உங்கள் இருவருக்குமிடையிலான புரிந்துணர்வு, நெருக்கம், அன்பு, அந்நியோன்னியம் போன்ற அனைத்திற்கும் இது காரணமாக அமையும். அவ்வப்போதேனும் சமையலை நீங்கள் செய்து பாருங்கள். அப்போது உங்கள் மனைவியின் முகத்தில் தோன்றும் பூரிப்பைக் காண கண் கோடி தேவைப்படும்.
- முடிந்தவரை உங்கள் தேவைகளை நீங்களே செய்து கொள்ள முயற்சி செய்யுங்கள். நபியவர்கள் தன்னுடைய வேலையைத் தானே செய்து கொள்வார்கள். தனது ஆடைகள், காலணி போன்றவற்றை தானே திருத்திக் கொள்வார்கள். கணவன்மார்களே, உங்களாலும் இது முடியும். முடிந்தவரை மனைவியின் மீதான பாரத்தை இறக்கி வைக்க முயலுங்கள்.
- உங்களுக்குரிய சில உரிமைகளை விட்டுக் கொடுக்கவும் தயாராக இருங்கள். “அவர்களுக்கு உங்கள் மீதுள்ள கடமைகள் போல் உங்கள் மீதும் அவர்களுக்கான கடமைகள் இருக்கின்றன. ஆனால் ஆண்களுக்கு ஒரு அந்தஸ்து இருக்கிறது” (அல்குர்ஆன்: 2: 228)
இந்த வசனத்தில் ஆண்களுக்கான அந்தஸ்து என்ன என்று விளக்கும் போது சில தப்ஸீர் ஆசிரியர்கள் ‘கணவன் தனக்குரிய உரிமைகளில் ஒன்றையோ பலதையோ விட்டுக் கொடுத்தலே அவனுக்குரிய சிறப்பாகும்’ என்கிறார்கள்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். “எனது மனைவியிடம் எனக்கு கிடைக்க வேண்டிய எல்லா உரிமைகளையும் நான் எடுத்துக் கொள்ள நினைப்பதில்லை” என்றார்கள்.
இறுதியாக மனைவிமார்களே, அறிந்து கொள்ளுங்கள். உங்களது சுவர்க்கமும் நரகமும் உங்கள் கணவன்தான். கணவன்மார்களே, அறிந்து கொள்ளுங்கள், உங்களில் சிறந்த மனிதர் உங்கள் மனைவியரிடத்தில் சிறந்தவர்தான்.
அல்லாஹ் எங்களை அங்கீகரிப்பானாக!
(புதிய விடியல் ஏப்ரல் 2015ல் வெளியான கட்டுரை)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக