Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 2 செப்டம்பர், 2015

ஆம். நம்பிக்கை தேய்ந்து தான் விடும். நீதித்துறை மீது நாங்கள் வைத்துள்ள நம்பிக்கை!..

“முன்று மணி நேரம் தலையை மறைக்கவில்லை என்றால் உங்கள் இறை நம்பிக்கை ஒன்றும் தேய்ந்து விடாது.”
“தலையை மறைக்காமல் தேர்வு எழுத முடியாது என்பது உங்கள் அகங்காரத்தின் வெளிப்பாடு.”
“இது சிறுபிள்ளைத் தனமான செயல்”

மேலே உள்ள வார்த்தைகள் பாஜக எம்பி சாக்ஷியால் சொல்லப்பட்டதல்ல..சிவசேனாவின் சாம்னா தலையங்கத்திலும் வெளி வந்ததல்ல. ஆர்எஸ்எஸ்
தலைவர்கள் நாக்பூரில் வைத்து சொன்னதும் அல்ல, இவர்கள் இவ்வாறு சொல்லியிருக்கவில்லை என்றால் தான் ஆச்சரியப் பட்டிருக்க வேண்டும். ஆனால் இதைக் கூறியது சாமானியன் தனக்கான நீதிக்காக எத்தனை வாய்தா வாங்கினாலும் நடையாய் நடக்கும், இந்தியாவின் நான்காவது தூணான நிதித்துறையின் மிக உயர்ந்த பொறுப்பில் இருக்கும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி திரு எச்எல் தத்து அவர்கள். நாட்டின் குடிமக்களுக்கு அரசியல் சட்டம் வழங்கும் உரிமைகளைப் பெற்றுத் தர வேண்டிய உன்னத பொறுப்பில் இருக்கும் ஒரு நபர் இப்படி அந்த உரிமைகளை குழி தோண்டி புதைக்கும் ஒரு கருத்தைச் சொல்லியிருப்பதுதான் இங்கு பிரச்னையே.
பின்னணி:
மே மாதம் நடைபெறவிருந்த அகில இந்திய மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு வினாத்தாள்கள் வாட்ஸ்அப்பில் வெளியானதால் தேர்வு ரத்து செய்யப்பட்டது. பிறகு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி ஜுலை 25ம தேதி மறு தேர்வு நடைபெறும் அன்று மத்திய உயர்கல்வி ஆணையம் (CBSE) அறிவித்தது. தேர்வுக்கான விதிமுறைகள் அடங்கிய சுற்றறிக்கையினை ஜூலை 9ம தேதி CBSE வெளியிட்டது. அந்த அறிக்கையின் பிரிவு 6(c) மற்றும் 7(a) ஆகியவை மாணவிகள் தலை,கைகள் மற்றும் உடலின் பாகங்களை மறைக்கும் வண்ணம் உடைகள் அணியக்கூடாது என்றும் அரைக்கை சட்டை மற்றும் மெல்லிய உடைகளை மட்டுமே அணிய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது.. தேர்வில் முறைகேடுகளை தடுக்கும் நடவடிக்கையாக இது சொல்லப்பட்டது. இந்தியா ஒரு பன்மை சமுதாய மக்கள் வாழும் தேசம். இங்கு பல மொழி, மதம் ,இனம மற்றும் கலாச்சாரத்தைப் பின்பற்றும் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அனைத்து மக்களும் தங்கள் மத, கலாச்சார அடையாளங்களைப் பின்பற்ற அரசியல் அமைப்பின் 25வது பிரிவு வகை செய்கிறது. கிறிஸ்தவ கன்னியாஸ்திரிகள் தலைய மறைப்பது, முஸ்லிம் பெண்கள் தங்கள் மத வழக்கப்படி தலையை மறைக்கும் ஸ்கார்ப் அணிவது, சீக்கியர்கள் டர்பன் அணிவது என்பது போன்ற நடைமுறைகளை குழி தோண்டி புதைப்பது போல் சிபிஎஸ்இன் இந்த அறிவிப்பு அமைந்தது. இதனை எதிர்த்து கேரளாவில் ஒரு மாணவி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து ஸ்கார்ப் அணிந்து தேர்வு எழுத அனுமதி பெற்றார்.
எஸ்ஐஓ உச்சநிதிமன்றத்தில் வழக்கு:
இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு உயர்கல்வி ஆணையத்தின் இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. உச்ச நிதிமன்ற தலைமை நீதிபதி திரு எச் எல் தத்து அவர்கள் தலைமையிலான அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. எஸ் ஐ ஓ சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் திரு. ஷதன் பார்சாத் இந்த உத்தரவு இந்திய அரசியல் சாசனம் பிரிவு 25ன் படி மத உரிமைகளைப் பின்பற்ற வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை பறிப்பது போல் உள்ளது என்றும் CBSEன் நோக்கத்தை இந்த உத்தரவுகள் எந்த வகையிலும் நிறைவேற்ற முடியாது என்றும் வாதாடினார். ஆனால் திரு தத்து இந்த வழக்கை திசை திருப்பும் வண்ணம் 3 மணி நேராம் தலையை மறைக்காமல் இருந்தால் உங்கள் இறை நம்பிக்கை கெட்டுவிடாது என்றும் இந்த வழக்கு ஈகோவின் அடிப்படையில் அமைந்தது என்றும் பொறுப்பற்ற முறையில் கருத்து தெரிவித்தார். உடனடியாக எஸ் ஐ ஓ தனது வழக்கைத் திரும்பப் பெற்றது. எஸ் ஐ ஓ வின் தேசிய தலைவர் இக்பால் ஹுசைன் தலைமை நீதிபதியின் இந்த கருத்துக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்தார்.

பின்வாங்கிய CBSE:
கடுமையான எதிர்ப்புகளைத் தொடர்ந்து உயர்கல்வி ஆணையம் தனது முந்தைய அறிவிப்பை திரும்பப் பெற்றுக் கொண்டு புதிய அறிவிப்பை வெளியிட்டது. மாணவிகள் தங்கள் மத கலாச்சார அடையாளங்களை பின்பற்ற தடையில்லை என்றும் ஆனால் தேர்வு துவங்க அரை மணி நேரம் முன்னதாகவே கண்காணிப்பாளர்கள் முன் சோதனைக்கு உட்பட வேண்டும் என்றும் தெரிவித்தது. ஆனாலும் கூட திருவனந்தபுரத்தை சேர்ந்த ஒரு கன்னியாஸ்திரி ஸ்கார்ப் இல்லாமல் தேர்வு எழுத முடியாது என்று கூறியதால்தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை.
இந்தியாவில் வாழும் கடைநிலை குடிமகன் வரை தனக்கான நீதிக்காக சார்ந்திருப்பது நீதித்துறையை மட்டுமே. ஊழல், லஞ்ச லாவண்யங்கள், வன்கொடுமைகள் நிறைந்த தேசத்தில் சாமானியனின் எஞ்சியுள்ள ஒற்றை நம்பிக்கை நீதித்துறையும் நீதி வழங்கும் பொறுப்பிலுள்ள நீதியரசர்களும் தான். ஆனாலும் அந்த நம்பிக்கையை குலைக்கும் செயல்கள் அவ்வபோது நீதித்துறையில் நடைபெற்று வருகின்றன. மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களுக்கு அவரது பதவிக் காலத்திலேயே பிடிவாரண்ட் பெறப்பட்ட சம்பவம் நீதித்துறையில் அழுக்குப் படிந்து போனதற்கான ஒரு சிறந்த உதாரணம். புராணங்களின் அடிப்படையில் தீர்ப்பு வழங்குவது, சாட்சிகளை விடுத்து கூட்டு மனசாட்சியின் அடிப்படையில் தீர்ப்பு வழங்குவது, இரவோடு இரவாக அவசர கதியில் யாரையோ திருப்திபடுத்த தீர்ப்பு எழுதுவது, பல வருட வழக்கை சில நிமிடங்களில் முடிப்பது, தலைமுறை தலைமுறையாக ஆரம்ப கட்ட விசாரணை கூட தொடங்காமல் இருப்பது என்று இந்தியாவின் நான்காவது தூண் சிதிலமடைந்து வருவது தொடர்கதையாகி வருகிறது.

அந்த வரிசையில் இப்போது நீதித் துறையின் மிக உயர்ந்த பொறுப்பில் உள்ள ஒரு நபர் அரசியல் சட்டத்திற்கு புறம்பான ஒரு கருத்தை, மக்களின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் சர்வாதிகாரத்தனமான ஒரு கருத்தை சொல்லியிருப்பது மிகவும் வேதனை அளிக்கக் கூடியதாகும். இந்த கருத்துகள் மிகவும் ஆபத்தான சூழலை சமுதாயத்தில் ஏற்படுத்தும். பிற்காலத்தில் நீதி செலுத்துபவர்கள் இந்த கருத்தை முன்மாதிரியாக எடுத்துக் கொள்ள வாய்ப்புகள் உள்ளது. மக்களுக்கு அரசியல் அமைப்பு வழங்கும் உரிமைகளைப் பெற்றுத்தர வேண்டிய ஒரு பொறுப்பான பதவியில் இருக்கும் ஒரு நபர் அந்த உரிமைகளைப் பறிக்கும் வண்ணம் வழக்கிற்கு சம்பந்தமே இல்லாத ஒரு கருத்தைக் கூறி வழக்கின் தன்மையையே நீர்த்துப் போகச்செய்வது வேதனையான செயல். இது போன்ற கருத்துகள் நாட்டின் பன்மைத் தன்மையையும் வேற்றுமையில் ஒற்றுமை என்ற தாரக மந்திரத்தையும் குலைத்து விடும். இது போன்ற கருத்துக்களைத் தெரிவிக்கும் முன்னர் நீதிபதிகள் தாங்கள் அமர்ந்திருக்கும் இடம் மதம் மொழி இனம் பாராமல் அனைவருக்கும் சமமான நீதி வழங்கும் இடம் என்பதை மனதில் நிறுத்தி சொன்னால் நலம். இல்லை என்றால் நாட்டின் குடிமக்களுக்கு அரசியல்வாதிகள் போலவே நீதித்துறையின் மீதிருந்த நம்பிக்கையும் இல்லாமல் போய்விடும் சூழல் ஏற்படக்கூடும். எங்கு மக்கள் தங்கள் கடைசி நம்பிக்கையையும் இழக்கிறார்களோ அங்குதான் புரட்சிகள் பூக்கும் என்பது வரலாறு நெடுகிலும் நாம் கண்டு வந்துள்ள சான்றுகள் நமக்கு உணர்த்தும். இதனை தத்து போன்றவர்கள் உணர்வார்களா?
அபுல் ஹசன் R
9597739200

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக