பட்டேல்களின் விசித்திரமான இடஒதுக்கீடு கோரிக்கையும், போராட்டமும், அதை பின்நின்று இயக்கும் மோடியின் அரசால் இந்தியாவின் மதச்சார்பின்மையும், வேற்றுமையில் ஒற்றுமை என்ற கொள்கை முழக்கமும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் இந்த நேரத்தில் தேசத்தை சூழ்ந்திருக்கும் இந்த இடர்பாடுகளில் இருந்து அதை மீட்டெடுக்க வேண்டிய கடமை தேச நலனில் அக்கறை கொண்ட ஒவ்வொரு சாமானிய இந்தியனுக்கும் இருக்கிறது.
ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவனே அரை ட்ரவ்சர் சீருடை துறந்து முழு ட்ரவ்சர் அணியும் இந்தக் காலகட்டத்திலும் எந்த விதமான மாறுதலுக்கும் அக ரீதியாகவும் புற ரீதியாகவும் நாங்கள் தயார் இல்லை என்று தமது அரை ட்ரவ்சர் சீருடையின் மூலம் உணர்த்திக் கொண்டிருக்கும் இவர்கள், அடிப்படையில் சனாதன தர்மம் என்ற பிற்போக்குத்தனமான பழமைவாத சிந்தனைகளால் இந்தியாவை இருண்ட காலத்தை நோக்கி அழைத்துச் சென்று கொண்டிருக்கும் இவர்கள் வெறுமனே முன்றாம் தர ஜேப்படி திருடர்கள் அல்ல; ஓர் அழிவு சித்தாந்தத்தால் நூறாண்டுகளுக்கு மேலாக வார்த்தெடுக்கப்பட்டவர்கள்.
குறுகிய அரசியல் இலாபங்களை முன்வைத்து சந்தர்ப்பவாத தேர்தல் கூட்டணிகளால் மட்டுமே இவர்களை வீழ்த்திவிட இயலாது. சாமானியர்களை ஒருங்கிணைத்து சித்தாந்த ரீதியாக வார்க்கப்பட்ட நிலையான, உறுதியான எதிர் அணியை கட்டி எழுப்புவதன் ஊடாகவே நிலையாக இவர்களை வீழ்த்த முடியும்.
அதற்கு இவர்களை அறிந்து கொள்ளவேண்டும்.
இந்தியா முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களால் அச்சுறுத்தலை எதிர்கொண்டிருப்பதாகவும் இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் விதமாய் இந்துக்களை ஒருங்கிணைத்து இந்துக்களின் பாதுகாப்பிற்காக அவர்களை இராணுவ மயப்படுத்தலின் அவசியம் இருக்கிறது என்ற வெறுப்புவாத சிந்தனைகளை அட்சாரமாய் கொண்டு பேஷ்வா மன்னர்களின் ஆட்சியை மீளுருவாக்கம் செய்வதன் மூலம் சித்பவன் பார்ப்பனீய மேலாதிக்கத்தை இந்தியாவில் நிறுவி பாதுகாக்கும் இலட்சியத்துடன் ஆர்.எஸ்.எஸ் என்ற அமைப்பு டாக்டர் ஹெச்.பி ஹெட்கேவர் என்ற நாக்பூரை பூர்வீகமாக கொண்ட சித்பவன் பார்ப்பனரால் தொடங்கப்பட்டது.
ஆர்.எஸ்.எஸ் தொடங்கப்பட்ட அடுத்த ஆண்டே 1926 ஆண்டு நாக்பூரில் இந்து-முஸ்லிம் கலவரத்தை முன் நின்று நடத்தும் அளவிற்கு 1925 முதல் 1926 காலகட்டத்திற்குள் தனது வெறுப்புவாத பிரச்சாரத்தின் மூலம் இளைஞர்களை திரட்டியவர்கள். தொடர் இரகசிய பயிற்சிகளின் மூலம் வலிமையை திரட்டி, ஆயுதம் தரித்து நிராயுதபாணிகளான முஸ்லிம்கள் மீது தாக்குதலை தொடுத்தார்கள்.
ஆயூதபாணிகளை நிராயுதபாணிகள் எதிர்கொண்டால் என்ன நடக்குமோ அதுவே அன்று அங்கு நடந்தது. தொடர் கலவரங்களின் மூலம் மக்களுக்கு இடையில் மதத் துவேஷங்களையும் பிரிவினைகளையும் தூண்டி தமது வளர்ச்சியையும் இருப்பினையும் மிக வேகமாக முழு மஹாராஷ்டிரத்திலும் கணிசமாக ஊர்ஜிதப்படுத்திக் கொண்டார்கள்.
தமது இருப்பையும் பார்ப்பனீய மேலாதிக்க கனவினையும் பாதுகாக்கும் கருத்தியல் வரையறைகளையும் அந்தக் கருத்தியல்களைக் களப்படுத்துவதற்கான கட்டமைப்புகளையும் உருவாக்க தொடங்கினார்கள்.
இந்து தேசியத்தின் இத்தாலிய வேர்கள்
பத்தொன்பதாம் நூற்றாண்டில் இனத் தூய்மைவாதம் பேசிய முசோலினி, தான் பேசிய இனத் தூய்மைவாதத்தையே இத்தாலிய தேசியவாதமாய் நிறுவியதன் மூலம் இத்தாலியில் அதிகாரத்தை கைப்பற்றினான். அதிகாரத்தை கைப்பற்றிய முசோலினி ஏனைய தேசங்களின் மீதும் இத்தாலியின் மேலாதிக்கத்தை நிறுவ முயன்றான்.
முசோலினியின் இந்த முன்னெடுப்புகள் சர்வதேச அரங்கில் ஏற்படுத்திய அதிர்வுகள் இந்தியாவில் இனத் தூய்மை பேசித் திரிந்த சித்பவன் பார்ப்பனர்கள் (சித்பவன் என்றால் புனித தீயில் தீட்சிதை பெற்றவர்கள் என்று பொருள்) இந்தியாவில் ஏனைய சமூகத்தின் மீது தமது மேலாதிக்கத்தை நிறுவ முயன்று கொண்டிருந்த போது, அதே வகையில் இத்தாலியில் வெற்றி பெற்றிருந்த முசோலினியின் வெற்றிக்கான வழிமுறையின் மீது எழுந்த ஈர்ப்பின் காரணமாய் 1925ல் மகாராஷ்டிரத்தில் வெளிவந்த வீரகேசரி பத்திரிகையில் முசோலினியையும் அவனது அரசையும் புகழ்ந்து எழுத தொடங்கி விட்டனர்.
வீரகேசரி முசோலினி குறித்து எழுதியவை எல்லாம் பார்க்கும்போது முசோலினியின் அறிவிக்கப்படாத கொள்கை பரப்பாளர்களாகவே அன்று கேசரி நாளிதழ் செயல்பட்டது என்பது தெரிய வரும்.
அதிகாரத்தை வென்ற முசோலினி இத்தாலியை நிர்வகித்துக் கொண்டிருந்த பாராளுமன்ற ஜனநாயக முறையை ஒழித்து “தி கிரேட் கவுன்சில் ஆஃப் ஃபாசிசம்” என்ற நிர்வாக அமைப்பு முறையை நிறுவி இத்தாலியின் ஒட்டுமொத்த அதிகாரத்தையும் தன் பால் குவித்ததன் மூலம் சர்வாதிகாரியாக பரிமாணம் பெற்றிருந்தான்.
இது குறித்து தலையங்கம் தீட்டிய கேசரி ஜனநாயக அமைப்பு முறையை விட ஒரு தேசத்தை கட்டுக்கோப்பாக நிர்வகிப்பதற்கு சர்வாதிகாரம் சிறந்த வழிமுறைதான் என்ற பிரச்சாரத்தை தொடந்தார்கள். தமது இலட்சியத்தை நிறைவேற்ற நிறுவப்பட்ட ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் ஒரு தலைவருக்கு வழிபடுதல் (Ek Chalak Anuvartitva) என்ற முதல் அடிப்படையை விதியாக்கினார்கள்.
இறுதியாக ஆகஸ்ட் 13, 1929 அன்று “இத்தாலியும் இளைய தலைமுறையும்” என்ற தலைப்பில் நீண்ட கட்டுரையையும் ஃபாசிசமயப்படுத்தலால் இத்தாலிய இளைய சமூகம் ஆழ்ந்த மதப் பற்று மிகுந்தவர்களாகவும், சமூக ஒழுக்க சீலர்களாகவும் திகழ்வதாகவும் அதற்கு Balilla and the Avanguardisti என்ற இராணுவப் பள்ளியும், அந்த இராணுவப் பள்ளியில் வழங்கப்படும் வகுப்புகளும்தான் காரணம் என்றவர்கள் அந்த வழிமுறை இந்தியாவிற்கும் பார்ப்பனீய மறுமலர்ச்சிக்கும் அடிப்படையானது என்று வாதிட்டார்கள். ஷாகா என்ற இராணுவப் பயிற்சி முறையை ஆர்.எஸ்.எஸ் அடிப்படையாக உருவாக்கிக் கொண்டார்கள்.
தமது கட்டமைப்புகளை முழுமையாக ஃபாசிச அடிப்படையில் கட்டமைக்க நிறுவனர் ஹெட்கேவரின் குருவாக கருதப்படும் பி.எஸ். மூஞ்சே 1931ல் இங்கிலாந்தில் நடைபெற்ற வட்டமேஜை மாநாட்டிற்கு சென்று நாடு திரும்பும் வழியில் ஃபாசிசத்தின் தலைமை பீடமான இத்தாலியில் முசோலினியை சந்தித்தார்.
இந்தச் சந்திப்பின் போது முசோலினியின் இராணுவப் பள்ளிகள் மற்றும் ஃபாசிச இயக்க கட்டமைப்புகளையும் அதன் வழிமுறைகளையும் தெரிந்து கொண்டார். இந்தச் சந்திப்புகளின் வாயிலாகவே ஆர்.எஸ்.எஸ்.ஸை இந்தியா முழுக்க கொண்டு செல்லும் வழிமுறையையும், இயக்கத்தை வலிமைப்படுத்தும் யுக்திகளையும் தான் தெரிந்து கொண்டதாக குறிப்பிடுகிறார்.
மேலும் இந்தச் சந்திப்பின்போது, இந்தியாவில் முசோலினியின் புகழை தாங்கள் பரப்புவதாகவும் இந்த ஃபாசிச கட்டமைப்புகளை உருவாக்குவதாகவும் தான் வாக்குறுதி அளித்தேன் என்றும், அதற்கு முசோலினி, “இந்தியாவில் இது சற்று கடினமான விடயம்” என்று பதில் உரைத்ததாகவும் தனது டைரியில் குறிப்பிடுகிறார் டாக்டர் மூஞ்சே. (மூஞ்சே டைரி குறிப்புகள், பக்கம் 13, நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம்; மூஞ்சே பக்கங்கள் மைக்ரோ ஃபிலிம்)
மேலும் முசோலினியுடனான தனது நினைவுகளை விளக்கும் போது, “முசோலினிக்கும் எனக்கும் இடையிலான சந்திப்பு மிகவும் ஆரோக்கியமானதாகவும் நெகிழ்ச்சியானதாகவும் அமைந்தது. எமது சந்திப்பு திட்டமிட்டபடி மிகச் சரியாக மார்ச் 19 அன்று மாலை மூன்று மணி அளவில் ஃபாசிச அரசின் தலைமையகமான பிலாசோ வேநீசியா அரங்கில் நடைபெற்றது.
“நான் வளாகத்தின் கதவினை நெருங்கிய நேரத்திலேயே முசோலினி என்னை வாசல் வரை வந்து வரவேற்றார். நான் அவர் கைகளை குலுக்கியவனாக ‘நான்தான் மூஞ்சே’ என என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். மாறாக, அவரோ என்னை குறித்து அனைத்தையும் அறிந்து வைத்திருந்தார். இருவரும் இந்திய சுதந்திரப் போர் குறித்தும் வட்டமேஜை மாநாடு குறித்தும் சுமார் அரை மணி நேரம் விவாதித்தோம். மேலும் முசோலினி தமது இராணுவப் பள்ளிகள் குறித்து எனது கருத்தினை வினவியபோது திடமாக கூறினேன், இந்தப் பள்ளிகளாலும் அதில் வழங்கப்படும் பாடத் திட்டங்களாலும் மிகவும் கவரப்பட்டிருக்கிறேன், இத்தாலியின் வளர்ச்சிக்கு இது மிகவும் அவசியாமானது, மேலும் இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு இது இன்னும் முக்கியமானதும் அவசியமானதும் ஆகும். இது போன்ற கட்டமைப்புகளை இந்தியாவில் உருவாக்குவதற்காக நாங்கள் இயங்கிக் கொண்டிருகின்றோம், வாய்ப்புகள் கிடைக்கும்போதெல்லாம் இந்த இராணுவப் பள்ளிகள் குறித்து இந்தியாவிலும், இங்கிலாந்திலும் புகழ்ந்து பேசுவேன் என உறுதி அளித்தேன். முசோலினி என்னை நெருங்கியவராக, “இது மிகவும் கடினமான பணி. எனது நல்வாழ்த்துகள்” எனக் கூறி விடை பெற்றார்.” (குறிப்புகள்: நேரு அருங்காட்சியகம் மற்றும் நினைவு நூலகம், மூஞ்சே பக்கங்கள் மைக்ரோ ஃபிலிம்)
நாடு திரும்பிய மூஞ்சே மராத்தா பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார்:
இத்தாலிய ஃபாசிச கட்டமைப்புகளை புகழ்ந்து தவறாது இந்தியாவில் இதை அதிவேகமாக நிறுவ வேண்டிய அவசியம் இருப்பதாகவும், இந்துக்களை, இத்தாலிய மற்றும் ஜெர்மானிய பாணியில் இராணுவமயப்படுத்தும் எமது நோக்கங்களை இனி தாமதம் இன்றி முன்னெடுக்கப் போவதாகவும் கூறினார்.
சிறிது காலத்திற்கு பின்பு 1934 ஜனவரி 31-ஆம் தேதி கேசவ சாஸ்திரி அவர்களால் “ஃபாசிசமும் முசோலினியும்” என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கில் மூஞ்சே சிறப்புரை ஆற்ற ஹெட்கேவர் போன்றவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். (NMML, Moonje papers Microfilm, Diary, rn 2, 1932-36)
1934ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி மூஞ்சே, ஹெட்கேவர், லால் கோகலே அகியோர் ஒருங்கிணைந்து இந்துக்களை இராணுவமயப்படுத்துதல் குறித்தான சாத்தியக் கூறுகளை விவாதிக்கும்போது லால் கோகலே மூஞ்சேவிடம், “நீங்களோ இந்து சபாவின் தலைவராக இருந்து இந்து தர்மத்தை போதித்துக் கொண்டிருக்கிறீர்கள். வருணங்களை கடந்து இந்துக்களை இராணுவமயப்படுத்துதல் நடைமுறையில் சாத்தியமா?” என்ற போது, “நானும் அது குறித்துத்தான் தீவிரமாக சிந்தித்துக்கொண்டிருகின்றேன். நாம் முன்னெடுக்க விரும்பும் இந்தக் காரியம் எப்போது பயன் அளிக்கும் எனில் நாம் சுதந்திரம் பெற்று இந்தியாவில் ஓர் இந்து, சிவாஜி, முசோலினி, ஹிட்லர் போன்று ஒரு சர்வாதிகாரியாக எழுச்சி கொள்ளும் போது இது சாத்தியபடும். அதுவரை நாம் அமைதி காத்து அமர்ந்திருக்க இயலாது. நாம் அதற்கான களத்தை கட்டமைக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. அல்லது நம் வழிமுறைகளின் ஊடாக இந்து தர்ம மேன்மைகளை பாதுகாக்கும் அல்லது நிலைநாட்டும் சர்வாதிகாரியை உருவாக்கி அவரிடம் ஒப்படைக்க வேண்டிய அவசியம் இருக்கிறது என்றேன்” என்கிறார்.
அன்றைய இந்தியாவை ஆட்சி செய்த பிரிட்டிஷ் அரசாங்கம் ராஷ்ட்ரிய சுயம் சேவக் சங்கம் குறித்து, “தீர்க்கமாக இது ஃபாசிச, நாசிச கட்டமைப்புகளை உருவாக்குவதன் மூலம், இந்தியாவில் இன அழிப்புகளை ஏற்படுத்த விளைகிறது” என்று இவ்வாறு ஆவணப்படுத்தியது: It is perhaps no exaggeration to assert that the Sangh hopes to be in future India what the ‘Fascists’ are to Italy and the ‘Nazis’to Germany. (NAI, Home Poll Department, 88/33,1933)
மூஞ்சே தனது சிந்தனைக்கு ஆதரவாக இருப்பவர்களை ஒருங்கிணைத்து இயக்க ரீதியாகவோ தனிப்பட்ட முறையிலோ ஏனைய இயக்கங்களுக்கோ சுதந்திரப் போராட்ட தலைவர்களுக்கோ ஒத்துழைப்பு வழங்குவதில்லை என உறுதி ஏற்றதுடன், இராணுவப் பள்ளிகளை நிறுவுவதில் கவனம் செலுத்துமாறு வேண்டுகோள் விடுத்தார். அதன் முதல் படியாக மஹாராஷ்டிரத்தில் போன்சாலே இராணுவப் பள்ளியையும், தேசிய இந்து இராணுவ கல்விக் கழகத்தையும் நிறுவினார்.
சமீபத்தில் நடந்த மலேகான் குண்டுவெடிப்பில் இந்த இராணுவப் பள்ளி தொடர்பு உடையது என்பது குரிப்பிடத்தக்கது.
அனால் இந்தப் பள்ளியை நிறுவியதற்கு காரணமாக மூஞ்சே முன்மொழிந்ததோ இவ்வாறு இருந்தது:
“To bring about military regeneration of the Hindus and to fit Hindu youths for undertaking the entire responsibility for the defence of their motherland to educate them in the ‘Sanatan Dharma’, and to train them “in the science and art of personnel and national defence” (NMML, Moonje papers, subject files, n 24, 1932-36, ‘The Central Military Education Society’)
சனாதன தர்மத்தின் வழி நின்று தேசப் பாதுகாப்பிற்காக என்றவர்கள், இந்தப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்களாலேயே இன்று தேசத்தில் பல்வேறு குண்டுவெடிப்புகளை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள். காரணம், இந்தப் பள்ளியின் நோக்கமும் உருவாக்கப்பட்டதன் காரணமும் குறித்து தமது ஆதரவாளர்களுக்கு அனுப்பிய இரகசிய சுற்றறிக்கையில் மூஞ்சே பின்வருமாறு சொல்கிறார்:
This training is meant for qualifying and fitting our boys for the game of killing masses of men with the ambition of winning victory with the best possible casualties (sic) of dead and wounded while causing the utmost possible to the adversary. (NMML, Moonje papers, subject files, n 25, 1935, ‘Preface to the Scheme of the Central Hindu Military Society and Its Military School’)
“நாம் நம் மாணவர்களுக்கு வழங்கும் இராணுவப் பயிற்சியின் நோக்கம் நம் எதிரிகளை மிகப் பெரிய அளவில் அழித்தொழிப்பதற்கும், கூடுமான வரை பெரும் காயங்களேனும் நம் எதிரிகளுக்கு ஏற்படுத்தவே” என்கிறார்.
இங்கே எதிரிகள் என மூஞ்சே குறிப்பிடுவது ஆகிலேயர்களையா? அல்லது இந்து தர்மத்தை ஏற்றுக்கொள்ளாத இந்தியர்களையா? நிச்சயமாக இந்து தர்மத்தை ஏற்றுக்கொள்ளாத இந்தியர்களைத்தான். காரணம், சுதந்திரப் போரின் இறுதி காலகட்டத்தில் தொடங்கப்பட்ட இந்த இராணுவப் பள்ளியால் ஆங்கிலேயருக்கு எந்த அச்சுறுத்தலும் விளைந்ததாய் தெரியவில்லை. அதற்கு இந்திய சுதந்திரப் போராட்டத்தில் இவர்களின் பங்களிப்பையும் சற்று பார்க்க வேண்டி உள்ளது.
தொடரும்…
முஹம்மத் குவேரா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக