“மூத்த கன்னட எழுத்தாளர் கல்பர்கி சுட்டுக்கொலை” என்ற செய்தி, நமது அரசியலமைப்பு சட்டத்தின் நெடுந்தூண்ட்களில் ஒன்றான கருத்து சுதந்திரம் ஒட்டு மொத்தமாக படுகொலை செய்யப்பட்டது என்பதையே உணர்த்துகிறது.
எல்லை மீறாத கருத்து சுதந்திரம், அவரவர்கள் எண்ணங்களையும் சமூகம் சார்ந்த கருத்துகளையும் சமூகத்துடன் பகிர்ந்துகொள்வதற்கான உரிமை தமிழ்நாட்டில் சமீபகாலமாக பறிக்கபட்டுவருகிறது என்பது, இறுதியாக எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு எதிராக நிகழ்ந்த நாகரீகமற்ற எதிர்ப்புகளிலிருந்து புரிய முடிகிறது. இன்று அது ஒரு படி மேலாக, கர்நாடகாவில் கொலை செய்யும் அளவிற்குக் கொண்டு சென்று நிறுத்தியுள்ளது.
மோடி தலைமையில் பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு, இந்தியா முழுவதும் பரவலாக ஹிந்துத்துவ பயங்கரவாதிகள் கருத்துரிமையின் மீது தொடர்ச்சியாக தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். இது தமிழகத்தையும் விட்டுவைக்கவில்லை என்பது குறிக்கத்தக்கது. இவர்களின் இந்தப் பயங்கரவாதச் செயல்களுக்கு ஆதரவாக காவல்துறையில் சில கறுப்பு ஆடுகளும் செயல்பட்டு வருவது நாட்டின் ஒருமைப்பாட்டுக்கே குந்தகம் விளைவிக்கக்கூடியது.
எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய புத்தகத்துக்கு எதிராக எழுந்த அநாகரீகமான எதிர்ப்புகள் வெகு எளிதில் மறந்துவிடக்கூடியன அல்ல. எதிர்கருத்தினை வன்முறையின் வழியாக காட்டுவது ஏற்புடையதல்ல. அது பயங்கரவாதிகளின் வழிமுறை.
எதிர்கருத்தை நாகரீகமான முறையில் மக்கள் மத்தில் கொண்டு செல்வதே ஆகச்சிறந்த வழி. ஆனால் துரதிஷ்டவசமாக இன்று இந்தியாவெங்கும் கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் விதத்தில் பயங்கரவாத வழிமுறைகளின் மூலமாகவே அவை எதிர்கொள்ளப்படுகின்றன.
மக்களாட்சியில், அரசியல் சட்டம் மக்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை என்பதை மத்திய, மாநில அரசுகள் உணரவேண்டும்.
மூடநம்பிக்கைகளுக்கு எதிராக மக்களை விழிப்புணர்வு அடைய வைக்கும் வகையில் சமூகப்போராளியாக வலம் வந்த எழுத்தாளர் கல்பர்கி படுகொலையின் பின்னணியில் ஹிந்துத்துவ பயங்கரவாதிகள் உள்ளனர் என்பது வெட்ட வெளிச்சமானது. இதைப் போன்று, எழுத்தாளர் பெருமாள் முருகன் ஜாதி, மத மூட நம்பிக்கைகளை விமர்சித்து எழுதிய புத்தகத்துக்கு எதிராக அநாகரீகமான முறைகளில் எதிர்ப்பு தெரித்தவர்களும் இவர்களே.
சமீபத்தில், தாலி கட்டுதல் தொடர்பான விவாதத்தை ஒளிபரப்பிய புதிய தலைமுறை தொலைகாட்சி மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தியவர்களும் ஹிந்துத்துவ பயங்கரவாதிகள்தாம். ஊடகத்தின் மீதே தைரியமாக தாக்குதல் நடத்தும் அளவுக்கு இவர்கள் இன்று பலமாகியுள்ளதைக் கவனிக்க வேண்டும்.
சென்னை அய்.அய்.டி.யில் அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டத்தைத் தடை செய்ததின் பின்னணியிலும் ஹிந்துத்துவவாதிகள் செயல்பட்டிருந்தனர். நம் நாட்டின் நாளைய எதிர்காலம் இன்றைய மாணவ இளைய தலைமுறை தான். அவர்கள் ஆக்கபூர்வமான விவாதங்களில் பங்கேற்பதற்கும், தங்களது வேறுபட்ட கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கும் உரிய சுதந்திரத்தை இந்திய அரசியல் அமைப்பு சட்டம் வழங்கியுள்ளது.
“மோடி ஆட்சியின் இந்தி திணிப்பு / மாட்டிறைச்சி தடை / சிறுபான்மை மீது நடந்துவரும் தாக்குதல்” என்பதை விவாதத் தலைப்பாக எடுத்ததே, நீண்டகாலமாக செயல்பட்டு வந்த அய்.அய்.டி அம்பேத்கர்-பெரியார் மாணவர்கள் வட்டம் திடீரென தடை செய்யப்படுவதற்கான காரணம்.
வளர்ந்து வரும் மாணவ சமூகத்தின் சிந்தனையாற்றலை ஆட்சி அதிகாரம், காவல்துறை போன்றவற்றின் உதவி கொண்டு அடக்க முனையும் ஹிந்துத்துவம் இந்நாட்டில் எதற்கு முயல்கிறது என்பது வெள்ளிடைமலை.
இத்தகைய கருத்து சுதந்திரத்துக்கு எதிரான தொடர் தாக்குதல்களின் இறுதியாக, மூடநம்பிக்கைக்கு எதிராக செயல்பட்ட காரணத்தால் மூத்த கன்னட எழுத்தாளர் எம்.எம்.கல்புர்கி சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இக்கொலையின் விசாரணை வளையத்தில் ஹிந்துத்துவ பயங்கரவாதிகள் உள்ளனர்.
கருத்து சுதந்திரத்திற்கு எதிராக நடக்கும் வன்முறை சம்பங்களின் பின்னணியில் ஹிந்துத்துவ அமைப்புகள் உள்ளதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
இதற்கு தீர்வு என்பது பெரியார் திராவிட இயக்கங்கள், இடதுசாரி இயக்கங்கள், மாணவர் இயக்கங்கள், தலித் இயக்கங்கள், சிறுபான்மை இயக்கங்கள், அதன் சார்பு அரசியல் கட்சிகள், தமிழ் தேசிய சிறு பெரு இயக்கங்கள் ஒன்றிணைந்து கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான ஹிந்துத்துவ பயங்கரவாதத்துக்கு எதிராக களத்தில் இறங்கி போராடுவதே ஒரே வழி!
- யூசுஃப் ரியாஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக