கைப்பேசியில் அழைத்தது ஆயிஷாவுடைய மாமியார் தான்.அழைப்பை ஏற்பதற்கு முன் தன் கணவனை நோக்கிச் சொன்னாள்.
“ஏங்க !மாமிதாங்க போன் பண்ணுறாக…!!
ஆசிப் மனதுக்குள் சிரித்துக் கொண்டே சொன்னான்.
“எடுத்துப் பேசு! ஏன் லேட்டாச்சினு திட்டுவாக, வாங்கிக்க…”னு சொன்னான்.
ஆசிப்பைச் செல்லமாக முறைத்துக் கொண்டே,அழைப்பை ஏற்றாள்.காதர் பாட்டுச் சத்தத்தைக் குறைந்தான்.
“ஹலோ…”!
“………….”!
“இல்ல மாமி,இந்தா வந்துட்டோம்..அரை மணி நேரத்துல வூட்டுக்கு ,வந்துருவோம்..”
“……………….”!
“இல்ல,உங்க மகன்தான் லேட் பண்ணிட்டாக..!கூட்டாளிமார்களுக் கு,சட்டை வாங்கனும்னு…”
இதைக்கேட்டதும் பிடரியில் யாரோ,அடிச்சதுப்போல் மனைவியைத் திரும்பிப்பார்த்தான் ஆசிப்.அவள் முகத்தைச் சுருக்கி ,உதட்டைச் சுழித்து கெஞ்சலாகப் பார்த்தாள்.ஆசிப் சிங்கம் அதில் சிதைந்துப் போச்சி,”பாதகத்தி”இப்படிதானே செஞ்சிறா”,னு நினைத்துக் கொண்டிருக்கையிலேயே,ஆயிசா “இந்தா,”அவுகள்ட” கொடுக்குறேன் ,பேசுங்க “னு கைப்பேசியை ஆசிப்பிடம் நீட்டினாள்.வேறு வழியில்லாமல் போனை வாங்கிப் பேசினான்.
“ஹலோ …”
“…………,……….,….. …….,”
“எம்மா !நீம்பாட்ல திட்டாத.,கொஞ்ச நேரத்துல வந்துருவேன்..!மகன்காரன் மூத்தவன் என்ன செய்யிறான்..!?
“………..,”
“சரி! தூங்கட்டும், நீ சாப்பிட்டு,மாத்திரய போட்டுட்டுத் தூங்கு,நானும்,ஆயிசாவும் வீட்டுக்கு வந்து,சாப்பிட்டுட்டு சோத்துக்கு தண்ணி ஊத்திறோம்…!
“……………”
“ம்ம்…சரிம்மா வைய்யி”
பேசி முடித்து விட்டு,தன் மனைவியிடம் கைப்பேசியை நீட்டிக் கொண்டே,
“ஏம்ப்லா .!?உங்க மாமியா,மருமக சண்டயில என்னய மாட்டி விட்டே…”எனக் கேட்டான்.
“ஏங்க? மாமி ரொம்பத் திட்டுனாங்களோ…!? என தெரியாத மாதிரிக் கேட்டாள் .
“விக்டா”கீழக்கரை,மாயாகுளத்தை தாண்டி ,ஏர்வாடிக்கு செல்லுவதற்கு ,முன்னால் வரும் பெரிய வளைவு ஒன்றை ,மெதுவான வேகத்தில் வளைந்து வாகனம் செல்லுகையில் ,ஆசிப் ,காதரிடம் வண்டியை நிறுத்தச் சொன்னான்.
“ரோட்டோரம், யாரோ கெடக்குறாங்கப் பாரு”னு ஆசிப்பும்,காதரும் இறங்கி ,அந்த இடத்தை நோக்கி நடந்தார்கள்.நிலவு வெளிச்சத்தில் ,மயங்கி கிடந்தவனை புரட்டிப் பார்த்தார்கள்.அவன் மைதீன் தான்,ஆசிப்பின் பக்கத்து தெருவைச் சேர்ந்தவன் .மைதீனைப் பார்த்ததும்,இருவரும்,ஒருவரை ஒருவர் தயக்கத்துடன் பார்த்தனர் .காதர் ஆசிப்பிடம் கேட்டான் .
“என்ன மச்சான் செய்ய…!?
“மப்புல” மயங்கி கெடக்குறான்டா..இப்படியே விட்டுட்டுப் போனா “ஒன்னுக்கெடக்க ஒன்னு”ஆகிப் போகும்டா.. வண்டியில கொண்டுப் போயி அவன் வீட்ல எறக்கி விட்ருவோம்”
இருவரும் கைத்தாங்கலாகத் தூக்கி வந்து முன் இருக்கையில் மைதீனைத் திணித்தார்கள் .என்ன நடக்கிறது என்பதை கூட அறிய முடியாத நிலையில்தான் அவன் இருந்தான்.ஆசிப் ஆயிசாவுடன் அமர்ந்துக் கொண்டான்.வண்டி கிளம்பியது .
சரி….
யார் இந்த மைதீன்….!!??????
(தொடரும்….)
-சீனி ஷாஹ் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக