பர்ஜானாவும், பாத்திமாவும் சிறு வயது முதல் தோழிகள். இப்போது வயது அறுபதிற்கும் மேலாகிவிட்டது. இன்றும் தங்களது நட்பை தொடருகிறார்கள். வீட்டில் நடக்கும் நல்லது, கெட்டதுகளில் கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் நல்ல நட்பை பேணி வருகிறார்கள்.
பர்ஜானாவிற்கு இரண்டு பையன்கள். இரண்டு பேருமே வெளிநாட்டில் வேலை செய்து நல்ல நிலையில் இருப்பதால் அடிக்கடி வீட்டிற்கு வர முடியாவிட்டாலும் எப்போதாவது ரம்ஜான், பக்ரீத் போன்ற பண்டிகைகளுக்கு மட்டும் தனது மனைவி, பிள்ளைகளுடன் வந்து தனது அம்மாவை பார்த்து செல்வார்கள்.
மாதமாதம் சரியாக தனது அம்மாவிற்கு பணம் அனுப்பி விடுவார்கள். மாதம் முதல் வாரம் ஆகிவிட்டால் பர்ஜானாவை வெஸ்டர்ன் யூனியனில் பார்க்கலாம். பர்ஜானா தனது மகன்கள் வெளிநாட்டில் இருப்பதால் வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.
அதனால் தனது பிள்ளைகள் அனுப்பும் பணத்தை ஆடம்பரமாக செலவு செய்வதில் விருப்பம் உள்ளவராக இருந்ததால் புதிய, புதிய சேலைகளை வாங்குவது, விதவிதமாக சாப்பாடு ஆக்கி சாப்பிடுவது என்று மகிழ்ச்சியாக இருப்பார். தனது பையன்கள் வெளிநாட்டில் இருந்து எனக்காக பணம் அனுப்புகிறார்கள் அதனால்தான் நான் இப்படி மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று பலரிடமும் பெருமையடித்து கொள்வார்.
தான் வாங்கிய புதிய சேலையை தனது தோழி பாத்திமாவிடம் காட்ட அவர் வீட்டிற்கு செல்கிறார்.
“என்ன பாத்திமா எப்படி இருக்க”
“நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்க”
“எனகென்ன சூப்பரா இருக்கேன்” “புது சேலை வாங்கினேன், உன்கிட்ட காட்டலாம்னு வந்தேன்”.
“அப்படியா எடு பாப்போம்”
“அட நல்லா இருக்கே”
“யாரு உன் பையன் அனுப்பினானா” என்றால் பாத்திமா.
“இல்லடி. பையன் அனுப்புன பணத்துல இங்கேதான் வாங்கினேன். அவன் அனுப்புன பணத்தை வைச்சி நான் என்ன செய்யபோறேன்”. அதான் இப்படி எனக்கு பிடிச்ச மாதிரி செலவு பண்றேன்”. சந்தோசமா இருக்கேன்”
“சரி பாத்திமா, சாப்டாச்சா”
“இல்லடி இப்பதான் கஞ்சி காய்ச்சிகிட்டு இருந்தேன் நீ வந்துட்ட”
“கஞ்சியா? ஏன் நல்ல சாப்பாடு சாப்பிடலாம்லே”
“சேலைய பாரு, என்னடி சேலை இது, ஒரு நல்ல சேலை கட்ட வேண்டியதுதானே உன் பையன் தான் சம்பாரிக்கிறான்லெ”
“உன் பையன் மாதிரி என் பையன் என்ன வெளிநாட்டுலேயா சம்பாரிக்கிறான். அவன் இங்க சம்பாரிக்கிற பணம் குடும்ப செலவுக்கே சரியாகி விடுகிறது”,
“என்ன செய்ய என் பையன் வருசத்துக்கு இரண்டு, மூன்று சேலை எடுத்து தரான், எனக்கு அதுவே போதும்”.
“சரி பாத்திமா நான் வரேன்” டைம் ஆகிடுச்சி” என்று தனது வீட்டிற்கு சென்றார் பர்ஜானா.
வீட்டிற்கு நுழைந்தவுடன் போன் ஒலித்தது. “ஹலோ யாருங்க”
“நாந்தாம்மா காமில், நல்ல இருக்கீங்களா”
“நல்லா இருக்கேன் காமில், நீ எப்படி இருக்கே”
“நான் நல்ல இருக்கேன் மா, வர பக்ரீத் க்கு ஒரு மாதம் லீவு கிடைச்சிருக்கு இன்னும் இரண்டு நாள்ல வந்துடுவேன்” என்றான்
“சரிப்பா” என்று போன் வைத்து விட்டார் பர்ஜானா.
இன்னும் இரண்டு நாளுல்ல பையன் வருவதால், அவனுக்கு பிடித்த பலகாரங்கள் செய்வது, வீட்டை கழுவி சுத்தம் செய்து என்று தனது வேலைகளில் மும்முரமாக இறங்கி விட்டார்.
இரண்டு நாள் கழித்து விடியற்காலை உதயமானது. “அம்மா” என்று சப்தமிட்டு கதவு தட்டும் ஓசை கேட்டது. “கதவை திறந்தார் பர்ஜானா. வெளியே காமில். “அம்மா எப்படி இருக்கீங்க பார்த்து எத்தன நாள் ஆச்சு”,
“நீ எப்படி ராசா இருக்கே”
எல்லோரையும் வரவேற்று உள்ளே அழைத்து சென்றார்.
“ஏம்பா பசங்கள அழைச்சிட்டு வரல”.
“பசங்களுக்கு ஸ்கூல் லீவு கிடைக்கல”. அதான் தம்பி வீட்டுள்ள விட்டுட்டு வந்திருக்கேன்”. அவன் பார்த்துக்குவான்.
“அப்படியா சரி, பசங்கள பார்க்கலாம்னு ஆசையா இருந்தேன்.
அடுத்த தடவை வரும்போதாவது கூட்டிட்டுவாப்பா”
காமில் வந்த ஒரு மாதம் விறுவிறு வென்று ஓடியது. காமிலும் அவனுடைய சில வேலைகளை முடித்துக் கொண்டான். உண்மையில் அம்மாவை சந்திப்பதற்காக மட்டுமல்ல வேறு சில வேலையும், நோக்கமும் அவனுக்கு இருந்தது.
“அம்மா இந்தாங்க, இதுல பத்தாயிரம் ரூபாய் இருக்கு. வச்சிகுங்க”. என்று கொடுத்தான் காமில்.
வாங்கி வைத்துக் கொண்டார் பர்ஜானா.
இதை பார்த்துக்கொண்டிருந்த காமிலின் மனைவிக்கு கோவம் தலைக்கேறியது. காமிலை ரூமுக்கு அழைத்து திட்டினால்.
“எதுக்கு உங்கம்மாவுக்கு இவ்ளோ பணம், அதான் மாசமாசம் அனுப்புரீங்கள்ள அப்பறமென்ன” என்று பொரிந்து தள்ளினாள்.
“இல்லைடி, அவங்களுக்கு யாரு இருக்கா, இவ்வளவு பணத்த அவங்களால செலவு பண்ண முடியாது. எப்படியும் அவங்களுக்கு பிறகு நமக்குதான் வர போகுது, இந்த வீடு பல லட்சம் போகும் இதுவும் நமக்குதான் வர போகுது, அப்பறமென்ன”. என்று அவளின் கோவத்தை தணித்தான் காமில்.
எதேச்சையாக பக்கத்துக்கு ரூமுக்கு செல்லும்போது இவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்த பர்ஜானா விற்கு தூக்கி வாரிபோட்டது. என் பையனா இப்படி பேசுறான். மனதுக்குள் வெதும்பினாள். அவனை எப்படிவெல்லாம் நான் வளர்த்தேன். அவனோ என்மீது பாசம் இருப்பதுபோல் நடிக்கிறானே.
அப்போது பாத்திமாவின் பேரன் வந்து “உங்கள பாடி கூட்டி வர சொன்னாங்க” என்றான்.
“சரி போ வரேன்” என்றார்.
பாத்திமா வீட்டை நோக்கி கிளம்பினால். பாத்திமா வீட்டில் பார்த்த காட்சி அவளை இன்னும் மனம் வெதும்ப செய்துவிட்டது.
பாத்திமா வீட்டில் எல்லோரும் கூட்டமாக உட்கார்ந்திருந்தார்கள். பாத்தி மா நடுவில் உட்கார்ந்திருந்தாள். அவள் முகத்தில் மகிழ்ச்சி பொங்கியது. பையன்களும், பேரன், பேத்திகளும் கேக்கை எடுத்து பாத்திமாவின் வாயில் ஊட்டிவிட்டனர். கை கொடுத்து மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர்.
அப்போது உணர்ந்தாள் பர்ஜானா, வாழ்க்கைக்கு தேவை பணம் அல்ல, பாசம்தான் என்று.
- வி.களத்தூர் பாரூக்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக