தணலின் மீது விழுந்த தூறல் போல தாங்கள் வஞ்சிக்கப்படுகிறோம், ஆனால் கேட்பாரற்று அனாதைகளாகிவிட்டோம் எனும் வேதனை நெருப்பில் வெந்து கொண்டிருந்த கஷ்மீரத்து முஸ்லிம்கள் மனதில் ஒரு நம்பிக்கைச் சுடராக உன்னதமான தீர்ப்பு வெளியாகி உள்ளது. அதையும் நமது இராணுவ நீதிமன்றம் வழங்கியுள்ளதுதான் நமது கண்களை ஆனந்தத்தில் பனிக்கச் செய்கிறது.
பீடிகை போதும். நேராக விஷயத்திற்கு வருகிறேன். கடந்த 2010 ஏப்ரல் 29 அன்று கஷ்மீரத்து இளைஞர்கள் ரியாஸ் அஹமத், முஹம்மது ஷஃபீ, ஷாசத் அஹமத் ஆகிய மூவரையும் நமது இராணுவத்தினர் அநியாயமாக படுகொலை செய்தனர். ஒண்ணறை இலட்சம் ரூபாயை கைமாறாக வாங்கிக்கொண்டு பஷீர் அஹமது எனும் ஒரு போலீஸ் அதிகாரி இந்த மூவரையும் இராணுவ அதிகாரி வசம் ஒப்படைத்துள்ளான். [காசுக்காக இவனைப் போன்றவர்கள் எதையெல்லாம் கூட்டிக் கொடுப்பார்களோ?]
அந்த வீரபராக்கிரம இராணுவ அதிகாரியும் அவரோடு பணியாற்றிய மற்றவர்களும் சேர்ந்து இந்த அப்பாவி இளைஞர்களை தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தி போலியாக கொடூரமாக என்கவுண்டர் படுகொலை செய்துள்ளார்கள்.
வழக்கம் போல பணப் பரிசுகளும், பதவி உயர்வும் கிடைக்கும் என மனப்பால் குடித்துக்கொண்டிருந்த இந்த பாதகத்தை செய்தவர்களுக்கு பூ பறிக்க போனவனை பூ நாகம் தீண்டிய கதையாக பரிசுகளுக்கு பதிலாக ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது நமது இராணுவ நீதிமன்றம்.
வருடம் ஐந்து கடந்த பின் கிடைத்த நீதியே என்றாலும் இராணுவ சிறப்பு சட்டங்களால் மரணத்தின் விளிம்பில் கிடந்த நீதி தேவதைக்கு இந்த தீர்ப்பு பிராண வாயு போல் அமைந்துள்ளது எனலாம். இதுபோன்ற ஒரு தீர்ப்பு காங்கிரஸ் காலத்தில் வந்திருந்தால் நமது பரிவார் பஜ்ரங்குகள் பலவித கூப்பாடுகள் போட்டிருப்பார்கள். இராணுவத்தின் கை கட்டப்படுகிறது எனவோ அல்லது சிறுபான்மையினரை தாஜா செய்கிறது காங்கிரஸ் எனவோ இன்னும் வாய்க்கு வந்தபடி வசை மாறி பொழிந்திருப்பார்கள். பீகார் தேர்தலோடு பின்னிப் பிணைத்திருப்பர். எது எப்படியோ நீதியின் நாடி துடிக்க துவங்கியுள்ளது. இராணுவ நீதி மன்றத்திற்கு ஒரு ராயல் சல்யூட்!
S.M. ரஃபீக் அஹமது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக