"மு.க.ஸ்டாலின் தி.மு.க.வின் தலைவரானால் பாஜக, திமுக, தேமுதிக கூட்டணி ஏற்படும். இது அதிமுக அரசை வீழ்த்தும்" என்று சுப்பிரமணியன் சுவாமி டிவிட்டரில் கொளுத்திப் போட்டதற்குப் பிறகு அரசியல் களம் பரப்பரப்பாகி விட்டது. அரசியல் விமர்சகர் மத்தியில் மட்டுமல்லாமல் சாதாரண பொதுமக்கள் மத்தியில் இது குறித்து பேசப்படுகிறது. சுவாமியைப் பொருத்தவரையில் அடிக்கடி ஏதாவது பரப்பரப்பான விசயங்களைக் கூறி அனைவர் பார்வையும் தன் மீது விழ வைப்பது, அதன்மூலம் தான் ஒரு கிங் மேக்கர் என்று நினைத்துக் கொண்டிருப்பவர். ஆனால் மக்கள் அவரை ஜோக்கராகத்தான் பார்கிறார்கள் என்பது வேறு விஷயம்.
விரைவில் நடைபெற இருக்கின்ற தமிழக சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்த கருத்தும், தற்போதைய திமுக குறித்து அவர் கூறிய கருத்தும் பலரது புருவத்தை உயர்த்தி இருக்கிறது என்பது உண்மையே. ஏனென்றால் வருகிற சட்டமன்றத் தேர்தலில் திமுக, காங்கிரஸ் உடன்தான் கூட்டணி அமைக்கும் என்று பொதுவான மக்கள் மன்றங்களில் பேசப்படுகிற நிலையில் இவ்வாறு அவர் கூறி இருக்கிறார். சுவாமி சொன்ன கருத்துக்களில் மிக முக்கியமானது "இந்துத்துவ திமுகவை நான் ஆதரிக்கிறேன்" என்று கூறியது. திராவிட கொள்கை உணர்வு இன்னும் கொஞ்சம் மிச்சம் இருப்பது திமுகவில் மட்டும்தான். அதுவும் திமுக தமிழகத்தில் உள்ள இரண்டு பெரிய கட்சிகளில் ஒன்று.
"கலைஞர் கருணாநிதியை சீனியர் தீய சக்தி" என்று விமர்சிக்கும் சுவாமி மு.க.ஸ்டாலினைப் பாராட்டுகிறார். இதில் வியப்பேதும் இல்லை. மு.க.ஸ்டாலின் திருக்கோவிலூர் கோவிலுக்கு சென்றபோதும், திமுகவில் இருப்பவர்கள் 90% இந்துக்கள் என்று கூறியபோதும் முதலில் மகிழ்ச்சியடைந்து பாராட்டி வரவேற்றவர்கள் பாஜகவினர்தான் என்பது கவனிக்கத்தக்கது. பல்வேறு விவாதங்கள் எழுப்பி இருக்கும் இந்த விசயத்தில் திமுக இதுவரை எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. ஒருவேளை "அதிக சீட், ஆட்சியில் பங்கு" என்று முரண்டு பிடிக்கும் காங்கிரசை வழிக்கு கொண்டு வர திமுக இந்த சூழ்நிலையை தனக்கு சாதகமாகக்கூட பயன்படுத்திக் கொள்ளலாம். அதேபோல பாஜக, அதிமுகவை வழிக்கு கொண்டு வருவதற்காகவும் சுவாமியை வைத்து இப்படி பேச வைத்திருக்கலாம்.
அப்படியும் ஒருவேளை திமுக, பாஜக கூட்டணி அமையும் பட்சத்தில் கண்டிப்பாக நாம் 1996-2001 ல் திமுகவின் ஆட்சியை நினைவுபடுத்திக் கொள்வது நல்லது. ஒடுக்கப்பட்ட சிறுபான்மை மக்களுக்கு எதிரான மனநிலையை கொண்டிருந்தது அந்த ஆட்சி. பாஜக வை திருப்திப்படுத்துவதற்காக அவர்கள் நடந்து கொண்ட முறை கடுமையான மனக்காயங்களை ஏற்படுத்தியது சிறுபான்மை மக்களிடம். அது இன்றுவரை தொடர்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. அடிக்கடி ஏற்படும் கலவரங்களும், தேடுதல் வேட்டை என்ற பெயரில் வீடு புகுந்து அடுக்குமுறை கட்டவிழ்த்து விட்டதும் அதிகமாக நடந்தது. தமிழகத்தில் நடந்த மிகப்பெரிய கலவரம் அந்த ஆட்சியில்தான் நடைபெற்றது. அதிகமான சாதிக் கலவரங்கள் தலைவிரித்தாடியதும் அப்போதுதான். அந்த காலத்தில்தான் பாஜக இங்கு நன்றாக கால் ஊன்றியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்துத்துவத்தை இங்கு புகுத்தியது எம்.ஜி.ஆர். என்றால் அதை வளர்த்ததில் விஜயகாந்த் வரை பலருக்கும் பங்கு உண்டு. அதில் முக்கியமானவர்கள் கலைஞர் கருணாநிதி, செல்வி. ஜெயலலிதா, வைகோ போன்றவர்கள்.
தமிழகத்தைப் பொருத்த வரையில் பாஜகவால் தனித்து களம் கண்டு வெற்றிபெற முடியாது. அதனால் வருகிற சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடவே விரும்புகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இரு பெரிய கட்சிகளுக்கும் மாற்றாக பல கட்சிகளை ஒருங்கிணைத்து நின்றும்கூட அவர்களால் பெரிய வெற்றியைப் பெற முடியவில்லை. மோடி மேஜிக்கும் இங்கு வேலை செய்யவில்லை. ஆகையால் வரக்கூடிய தேர்தலில் இரு பெரிய கட்சிகளில் ஏதாவது ஒரு கட்சியுடன் கூட்டணி வைக்க விரும்புகிறது. இதில் பாஜக வின் முதல் சாய்ஸ் அதிமுகதான். அதற்கு நாடாளுமன்றத்தில் அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்கள் இருப்பதும் ஒரு காரணம். கொள்கை அளவில் பல விசயங்களில் ஒத்துப் போவதும் ஒரு காரணம். இதைத்தான் டெல்லி பாஜகவும் விரும்புகிறது. ஆனால் அதிமுக இதுவரைக்கும் அதற்கு சாதகமான பதிலை சொல்லவில்லை. தனித்து போட்டியிடுவதில் உறுதியாக இருக்கிறது. அல்லது 2004 நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்பட்ட முடிவுபோல் அமைந்துவிடுமோ என்று அஞ்சுவதாகக்கூட கருதலாம். பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட அதிமுக தயங்குவது வெளிப்படையாகத் தெரிகிறது.
இதனால் பாஜகவிற்கு இருக்கும் மற்றொரு சாய்ஸ்தான் திமுக. பல்வேறு நெருக்கடிகளை எதிர் கொண்டிருக்கும் அவர்களை எப்படியாவது சம்மதிக்க வைத்துவிடலாம் என்று நம்புகிறது. திமுக இன்று பலகீனமாக இருக்கும் தருணத்தில் தமக்கு விமோசனம் ஏற்படும் என்று நம்பி மீண்டும் பாஜகவின் சூழ்ச்சியில் சிக்கி பாஜகவுடன் கூட்டணி அமைத்தால், அது திமுகவிற்கே பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அதுபோலவே சிறுபான்மை மக்களுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், தமிழக நலனிற்கும் எதிராகவே அந்த கூட்டணி அமையும். "பாசிசம் சிலரை எதிர்த்து அழிக்கும், சிலரை அரவணைத்து அழிக்கும்" என்பதை தமிழகத்தின் முதுபெரும் அரசியல் தலைவர் கலைஞர் கருணாநிதி நன்கு அறிவார் என்று நம்புகிறேன். அதன் சமீபத்திய உதாரணம்தான் தேமுதிக. கடந்த தேர்தலில் தேமுதிகவை வைத்து பல இடங்களில் காலூன்றியது பாஜக. ஆனால் தேமுதிக தனது வாக்கு வங்கியில் பாதியை இழந்தது பாஜகவுடன் கூட்டணி வைத்த பிறகுதான். தேமுதிகவில் குறிப்பிடத்தக்க அளவில் இருந்த சிறுபான்மை இளைஞர்கள் அந்தக் கட்சியை விட்டு விலகி விட்டார்கள்.
மத்தியில் பாஜக அரசு இருப்பதால் ஏதாவது ஆதாயம் தேடுவதற்காக அவர்களுடன் கூட்டணி வைக்க முற்படுபவர்கள் தமிழகத்தில் பாஜகவுடன் சேர்ந்து காணாமல் போவது உறுதி. இது திமுகவிற்கு மட்டுமல்ல அனைத்துக் கட்சிகளுக்கும் பொருந்தும். பாஜகவை தனிமைப்படுத்துவதே தமிழக நலனிற்கு உகந்தது.
- வி.களத்தூர் சனா பாரூக்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக