Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

சனி, 27 ஜூன், 2015

யார் மீட்டெடுப்பார்கள்? காயிதே மில்லத் கட்டிய அரசியல் சாம்ராஜ்யத்தை – நெல்லை ஆதில்

தாமிரபரணியின் தாயகமான நெல்லை மாவட்ட்த்தின் பேட்டை நகரமே வாழ்க்கையின் இருள் சூழ காட்சியளித்த நேரம்(இன்றும் அப்படித்தான் காட்சி அளிக்கிறது) 1896ம் ஆண்டு ஜூன் திங்கள் 5ஆம் நாள் கடலைப்பிளந்து கொண்டு சூரியன் இந்த உலகுக்கு வெளிச்சம் அளிப்பதைப்போல இருளைப்பிளந்து கொண்டு இந்த சமூகத்தின் விடியல் பிறந்த நாள். ஆம் கண்ணியமிகு தலைவர் காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயில் சாகிப் அவர்கள் பிறந்தார்கள்.காயிதே மில்லத் என்றால் மக்களின் வழிகாட்டி என்று பொருள் அதற்கேற்ப மக்களின் வழிகாட்டியாக திகழ்ந்தார் இஸ்மாயில் சாகிப் அவர்கள்.

பார்போற்ற வேண்டிய இவருடைய வாழ்க்கையை, தியாகத்தை ,திறமையை,சமுதாய அக்கரையை,தமிழ்ப்பற்றை நாம் நினைவுகூர்ந்து இச்சமூகத்தின் அடுத்த தலைமுறைக்கு கற்ப்பித்து இருக்கிறோமா?அல்லது பத்தோடு பதிணொன்றாக நம்முடைய அலட்சியத்தால் அவருடை பணிகளை தூற்றுகிறோமா? என்று சிந்தித்து பார்க்க நாம் கடமைப்பட்டுள்ளோம்.
இங்கு நம் மனதில் சில கேள்விகள் எழலாம் நாம் ஏன் அவரைப்பற்றி இளைய தலைமுறையினருக்கு பயிற்றுவிக்க வேண்டும்? என்று. இந்த சமுதாயம் மலச்சிபெறவும் ஒரு தனி மனிதன் எவ்வாறு வாழ வேண்டும் என்றும் நமக்கு வாழ்ந்து காட்டிய சமூக இஸ்லாமிய அரசியல் போராளி அவர்.
இன்று வீதிகளில் விளையாடும் சிறுவர்களிடமும் சரி அல்லது இணையத்தில் இனையும் இளைஞர்களிடத்திலும் சரி காயிதே மில்லத் அவர்களைப்பற்றிகொண்டு சேர்த்திருக்கிறோமா என்று நம்மை நாம் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய தருணம் இது.
காயிதே மில்லத் அவர்களின்சமகால அரசியல் ஆளுமைகளான பெரியாரையும், அண்ணாவையும், காமராஜரையும் அவர்களது வழித்தோன்றல்கள் நினைவூட்டிக் கொண்டே இருக்கின்றனர். அந்த நினைவூட்டலில் போட்டிபோடுகிறனர் ஆனால் அவர் முழுக்க முழுக்க எந்த சமுதாயத்திற்காக உழைத்தாரோ அந்த சமுதாயத்தினர் நினைவுகூற மறந்துவிட்டனர். அந்த சமூகம் மட்டும் மறக்கவில்லை மாறாக அவர் சார்ந்த கட்சியும் அவரை மறந்தது தான் மிகவும் வேதனைப்படக்கூடிய விஷயம்.
காந்தியடிகள் தலைமையில் ஒத்துழையாமை இயக்கம் இந்தியா முழுதும் தீவிரம் அடைந்த நேரம் அது. இஸ்மாயில் சாகிப் அவர்கள் தன் பி.ஏ பொதுத் தேர்வை எழுதாமல் ஒத்துழையாமை இயக்கத்தில் இணைந்து விடுதலைக்காக போராடினார்.அதுவே தன் முதல் போராட்டமாக பதிவு செய்தார்.
1936_ம் ஆண்டு இஸ்மாயில் சாகிப் அவர்கள் இந்திய நாட்டில் முஸ்லிம் சமூகமும்,தமிழ்ச்சமுகமும் அரசியல் அதிகாரத்தில் பங்களிக்க வேண்டும் என்று முஸ்லிம்லீக் கட்சியில் சேர்ந்தார். 1945_ம் ஆண்டில், தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் ஆனார்.
இந்தியா பிரிவினை அடைந்த நேரம் 1948ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13 மற்றும் 14 ஆகிய இரு நாட்களில், பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் அகில இந்திய முஸ்லிம் லீக் கவுன்சிலின் கடைசிக் கூட்டம் நடைபெற்றது. 1906 ஆம் ஆண்டில் துவக்கப்பட்ட அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சிக் கவுன்சிலின் கடைசிக் கூட்டம் அது. இந்தியா, பாகிஸ்தான் என இரு நாடுகளாக இந்தியா பிரிந்துவிட்ட நிலையில் கட்சியைக் கலைத்து விடுவதற்காகக் கூடிய கூட்டம் அது.
கூட்டத்தில் எடுத்த முடிவுகளின்படி கட்சி இரண்டாகப் பிரிக்கப்பட்டது. பாகிஸ்தானுக்கு ஒரு பொறுப்பாளரும், இந்தியாவுக்கு ஒரு பொறுப்பாளரும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இரு பொறுப்பாளர்களும் அவரவர் நாட்டில் மூன்று மாதங்களுக்குள்ளாக கட்சிக் கூட்டத்தைக் கூட்டி எதிர்கால நடவடிக்கைகளைத் தீர்மானித்துக் கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டது. பாகிஸ்தான் பொறுப்பாளராக லியாகத் அலிகான் அவர்களும், இந்தியாவுக்கான பொறுப்பாளராக நமது கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்தும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
இந்தியாவில் உள்ள நான்கு கோடி முஸ்லிம்களைப் பாதுகாக்கின்ற பெரும் பொறுப்பு ஒரு தமிழனின் தோள்களில், நம் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்தின் தோள்களில் அன்று கராச்சியில் சுமத்தப்பட்டது.
தன் முழு பொறுப்பையும் உடனடியாகவே செயல்படுத்த தொடங்கினார் ஆம் கூட்டம் முடிந்ததும் பாகிஸ்தான் பிரதமர் அனைவருக்கும் ஒரு விருந்தளித்தார். விருந்தின் முடிவில் லியாகத் அலிகான் காயிதே மில்லத்திடம் இந்தியாவில் உள்ள முஸ்லிம்களுக்கு என்ன பிரச்சினை என்றாலும், என்ன உதவி என்றாலும் நாங்கள் செய்யத் தயார் என்றார். அப்போது தெள்ளத் தெளிவாக, ஆணித்தரமாக காயிதே மில்லத் சொன்னார்.
“நீங்கள் ஒரு நாட்டினர். நாங்கள் வேறு நாட்டினர். எங்கள் நாட்டு முஸ்லிம்களின் நன்மை தீமைகளை நாங்களே பார்த்துக் கொள்வோம். அதில் நீங்கள் தலையிட வேண்டியதில்லை. எங்கள் நாட்டு முஸ்லிம்களுக்கு நீங்கள் ஏதேனும் நன்மை செய்ய விரும்பினால், உங்கள் நாட்டிலுள்ள சிறுபான்மையினருக்கு (இந்து, சீக்கியர், கிறித்துவர்) ஒரு துயரமும் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.இங்கு நாம் கவணிக்க வேண்டிய முக்கியமான வரிகள் சிறுபான்மையினரை பாதுகாத்துக்கொள்ளுங்கள் என்று இப்படி கூறும் ஓர் அதிசிய தலைவரை எங்கும் காண முடியாது.எவ்வளவு ஆழமும், அர்த்தமும் பொதிந்த வேண்டுகோள் அது!
இந்தியா திரும்பிய காயிதே மில்லத் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைக் கூட்டிஅதன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.செத்த பாம்பை ஆட்டிக்கொண்டிருக்கிறார் பேட்டை இஸ்மாயில் என நேருவும், காங்கிரசாரும் வர்ணிக்கத்தொடங்கிவிட்டனர் அதனை கண்டு கொள்ளாமல் தன் வெற்றிப்பயணத்தை துவங்கினார்.

அப்போது கவர்னர் ஜெனரலாய் இருந்த ராஜாஜி, காயிதே மில்லத்தை நேரில் அழைத்து, பாகிஸ்தான் முஸ்லிம் லீகிலிருந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு சொத்துக்கள், பணப் பரிமாற்றம் ஏதேனும் செய்ய வேண்டியதிருந்தால் அதற்கு வேண்டிய உதவிகள் அனைத்தையும் தான் செய்வதாகக் கூறி பார்ப்பன ஆழம் பார்த்தார். வேற்று நாட்டிலிருந்து தங்கள் கட்சிக்கு எந்த உதவியும் தேவை இல்லை நாங்களே கட்சி நடத்திக் கொள்வோம் உங்கள் பருப்பை எங்களிடம் வேகவைக்கப் பார்க்காதீர்கள் என ராஜாஜியிடம் காயிதே மில்லத் தெரிவித்து விட்டார்.
நாடு என்று வந்தால் நான் முதலில் இந்தியன் கடைசியிலும் இந்தியன், மார்க்கம் என்று வந்தால் நான் முதலில் முஸ்லிம் கடைசியிலும் முஸ்லிம் என்ற கோட்பாட்டிற்கிணங்க தன் வாழ்க்கையை அமைத்துக்கொண்டார்.
ஒரு தலைவனாக,ஒரு முஸ்லிமாக,ஒரு இந்தியனாக,ஒரு தமிழனாக அவர் ஆற்றிய பணி இன்றுவரை எந்த அரசியல்வாதியாலும் சாத்தியப்படவில்லை.
1949ம் ஆண்டு அரசியல் நிர்ணய சபை கூடி இந்தியாவின் தேசிய மொழியைப் பற்றி விவாதித்த போது அது தமிழாக மட்டும் தான் இருக்க முடியும் என்று மிடுக்குடன் கூறினார்.
“ஒரு மொழி இந்திய மொழியாக மட்டும் இருந்தால் போதாது. அம்மொழி இந்நாட்டின் பழமையான மொழியாகவும் இருக்க வேண்டும். அத்தகைய மொழியையே இந்நாட்டின் தேசிய மொழியாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கருத்து இங்கே முன்வைக்கப்பட்டது.
அக்கருத்தை ஏற்று அரசியல் நிர்ணய சபை தேசிய மொழி பற்றிய முடிவை எடுக்குமானால், ஒரு உண்மையை இச்சபை முன்பு துணிவோடு கூற விரும்புகிறேன். இந்த நாட்டு மண்ணில் பேசப்பட்ட மொழிகளில் மிகவும் பழமையானதும், ஆரம்ப காலத்தில் இருந்து பேசப்பட்டு வரும் மொழியாக இருப்பதும் தமிழ்தான். எனது கூற்றை எந்த வரலாற்று ஆசிரியராலும் மறுக்க முடியாது. எந்தப் புதை பொருள் ஆராய்ச்சியாளராலும் எதிர்க்க முடியாது. உயர்தரமான இலக்கிய வளங்களும், நயங்களும் நிறைந்த மொழி தமிழ். இது எனது தாய் மொழி என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். அம்மொழியை நான் நேசிக்கிறேன்.
அம்மொழியைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன். பழமையான மொழியைத்தான் இந்நாட்டின் தேசிய மொழியாக்க வேண்டுமென்றால் இந்தியாவின் தேசிய மொழியாகத் தமிழைத்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்”இது அவர் பேசிய வரலாற்றின் வைர வரிகள்.இதன் மூலம் அவர் தமிழுக்கும்,தமிழர்களுக்கும் அரும்பாடுபட்டிருக்கிறார்.
தமிழுக்காக மட்டுமல்லமாநிலப் பிரிவினையின்போது தமிழன் இழந்த மண்ணுக்காகவும் காயிதே மில்லத் நாடாளுமன்றத்தில் வாதிட்டார். தேவிகுளம், பீர்மேடு தமிழனிடமிருந்து பறிபோனபோது, குளமாவது மேடாவது என்று காமராசர் குதர்க்கம் பேசினார். ஆனால் 24.12. 1955 அன்று நாடாளுமன்ற மேலவையில் மாநில எல்லைகள் சீரமைப்புக் கமிஷன் அறிக்கை மீது நடந்த விவாதத்தின் போது தேவிகுளம், பீர்மேடு தமிழ்நாட்டின் பகுதிகள் என காயிதே மில்லத் வாதிட்டார். திராவிடச் சிக்கல், இந்தியச் சிக்கல் எதுவும் இன்றி தமிழர் பக்கம் நின்று கச்சிதமாக வாதிட்டார் இந்த தென்பாண்டித் தமிழர்.ஆனால் இன்றோ இந்த தமிழ்ச்சமூகம் யாரையெல்லாமோ போற்றுகிறது தனக்காக குறல் கொடுத்த இந்த தமிழனை மறந்து விட்ட்து.
இன்றைய இளைய தலைமுறை குமுறுகிறது இலங்கை தமிழர்களின் பிரச்சனை பற்றி ஆனால் 40 ஆண்டுகளுக்கு முன்னரே நாடாளுமன்றத்தில் குமுறினார் கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்கள்“இந்தியாவிலிருந்து இலங்கைக்குச் சென்ற தொழிலாளர்கள்தான் அந்நாட்டை வளப்படுத்தினார்கள். செழிப்புள்ளதாக்கினார்கள். நமது மக்களின் உழைப்பின் பலனாகவே இலங்கை வளம் மிக்கதானது. நாலைந்து தலைமுறையாக நமது நாட்டைச் சேர்ந்தவர்கள் அத்தீவில் நிரந்தரமாக வாழ்ந்து வருகிறார்கள்.1947 ஆம் ஆண்டில்கூட அன்றைய இலங்கைப் பிரதமர் டி. எஸ். சேன நாயகா, இலங்கை வாழ் இந்தியர்களுக்கு குடியுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்தார். ஆனால் குடியுரிமை வழங்குவதற்கு பல நிபந்தனைகளை விதித்திருக்கிறார்கள். குடியுரிமை பெற விரும்புவோர் மீது அநாவசியமான நிபந்தனைகளை விதிக்காமல் அனைவருக்கும் குடியுரிமை வழங்க வேண்டும்.”இவ்வாறு தன் வாதத்தை வெளிப்படுத்தினார்.
இலங்கை தமிழரை வைத்து அரசியல் லாபம் பார்க்கும் தமிழ் தேசிய கட்சிகள் எங்கே?எந்த தன்னலமும் இல்லாது நீதிக்கு சாட்சி பகரும் காயிதே மில்லத் எங்கே.
1962ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கேரள மானிலம் மஞ்சேரி தொகுதியில் நின்று தொகுதிக்கே செல்லாமல் வெற்றி பெற்ற ஒரே தலைவர் தான் இஸ்மாயில் சாகிப் அவர்கள் அதுபோலத்தான் 1967 மற்றும் 1971 நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலிலும் பிரச்சாரத்திற்க்குக்கூட தொகுதிக்கு செல்லாமல் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரசியல் வரலாற்றில் ஒரு மைல்கல்லைப் பதித்தார்.
பொதுவாழ்வில் நேர்மைக்கு நிரூபணமாய் விளங்கிய காயிதே மில்லத் அவர்கள் சொந்த வாழ்வில் எளிமைக்கு இலக்கணமாய்த் திகழ்ந்தார்.குரோம்பேட்டையில் ஒரு சிறிய வீடு. வந்தவர்களை அமரவைக்க போதுமான அறையணிகள் இருக்காது. குரோம்பேட்டையில் இருந்து மின்சார ரயிலில் புறப்பட்டு, கடற்கரை ரயில் நிலையத்தில் இறங்கி, ரிக் ஷாவில் ஏறி மண்ணடி கட்சி அலுவலகம் செல்வார்.அவரிடம் சொந்தமாக ஒரு கார் கூட இருந்திருக்கவில்லை  அல்லது இருக்கவிருப்பப்படவில்லை.
உடல் நலக்குறைவால் இஸ்மாயில் சாகிப் அவர்கள் 1972ம் ஆண்டு இறைவனடி சேர்ந்தார் அவருடைய இறுதி சடங்கில் பெரியார் கலந்து கொண்டு கண்ணீர் மல்க சொன்னார் “தம்பி..,தம்பி..,போயிட்டீங்களா?இறைவன் உங்களுக்குப் பதிலாக என்னை எடுத்திருக்கலாமே என்று.இந்த வரியினை எழுதும் போது எண் கண்களும் கண்ணீரால் நனைகிறது.இப்படி பட்ட ஒரு தலைவரைத்தான் இந்த தமிழ்ச்சமூகமும்,முஸ்லிம் சமூகமும் நினைவுபடுத்த மறந்துகொண்டிருக்கிறது.இந்த சமூகத்திற்க்கு விடியல் பிறக்கவேண்டும் என்று சொன்னால் நாம் ஒவ்வொருவரும் காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் அவர்களின் வாழ்க்கையை கற்று நம் வருங்கால தலைமுறைக்கும் கற்று கொடுக்க கற்று கொடுப்போம்.

- நெல்லை ஆதில்
E.mail : aadhilmmd@gmail.com
Contact:  +91-8220527070

1 கருத்து:

  1. Assalamu Alaikkum
    varusam 1 murai jakkath kodutthaal podum yendru solreenga !

    aanal neenga mattum yen varusa varusam jakkath vanga varrenga ?

    Aduvum sunnath jamath kaaranga kitta
    yen sir ippadi ?

    பதிலளிநீக்கு