சமீபத்தில் மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இரண்டு சிறுவர்கள் தற்கொலை செய்து கொண்டது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சங்கர் பாண்டி (15), சஞ்சய் கண்ணன் (15) ஆகிய இரண்டு சிறுவர்களும் கடந்த ஆண்டு 9ம் வகுப்பு தேர்வில் ஃபெயிலாகி விட்டனர். அதன்பிறகு ஃபெயிலான இரண்டு பாடங்களையும் தற்பொழுது எழுதி இருந்தனர். அதற்கிடையில் இரண்டு சிறுவர்களும் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து உள்ளனர். இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றது.
இந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையுமே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது. இதனுடைய ஆரம்பம் எங்கிருந்து பார்த்தால்,பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களின் ரிசல்ட் வெளியானவுடன் குறைந்த மதிப்பெண்கள் எடுப்பது அல்லது ஃபெயிலானவுடன் வாழ்க்கையே முடிந்து போனது என்ற கண்ணோட்டத்தில் தற்கொலைக்கு முயல்கின்றனர். சிலர் தற்கொலையும் செய்துள்ளனர்.
தேர்வுகளைப் பொறுத்தவரை பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வுகள் பொதுத் தேர்வுகளாக பார்க்கப்படுகிறது. அதை, வைத்து மாணவர்களின் கல்வி தராதரத்தை முடிவு செய்ய முடியாது. ஆனால், இன்றைய சூழலில் அப்படி ஒரு மாயையை மாணவர்களிடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால், இந்த தேர்வுகளில் ஃபெயிலாகி விட்டால் அல்லது குறைந்த மதிப்பெண்கள் பெற்றுவிட்டால், நாம் மேற்கொண்டு படிக்க முடியாது அல்லது இதோடு நம்முடைய வாழ்க்கையே முடிந்து போய்விட்டது என்ற சூழலை பள்ளிகளும், அதற்கு ஆதரவாக பெற்றோர்களும்,இதற்கெல்லாம் மூலமாக மீடியாக்களும் இந்தக் கருத்தை ஆழமாக மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தி வைத்துள்ளனர்.
இதனால், மாணவர்கள் இதில் எப்படியாவது ஃபாஸ் ஆகிவிட வேண்டும் அல்லது அதிக மதிப்பெண்கள் வாங்க வேண்டும் என்று தூங்காமல், உடல் ஆரோக்கியத்தைப் பற்றி கவலைப்படாமல் படிக்கின்றனர். எல்லாவிதமான ஸ்பெஷல் வகுப்புக்களிலும் கலந்து கொள்கின்றனர். பெற்றோர்களும் குழந்தைகளின் படிப்பில் அக்கறை காட்டி தங்களுடைய உடலுக்கும் உள்ளத்துக்கும் மனஉளைச்சலை ஏற்படுத்தி கொள்கின்றனர்.
இதனுடைய பலன்கள் தேர்வு முடிவுகளில் கிடைக்காமல் போகும்பொழுது, விரக்தியின் மனப்பான்மைக்கு செல்கின்றனர். உடனே தற்கொலை செய்து கொள்கின்றனர். தற்கொலை செய்து கொள்பவர்களின் மதிப்பெண்களை பார்த்தால் நல்ல மதிப்பெண்களாகத்தான் இருக்கும். ஆனால்,அவர்களுக்கு ஐநூறுக்கு ஐநூறு வேண்டும். இல்லையேல் 1200க்கு 1200 கிடைக்க வேண்டும். இல்லையென்றால் பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், சக தோழிகளுக்கும், இந்த சமூகத்துக்கும் பதில் சொல்ல முடியாது என்ற சூழலைலே இந்த விபரிதமான முடிவுக்கு தள்ளப்படுகின்றனர்.
அதனால், இதுபோன்ற சூழல்களில் இருந்து மாணவ சமூகத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கின்றது. மதிப்பெண்களை கொண்டு கல்வியின் அளவை மதிப்பிடாமல், அதை ஒரு தூண்டுதல் காரணியõக வைத்துக் கொள்ளலாம்.
மதிண்பெண்களை மட்டுமே பார்த்து, ஒரு மாணவனை ஒட்டுமொத்த சமூகமும் அழுத்தம் கொடுக்கும் போது, அவனால் என்ன செய்ய முடியும்? பெற்றோர்களும் தங்களின் பிள்ளைகள் கல்வியின் மீது அக்கறை எடுக்கத்தான் செய்கின்றார்கள். அதற்காக பெற்றோர்களையும் குறை சொல்ல முடியாது. இன்றைய கல்வி முறையும் நிறைய மாற்றத்திற்குள்ளாக்கப்பட வேண்டியிருக்கின்றது. கல்வி முறை அவனை நல்ல பண்பாளராக உருவாக்க முனைய வேண்டும்.
“எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே, அவன் நல்லவன் ஆவதும்,தீயவன் ஆவதும் அன்னை வளர்ப்பிலே, அன்னை வளர்ப்பிலே என்ற இந்த வரிகள், நமக்கு ஒரு விஷயத்தை உணர்த்துகின்றது. பள்ளிக்கூடக் கல்வியை மட்டும் நம்பி இல்லாமல், பெற்றோர்கள் குழந்தைப்பருவத்தில் இருந்தே எதையும் எதிர்கொள்ளக்கூடிய மனநிலையை உருவாக்க வேண்டும். அப்பொழுதுதான் இதுபோன்ற விரக்தி மனப்பான்மையில் முடிவெடுக்கக்கூடிய சூழல்களில் இருந்து மாணவர்கள் விடுபடுவார்கள்.
பிறக்கும்போதே குழந்தைகளின் கல்வி விஷயத்தில் பெற்றோர்கள் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். அவர்களை மற்றவர்களுக்காக, மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்பதற்காக அல்லாமல்,அவனுக்கு எது சிறந்தது? அவனுடைய பண்புகள் எதில் மேம்படும் என்பதை உணர்த்தி வளர்க்க வேண்டும்.
அவனிடம் சிறு சிறு தோல்விகளையும் ஏற்கக்கூடிய மனநிலை உருவாக்கி பழக வேண்டும். அதில்,இருந்து படிப்பினைகளை கற்றுக் கொடுக்க வேண்டும். தோல்விகள் இல்லாமல் வாழ்க்கையே இல்லை என்பதை பசுமரத்து ஆணி போல் பதிய வைக்க வேண்டும். அது பெற்றோர்களால்தான் முடியும்.
அதுபோன்று பெற்றோர்கள் குழந்தைகளை உருவாக்கிவிட்டால், இதுபோன்ற சிறுவர்கள் தற்கொலைகள் நடைபெறாமல் இருக்கும் என்பதே நிதர்சனமான உண்மை.
Thanks & Regards,
NELLAI SALEEM,
Cell – 96772 01727
Email - erusaleem@gmail.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக