பொறாமை என்பது பெரும்பாவங்களுக்கு இட்டுச் செல்லும் ஒரு விதமான "மனநோய்". சக மனிதருக்கு கிடைத்திடும் வசதி வாய்ப்புகள், திறமை, பணம், அந்தஸ்து, பாராட்டுகள் ஆகியவற்றைக் காணும் போது, அவர் மீது பொறாமைப்பட்டு அவைகளை இல்லாமல் ஆக்குவதற்கு அந்த மனிதனைப் பற்றி கேவலமாகவும், இழிவாகவும் பேசி அவற்றை பறிப்பதற்குண்டான செயல்களில் ஈடுபடக்கூடிய மனோ நிலை மனிதனிடத்தில் இன்று மிக அதிகமாக காணப்படுகிறது. தன்னை விட அடுத்தவன் சிறப்புகளை, உயர்வுகளை அடைந்து விடக்கூடாது என்ற எண்ணத்தின் விளைவே பொறாமை உணர்வாக வெளிப்படுகிறது. இதனை இஸ்லாம் தடை செய்துள்ளது.
மனிதர்களுக்கிடையேயான உறவுகளுக்கு இது மிகப்பெரும் சவாலாகவும் உள்ளது. பொறாமை இருவகைப் படும். அவை
1. நேரடிப் பொறாமை - பிறருடைய கல்வி, பொருள், அதிகாரம், பாராட்டுகள் தனக்கு கிடைக்க வேண்டும். அவரிடமிருந்து நீங்கிட வேண்டும் என்று ஆசைப்பட்டு வெளிப்படையாகவே தவறான பேச்சையும், செயலையும் மேற்கொள்வது.
2. மறைமுகப் பொறாமை - தனக்கு கிடைக்காவிட்டாலும் பிறரிடம் உள்ள பாக்கியங்கள் நீங்கிட வேண்டும் என்று ஆசைப்பட்டு உள்ளொன்று வைத்து, புறமொன்று பேசி, நயவஞ்சகர்களாகவும் செயல்படுவது.
பெண்களின் பொறாமை:
பெண்களின் பொறாமை மிக விசித்திரமானது.
- தனது சகோதரிக்கு அழகிய கணவர் கிடைத்திருக்கின்றார்
- தன்னை விட அவள் அதிகமாக புடவை வைத்திருகின்றாள்
- கணவனின் சகோதரன் புது பைக் வாங்கி விட்டால் பொறாமையினால் இவள் கணவனை பைக் வாங்கச் சொல்லி நச்சரிக்கின்றாள்
- மருமகள் தான் அனுபவித்த கஷ்டங்களை அனுபவிக்காமல் மகிழ்வாக வாழ்வதைப் பார்க்கும் போதும் சில மாமியார்களுக்கு பொறாமை ஏற்படுகிறது.
இது போன்று பெண்களின் பொறாமையை நீண்ட பட்டியல் போட்டுக் கொண்டே போகலாம்.
இவ்வாறு பொறாமைப் படுபவர்களிடம் அல்லாஹ் கேட்கிறான்...
“அல்லது மனிதர்களுக்கு அல்லாஹ் தன் அருளிலிருந்து வழங்கியவற்றின் மீது இவர்கள் பொறாமை கொள்கிறார்களா?”
(அல் குர்ஆன் – 4:54)
ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களிடத்தில் “அவர்கள் இறை அருளுக்கு விரோதிகள்” என்று சொன்னார்கள், ஸஹாபாக்கள் யாரை சொல்கிறீர்கள் நபியே! என்று கேட்க, இறைவன் தனக்கு வழங்கியிருக்க, மற்றவரைப் பார்த்து பொறாமைப்படுகிறார்களே அவர்கள் தாம் என்று கூறினார்கள்.
(நூல்: தப்ரானி)
பொறாமையினால் ஏற்படும் விளைவுகள்:
1. இறைச்சாபம் உண்டாகும்
ஆதம் (அலை) அவர்களுக்கு ஸுஜுது செய்யும் படி இறைவன் கூறியது ஷைத்தானுக்கு மிகவும் கடுமையான பொறாமையை ஏற்படுத்தியது. மேலும் அவர்களை சுவனத்தில் தங்க வைத்ததும் அவனுக்கு பெரும் பொறாமையை உண்டாக்கியது. எனவே பல்வேறு வகையான சூழ்ச்சிகளையும், சதிகளையும் செய்ய ஆரம்பித்தான்.
இதனை அல்லாஹ் கூறிக்காட்டுகிறான்...
“நீங்களிருவரும் (அதன் பழத்தைப் புசித்தால்) இருவானவர்களாக ஆகிவிடுவீர்கள்; அல்லது நிரந்தரமாய் (இச்சொர்க்கத்திலேயே) தங்குபவர்களாக ஆகிவிடுவீர்கள் என்பதற்காகவேயன்றி இந்த மரத்தை விட்டும் அல்லாஹ் உங்களை தடுக்கவில்லை.
மேலும், நிச்சயமாக நான் உங்களிருவருக்கும் நற்போதனை செய்கிறவர்களில் நின்றும் இருக்கிறேன்” என்று ஷைத்தான் அவ்விருவருக்கும் சத்தியம் செய்தான்.
(அல் குர்ஆன் – 7:20, 21)
ஷைத்தான் தனது அந்தஸ்தை விட, ஆதம் நபியின் அந்தஸ்தை அல்லாஹ் உயர்த்தி வைத்ததை பொறுத்துக் கொள்ள முடியாமல் பல்வேறு சூழ்ச்சிகளை செய்தான். அதன் விளைவாக ஷைத்தான் கியாமத் நாள் வரை அனைவரின் சாபத்திற்குரியவனாக மாறியதற்கு அடிப்படைக் காரணம் பொறாமையாகும்.
2. பாவங்களுக்கு வழி வகுக்கும்:
உலகின் முதல் கொலை ஆதம் (அலை) அவர்களின் இரு மகன்கள் விஷயத்தில் ஏற்பட்டதுதான். திருமணம் முடிவு செய்யப்பட்ட இருபெண்களில் ஹாபிலுக்கு முடிவான பெண் மிக அழகாக இருந்தாள். எனவே காபில் தனக்கு முடிவு செய்யப்பட்ட பெண்ணை மறுத்து அந்த அழகிய பெண்ணையே திருமணம் செய்ய எண்ணினான். தன் இரு மகன்களுக்கு இடையே உள்ள இப்பிரச்சனையை தீர்க்க முடியாமல் அல்லாஹ்விட்த்தில் துஆ செய்து வேண்டினார்கள் ஆதம் (அலை) அவர்கள். அதன் அடிப்படையில் அல்லாஹ் அவ்விருவரையும் (ஹாபில், காபில்) தங்களுடைய பொருட்களில் இருந்து அல்லாஹ்வுக்காக குர்பானி செய்யுமாறு கட்டளையிட்டான்.
இதை அல்லாஹ் தனது திருமறையில்...
(நபியே) ஆதமுடைய (ஹாபில், காபில் என்னும்) இரு மகன்களின் உண்மைச் செய்திகளை நீங்கள் அவர்களுக்கு ஓதிக்காண்பியுங்கள். இருவரும் குர்பானி (பலி) கொடுத்த போது, அவ்விருவரில் ஒருவருடையது ஏற்றுக் கொள்ளப்பட்ட்து; மற்றவருடையது ஏற்கப்படவில்லை. ஆதலால் நிச்சயம் நான் உன்னைக் கொன்று விடுவேன் என்றார். உடனே (குர்பானி ஏற்றுக்கொள்ளப்பட்ட நல்லவர்) “அல்லாஹ் ஏற்றுக் கொள்வதெல்லாம் இறை அச்சமுள்ளவர் (களின் பலி) களைத் தான் என்று பதில் கூறினார்.
(அல் குர்ஆன் – 5:27)
அல்லாஹ் தனது குர்பானியை ஏற்றுக்கொள்ளாத்தால் காபில், ஹாபீலை கொன்றுவிட்டார். இக்கொலை பொறாமையினால் ஏற்பட்ட விளைவாகும்.
3. சதி வேலைகள் செய்ய வழிவகுக்கும்:
யூசுப் நபியின் சகோதர்ர்கள் கொண்ட பொறாமை இதற்கு உதாரணமாகும்.
திருமறைக் குர்ஆன் இதனை விவரிக்கிறது...
“நாம் ஒரு கூட்டமாக இருந்தும், யூஸுபும் அவரது சகோதரரும் எம்மை விட எமது தந்தைக்கு மிக நேசத்திற்குரியவர்களாக இருக்கின்றனர். நிச்சயமாக எனது தந்தை தெளிவான வழிகாட்டிலே இருக்கின்றார் என யூஸுஃபின் சகோதரர்கள் கூறியதை எண்ணிப்பார்ப்பீராக! யூஸுஃபை கொலை செய்து விடுங்கள் அல்லது அவரைப் பூமியில் எங்காவது எறிந்து விடுங்கள், உங்கள் தந்தையின் முகம் முற்றிலும் உங்கள் பக்கமே திரும்பும், அதற்குப்பின் நீங்கள் நல்ல கூட்டமாக ஆகிவிடுங்கள்”
(அல் குர்ஆன் – 8:9)
பொறாமை என்பது எவரையும் விட்டு வைக்கவில்லை என்று இச்செய்தியில் இருந்து புரிந்து கொள்ள முடியும். பொறாமை என்பது சகோதரன் என்று கூட பார்க்காது. அது கொலை என்ற அளவிற்கு கூட கொண்டு போய்விடும்.
4. இனவெறியை உண்டாக்கும்:
யஹூதிகள், கடைசிக் காலத்தில் தங்களுக்குள்ளேயே நபி வருவார் என்று நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் அரபிகளுக்கு மத்தியில் நபி அனுப்பப்பட்டதும் யஹூதிகளின் பொறாமை நபியின் மீது அதிகரித்தது. இதனால் அவர்கள் பற்பல சூழ்ச்சிகளை செய்தார்கள். நபியவர்களை கொலை செய்யவும் நாடினார்கள். நபியின் மீது அவதூறுகளை கூறினர். நபிக்கு எதிராக மக்களைத் தூண்டி விட்டனர்.
அதன் ஒரு எடுத்துக்காட்டுதான் யூதப்பெண்மணி ஒருத்தி நபி (ஸல்) அவர்களுக்கு விஷம் கொடுத்த நிகழ்வு. அதன் விளைவை நபி (ஸல்) அவர்கள் தங்களது மரண நேரத்திலும் கூட உணர்ந்தார்கள்.
5. நன்மைகளை அழித்திடும்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்...
“பொறாமை கொள்வதை விட்டும் உங்களை நான் எச்சரிக்கிறேன். நிச்சயமாக பொறாமை என்பது, நெருப்பு விறகை கரித்து விடுவது போல் நல்அமல்களை அழித்து விடும்”
(நூல்: மிஷ்காத்)
6. மார்க்கத்தையே இல்லாமலாக்கிவிடும்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்...
“முன்னுள்ள சமூகத்தினருக்கு ஏற்பட்ட நோய் உங்களுக்கும் வந்திருக்கிறது. அவை “பொறாமையும் – கோபமுமாகும்”, அவை சிரைத்து விடக்கூடியதாகும், அது நான் தலைமுடியை சிரைத்து விடும் என்று கூறவில்லை, மாறாக அது மார்க்கத்தையே சிரைத்து விடும்”
(திர்மிதீ – 2510)
பொறாமை நீங்க இஸ்லாம் கற்றுத்தரும் அழகிய வழிமுறைகள்:
1. யார் மீது பொறாமை உண்டாகிறதோ அவரிடம் பணிவை மேற்கொள்ளுதல்.
2. அவருக்கு சலாம் கூறுதல்.
3. அவருக்கு எப்பொழுதும் நல்லதை நாடுதல்.
4. அவருக்காக பிரார்த்தனை செய்தல்.
5. தொழுகை வரிசையில் நெருக்கமாக நிற்குதல்.
6. மரண சிதனையை அதிகப்படுத்துதல்.
7. அல்லாஹ் நாடியதுதான் கிடைக்கும் எனும் திருப்தி மனப்பான்மையை அதிகரித்தல்.
அன்பார்ந்த சகோதர்ரகளே,
பொறாமை எனும் தீய குணத்தால் முதலில் பாதிக்கப்படுபவன் பொறாமை கொள்பவன்தான் என்பதை நாம் ஞாபகத்தில் கொள்ள வேண்டும். இவை அல்லாது இக்குணம் இனம், மதம், மொழி, உறவு, பாசம், நட்பு, சகோதரத்துவம் என்று எதனையும் பார்க்காமல் பயங்கர விளைவுகளை ஏற்படுத்தக்கூடியதாகும்.
இக்கருத்துக்களை பூரணமாய் உணர்த்தக் கூடிய ஒரு சிறிய நபி மொழியோடு நிறைவு செய்வோம்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “மக்கள் பொறாமைப்படாமல் இருக்கும் காலமெல்லாம், அவர்களிடம் நலவு இருந்துகொண்டே இருக்கிறது”
(நூல் – தப்ரானி)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக