சம்பவம் ஒன்று:
முடியும். ஒருவனால் அது முடியும்.
அந்த முதியவர் தன் கரங்களை உயர்த்தினார் தன்னை படைத்த அதிபதியை நோக்கி. தன் உள்ளத்துக் கவலையை வார்த்தைகளாக வடித்தார். மனதைப் பிழியும் அந்த வார்த்தைகள்,
“என் இறைவனே! நிச்சயமாக என் எலும்புகள் பலஹீனமடைந்து விட்டன; என் தலையும் நரையால் (வெண்மையாய்) இலங்குகிறது. என் இறைவனே! (இதுவரையில்) நான் உன்னிடம் செய்த பிரார்த்தனையில் பாக்கியம் இல்லாதவனாகப் போய்விடவில்லை. “இன்னும், எனக்குப் பின்னர் (என்) உறவினர்களைப்பற்றி நிச்சயமாக நான் அஞ்சுகிறேன்; மேலும், என் மனைவியோ மலடாக இருக்கிறாள்; ஆகவே, நீ உன் புறத்திலிருந்து எனக்கு வாரிசை அளிப்பாயாக! (அல்குர்ஆன் – 19:4-5).
கருணையாளன் ரஹ்மான் அந்தப் பிரார்த்தனையை அங்கீகரித்தான், அவருக்கு நற்குணமுள்ள ஓர் ஆண் வாரிசை அளித்தான்.
“ஜகரிய்யாவே! யஹ்யா என்ற பெயர் கொண்ட ஒரு புதல்வனை பற்றி நிச்சயமாக நாம் உமக்கு நற்செய்தி கூறுகிறோம்…”(அல்குர்ஆன் – 19:7)
ஆம். அந்த முதியவர் இறைதூதர் ஜகரிய்யா(அலைஹிஸ்ஸலாம்) அவர்கள்தாம்.
சம்பவம் இரண்டு:
அவர் ஒரு நோயாளி. நோய் முற்றி விட்டது. இந்த உலகத்து மருத்துவத்தை வைத்துப் பார்த்தால் அவரைக் குணப்படுத்திட முடியாது. ஆகவே அவர் ஒரு கை விடப்பட்ட நோயாளி. யார் கை விட்டாலும் கை விடாத தன் ரப்பின் மீதும், அவன் வல்லமையின் மீதும் அவர் நம்பிக்கை இழக்கவில்லை. இப்படி அவனிடம் மன்றாடினார்,
“இன்னும் ஐயூப் தம் இறைவனிடம், நிச்சயமாக என்னை (நோயினாலான) துன்பம் தீண்டியிருக்கிறது; (இறைவனே!) கிருபை செய்பவர்களிலெல்லாம் நீயே மிகக் கிருபை செய்பவனாக இருக்கின்றாய் என்று பிரார்த்தித்த போது, (அல்குர்ஆன் – 21:83)
ஐயூப் நபி(அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் இப்படி மன்றாடியபோது வல்ல ரஹ்மான் அதற்கு இப்படிப் பதில் பகர்ந்தான். அவர்களை குணமாக்கினான். புதுப் பொலிவும் புத்துணர்ச்சியும் பெற்றார்கள் ஐயூப் நபி அவர்கள்,
“நாம் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம். அவருக்கு ஏற்பட்டிருந்த துன்பத்தையும் நீக்கி விட்டோம். அவருடைய குடும்பத்தையும், பின்னும் அதைப் போன்ற ஒரு தொகையினரையும் (அவருக்கு குடும்பமாகக்) கொடுத்தோம் – இது நம்மிடதிலிருந்துள்ள கிருபையாகவும் ஆபிதீன்களுக்கு(வணங்குபவர்களுக் கு) நினைவூட்டுதலாகவும் இருக்கிறது”(அல்குர்ஆன் – 21:84)
குணப்படுத்தவே முடியாது என்று சொன்ன நோய் இருந்த இடம் தெரியாமல் அழிந்தது. மறைந்தது.
சம்பவம் மூன்று:
அவர் ஒரு பிரயாணி. கப்பலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது விதிவசத்தால், அவர் முன்னர் செய்த ஒரு தவறால் கடலில் விழுந்து விட்டார். மீன் அவரை விழுங்கிற்று. தன் கதை முடிந்தது என்று நினைத்தார். ஆனால் முடியவில்லை. மீனின் இருள் சூழ்ந்த வயிற்றுக்குள் மாட்டிக் கொண்டார். உயிரும் போகவில்லை. வெளியேற வழியும் தெரியவில்லை. எப்பேற்பட்ட நெருக்கடி. அப்போது அவர் வாய் ஒரு மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்துக் கொண்டே இருந்தது. வாருங்கள், அது என்னவென்று கேட்போம்,
“…உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் யாருமில்லை. நீ மிகவும் தூய்மையானவன். நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன்…”(அல்குர்ஆன் - 21:87)
“நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன்” – தன்னையே நிந்தித்து நிந்தித்து அவர் தொடர்ந்து சொன்ன அந்த மந்திரச் சொல் அர்ஷுக்குரியவனை அசைத்துப் பார்த்தது. தன் கருணையால் அவரை வாரி அணைத்தான். தன் கருணையை வேத வசனமாக்கினான். இப்புவியில் உள்ள அணைத்து நம்பிக்கையாளர்களுக்கும் ஒரு நற்செய்தியை அதில் அறிவித்தான்,
“எனவே நாம் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம். அவரைத் துக்கத்திலிருந்தும் விடுவித்தோம். இவ்வாறே முஃமின்களையும் விடுவிப்போம்” (அல்குர்ஆன் – 21:88)
மீன்காரர் என்று நாயன் அல்லாஹ் வாஞ்சையோடு அழைக்கும் யூனுஸ் நபியின் வரலாறு இது.
திருக்குர்ஆன் ஒரு மகத்துவமிக்க மாமருந்து. நம்பிக்கை இழந்தவர்கள், கை விடப்பட்டவர்கள், நெருக்கடியில் உழல்பவர்கள் அபயம் தேடிடும் சரணாலயம். நாம் தோழமை கொள்ள வேண்டிய உற்ற தோழன். எந்நாளும் நம்மை வழி நடத்தும் வழிகாட்டி.
திருக்குர்ஆன் ஒரு அதிசய ஊற்று. காய்ந்த ரொட்டித் துண்டுகளையும் பேரீச்சம் பழங்களையும் உண்டு வளர்ந்த ஒரு அநாதை இளைஞரை, பால் நிலா முகமொத்த அந்தப் பாலைவன நாயகரை(ஸல்லாலாஹு அலைஹிவஸல்லம்), அரேபியாவிற்கே அரசராக்கிய அதிசயம்.
அவர்களின் தோழர்களை(இறையருள் பொழியட்டும்) பறந்து விரிந்த சாம்ராஜ்யத்தின் அதிபர்களாக்கிய அதிசயம். வல்லரசுகளை அவர்களின் முன் மண்டியிட வைத்த அதிசயம்.
இந்த அதிசயத்தை அள்ளி வந்த மாதம் இந்த ரமலான்.
புனித ரமலான் இறைமறையை தந்தது. இல்லை இல்லை. இறைமறை இறங்கியதால் ரமலானுக்கு புனிதம் வந்தது (காண்க வசனம் 2:185).
உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் அமைதியையும், சுபிட்சத்தையும் அணைத்து நற்பாக்கியங்களையும் இந்த ரமலான் கொண்டு வரட்டும். அஹ்லன் ரமலான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக