“ வெற்றியைக் கொண்டாட மறந்தாலும், தோல்வியைக் கொண்டாட கற்றுக் கொள்ளுங்கள்.”
இந்த வார்த்தைகள் ஒரு கல்லூரி விழாவில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறியது. ஒவ்வொரு வருடமும் 10 மற்றும் +2 தேர்வு முடிவுகள் வெளியாகும்போதும், ஏதோ ஒரு பகுதியில் மாணவர்கள்
தற்கொலை செய்து கொள்ளும் சம்பவமும், தற்கொலைக்கு முயன்ற சம்பவங்களும் நாம் கேள்விப்படும் ஒரு நிகழ்வாக இருக்கின்றது.
எந்த ஒரு முடிவுகளையும் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் இன்றைய இளைஞர்களிடம் இல்லை. எல்லா முடிவுகளையும் தங்களுக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்பதையே இன்றைய தலைமுறை எதிர்பார்க்கக்கூடியதாக இருக்கின்றது. வெற்றி என்பதுதான் விருப்பமான ஒன்றாக நம்மவர்களிடம் ஆழப் பதிந்து விட்டது. எதில் எடுத்தாலும் நாம்தான் வெற்றி பெற வேண்டும். தோல்வி, அது நமக்கு வேண்டாம். அதைக் கண்டாலே பயந்து ஓடக்கூடிய சூழல்கள்தான் பெரும்பாலான இளைஞர்களிடம் இருக்கின்றது. ஆனால், அதில் இருந்துதான் பாடங்களை கற்றுக் கொள்ள முடியும் என்பதை மறந்து வருகிறோம்.
வரலாற்றில் சாதித்தவர்களின் பின்னணியைப் பார்த்தால் பல்வேறு தோல்விகள்தாம் அவர்களை நிலையான வெற்றியின் பக்கம் இழுத்துச் சென்றிருக்கிறது. நாம் அதை தோல்வி என்பதைவிட, நம்மை நாம் மீளாய்வு செய்து,இன்னும் நம்மை மெருகூட்டக்கூடிய ஒரு சந்தர்ப்பமாக எடுத்துக் கொள்ள நாம் முயலவில்லை.
தாமஸ் ஆல்வாய் எடிசன் அவர்கள் கூறும்போது, “என் முயற்சிகள் என்னைப் பலமுறை கைவிட்டதுண்டு… ஆனால் நான் ஒரு முறைகூட முயற்சியை கைவிடவில்லை.. என்றார்.
ஆனால், நம்மில் நிறைய பேர் முயற்சி செய்யவே பயப்படுகிறோம். குழந்தையாக நாம் இருந்தபோது பெரும் போராட்டத்திற்கு பிறகுதான் நடக்க கற்கிறோம். நமது வாழ்க்கையே பல தோல்விகள் என்ற படிகளால் கட்டப்பட்ட கட்டிடம் என்பதை நாம் மறந்து விடுகிறோம். எங்கு நாம் இதில் பங்கு பெற்றால் தோற்றுவிடுவோமோ என்ற அச்சம். அந்த நிலைதான் நம்மை அடிமைப்படுத்தி வருகின்றது. அதனால், இதுபோன்ற எண்ணங்களையெல்லாம் விடுங்கள். எல்லா விஷயங்களிலும் முயற்சி செய்து பாருங்கள். தோல்விகளை நம்மாலும் கொண்டாட முடியும்.
எழுத்தாளர் ஃபெர்னாட்ஷாவை நாமெல்லாம் கேள்விப்பட்டிருப்போம். அவர் ஆரம்பத்தில் ஒரு பத்திரிகைக்கு சிறு சிறு கதைகளை எழுதி அனுப்பிக் கொண்டே இருந்தார். அவர் ஒவ்வொரு தடவையும் கட்டுரை பிரசுரமாகும் என்று எதிர்பார்த்துக் கொண்டே இருந்தார். ஆனாலும், ஒரு குறிப்பிட்ட ஆண்டுகள் வெளிவரவே இல்லை. இவரின் முயற்சி தொடர்ந்து கொண்டே இருந்தது. ஒரு நாள் அவருடைய கட்டுரை ஒரு பத்திரிகையில் வெளியாகியது. அந்தக் கதைதான் அவருடைய வாழ்க்கையை மாற்றிப் போடும் அளவுக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தியது.
எவ்வளவு வருடங்களானாலும் அவருடைய முயற்சியை கைவிடவில்லை. அவருடைய பணியில் அவர் சரியாக இருந்தார். ஒரு நாளைக்கு நூறு பக்கங்கள் எழுதாமல் அவர் தூங்கியதில்லை. இன்றும் அவருடைய எழுத்துக்களை நாம் தேடித் தேடி படித்துக் கொண்டிருக்கிறோம்.
அதேப்போன்று, இன்று மின்னல் வேக ஓட்டப்பந்தய வீரர் என்று போற்றப்படும் ஜமைக்காவின் உசேன் போல்ட்டுக்கும் ஆரம்பத்தில் தோல்வி மனப்பான்மை ஏற்பட்டுள்ளது. அங்கு நாம் இதில் போட்டி போட்டால் தோற்று விடுவோமோ என்று இருந்த வேளையில் அவருடைய தாயின் அறிவுரை மேலும் அவரை முயற்சி செய்ய தூண்டியது.
14 வயதில் அயல்நாடுகளில் சர்வதேச ஜூனியர் லெவல் பந்தயங்களில் கலந்து கொள்ளும்போது போல்ட் தடுமாறினான். சர்வதேச சவாலைச் சமாளிக்க முடியாமல் கிடைத்த தோல்விகள் முதலில் பயமுறுத்தின. தன்னம்பிக்கையில் தடுமாற்றம், 2002ம் ஆண்டு ஜமைக்காவில் கிங்ஸ்டன் நகரத்தில் உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் தடகளப் போட்டிகள் நிகழவிருந்தன.
உள்ளூரிலேயே தோற்றுவிடுவோமோ எனப் பயந்த போல்ட், தன் வீட்டு பின்புறத்தில் உட்கார்ந்து அழ ஆரம்பித்தான். தாய் ஜெனிஃபர் வந்து அரவணைத்தார். ‘முயற்சியே செய்யாமல் ஒதுங்கிப்போகாதே. அதன் முடிவு என்னவென்றாலும் தைரியாமாக ஏற்றுக்கொள்’ என அவர் சொன்ன வார்த்தைகள் போல்ட்டின் முதுகுத் தண்டடை நிமிர்த்தின.
அதன்பிறகு போல்ட்டின் வெற்றிகள் தொடர்ந்தன. இன்று நம்பர் 1 வீரராக வலம் வருகிறார். ஏராளமான ரசிகர்கள் அவருடைய வெற்றியை எதிர்பார்க்கும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார் என்றால் அது மிகையாகாது. அவருக்கும் தோல்விகள் கசந்திருக்கின்றது. ஆனாலும், அவர் எடுத்த தொடர் முயற்சி வெற்றியின் உறைக்கல்லாக மாறியுள்ளது.
இன்றும் உலக மக்களின் மனங்களை சிரிக்க வைத்துக் கொண்டிருக்கும் சார்லின் சாப்ளின் நாமெல்லாம் அறிந்திருப்போம். அவருடைய வார்த்தைகள் இவை: “என்னுடைய வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகள் உள்ளன,ஆனால், என்னுடைய உதடுகள் எப்பொழுதும் அதை வெளிப்படுத்தாது, சிரித்துக் கொண்டே இருக்கும்” என்று கூறிய சார்லின் சாப்ளினின் வாழ்க்கையிலும் நல்ல படிப்பினைகள் இருக்கின்றன.
அவர் நாடகத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போது, அவருடைய தந்தை வீட்டை விட்டு சொல்லாமல் ஓடி விடுகிறார். சிறிது காலம் சென்ற பிறகு தாய்க்கு மனநிலை சரியில்லாமல் போய் விடுகிறது. இந்த நிலையில் நாடகக் கம்பெனியும் இழுத்து மூடப்படுகின்றது. ஒட்டுமொத்தமாக பின்னடைவை சந்திக்கும்பொழுது, சார்லின் சாப்லின் என்ன செய்வது என்று முழித்துக் கொண்டிருக்கும்போதுதான், அமெரிக்காவில் படம் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைக்கின்றது.
முதலில் நடித்த படம் கூட அவருக்கு நல்ல ஹிட் கொடுக்கவில்லை. படத்தை எடுத்தவர் அடுத்த படத்திற்கு வாய்ப்பு கொடுக்க மாட்டேன் என்கிறபோது, சார்லின் சாப்லினின் மனநிலை இந்தத் துறையை விட்டு சென்று விடலாமா என்று நினைத்தார். ஆனால், அதை முடிவாக எடுக்காமல் நாம் நடித்த படத்தில் என்ன பிழைகள் இருக்கின்றது என்று பார்த்தார். அதில் உள்ள குறைகளை எல்லாம் சரி செய்து அடுத்த படத்தில் அதை சரி செய்ய முனைந்தார்.
அதற்கிடையில், மற்றொரு இயக்குநர் படத்திற்கான வாய்ப்பை வழங்கினார். அந்தப் படத்தில் அவர் பெற்ற படிப்பினைகளை செயல்படுத்தினார். அதில், அவர் மீசை மற்றும் கோர்ட் அணிந்து தன்னுடைய நகைச்சுவையை வெளிப்படுத்தினார். முன்பு நடித்த படத்தைவிட மக்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதிலிருந்து மக்கள் எதை விரும்புகிறார்களோ, அதை கண்டறிந்து தன்னுடைய படங்களில் நடித்தார். அவருடைய வெற்றிகள் தொடர்ந்தன. உலகப் புகழ் மற்றும் பெரிய பணக்காரராக திகழ்ந்தார்.
இதற்கிடையிலும், அவருடைய காதல் மனைவி வேறொரு திருமணம் முடிக்க, மறுபடியும் ஒரு காதல் வாழ்க்கை என்று மன நெருக்கடியோடு சென்ற சமையத்திலும் அவரால் அந்தத் துறையில் சாதிக்க முடிந்தது. சில கசப்பான அனுபவங்களை கண்டு பின்வாங்கி விடாமல் தொடர்ந்து முயற்சி செய்தார். அதனால், இன்றும் நாம் போற்றப்படும் கலைஞராக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
இதுபோன்று, பல்வேறு நபர்களை நம்மால் கூற முடியும். அதனால் எல்லா விஷயங்களிலும் ஒரு துணிச்சலோடு இருங்கள். வெற்றி அல்லது தோல்வி. எதுவாக இருந்தாலும் மன நிறைவோடு ஏற்றுக் கொள்ளுங்கள். அடுத்த வாய்ப்பில் கிடைத்த படிப்பினைகளை பயன்படுத்திக் கொண்டு வெற்றி பெறுங்கள். எப்பொழுதுமே முயற்சியை மட்டும் கைவிட்டு விடாதீர்கள். முயற்சியை விடும்பொழுது உங்களுடைய நிரந்தர தோல்வி தொடங்கிவிடும்.
“வெற்றி என்பது பெற்றுக் கொள்வது, தோல்வி என்பது கற்றுக் கொள்வது, முதலில் கற்றுக் கொள்வோம், பிறகு பெற்றுக் கொள்வோம்” என்ற இந்த வரிகளோடு பயணியுங்கள். நீங்களும் ஒரு தோல்வியை கொண்டாட கூடியவர்களாக வருவீர்கள். இன்ஷா அல்லாஹ்.
நன்றி தூது ஆன்லைன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக