புதுடெல்லி: “முஸஃபர் நகர் பாக்கி ஹை” என்ற ஆவணப் படம் ஆகஸ்ட் 25 அன்று நாடு முழுவதும் திரையிடப்பட இருக்கிறது. “எதிர்ப்பு சினிமா” (Cinema of Resistance) என்ற அமைப்பு இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
நாகுல் சிங் ஸானி இயக்கியுள்ள இந்த ஆவணப் படம் முஸஃபர் நகரில் முஸ்லிம்களுக்கெதிராக சங்கப் பரிவார பயங்கரவாத சக்திகள் நடத்திய கோரமான இனப்படுகொலையைத் தோலுரித்துக்காட்டுகிறது. நாட்டையே அழிக்கத் துடிக்கும் ஃபாசிச வகுப்புவாதத்திற்கெதிராக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்து பல ஆவணப் படங்களை இயக்கியவர் சுப்ரதீப் சக்கரவர்த்தி.
அவர் மறைந்த தினமான ஆகஸ்ட் 25 அன்று “முஸஃபர் நகர் பாக்கி ஹை” ஆவணப் படம் சென்னை, திருச்சி, மதுரை, டெல்லி, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, லக்னோ, புவனேஷ்வர், சண்டிகர், சிட்டோர்கர், துங்கர்பூர், ஃபைஸாபாத், ஃபரீதாபாத், கோரக்பூர், ஜாம்ஷெட்பூர், மதுரா, நைனிடால், பாட்டியாலா, ராய்ப்பூர், சாந்திநிகேதன், துல்ஜாப்பூர், உதைப்பூர், விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களில் திரையிடப்படுகிறது.
சென்னையிலும், திருச்சியிலும் இதற்கான ஏற்பாடுகளை அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம் செய்துள்ளது. சென்னையில் ஆவணப்படம் திரையிடப்படும் இடம்: ஸ்பேசஸ், எலியட்ஸ் பீச், பெஸன்ட் நகர். நேரம்: மாலை 6 மணி. திருச்சியில் இடமும், நேரமும் அறிவிக்கப்படவில்லை.
மதுரையில் மக்கள் திரை, சாப்ளின் டாக்கீஸ், இளம் தமிழகம் ஆகிய அமைப்புகள் இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளன. இடமும், நேரமும் அறிவிக்கப்படவில்லை.
ஆகஸ்ட் 25க்கு முன், பின் தினங்களிலும் இன்னும் பல இடங்களில் இந்த ஆவணப் படம் திரையிடப்படுகிறது.
டெல்லி பல்கலைக்கழகத்தின் கிரோரி மால் கல்லூரியில் இந்த ஆவணப் படத்தைத் திரையிடும்பொழுது அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் என்ற ஃபாசிச சங்கப் பரிவார சக்திகளின் மாணவர் அமைப்பு குண்டர்கள் காட்டுமிராண்டித் தாக்குதலில் ஈடுபட்டனர்.
தங்கள் நகரங்களில், கிராமங்களில், முஹல்லாக்களில் இந்த ஆவணப் படத்தைத் திரையிடுவதற்கு ஏற்பாடுகள் செய்யுமாறு “எதிர்ப்பு சினிமா” நாட்டு மக்களைக் கேட்டுக்கொள்கிறது. டிவிடி வேண்டுவோர் அவர்களைத் தொடர்புகொள்ளலாம்.
மேலதிக விவரங்களை இந்த முகநூல் பக்கத்தில் சென்று பார்க்கலாம்: https://www.facebook.com/events/900486306697566/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக