உலகின் எல்லா மூலைகளிலும் ஆதிக்கத்தின் அரக்க குணத்தை வெளிப்படுத்தும் அயோக்கியர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். நிறவெறி , மத வெறி, இன வெறி , மொழி வெறி என பல்வேறு தளங்களில் அவை பரந்து கிடக்கின்றன. ஏதோவொரு காரணிகளை கட்டமைத்து அவற்றை பூதாகரப்படுத்தி , தூய்மைவாதத்துக்குள் ஒழிந்து கொண்டு குறிப்பிட்ட மக்களை ஒடுக்கி கேவலமாக நடத்த வேண்டுமென நினைக்கும் சக மனித இனத்துக்கு சாதாரணமாக “வெறி” என்ற மென்மையான வார்த்தைகளை சுமத்தி கடந்துவிட முடியாது. நிறம், இனம், மதம், மொழி, சமூகம் என பல்வேறு பண்பாட்டு கூறுகளுடைய எச்சங்களின் குறியீடு தான் இந்தியா. இத்தகைய பண்பாட்டுக் கூறுகளுக்கு நேர் எதிரான காட்டுமிராண்டித்தனம்தான் “சாதியம்”. 2000 வருடங்கள் பழமையானது
என பொதுவாக சாதியை அறியாமைக்குள் அடைக்க சில குருமதியாளர்கள் முயற்சிக்கின்றனர் . சுதந்திரத்திற்கு பின்பான நாகரிக சமூகத்தின் 60 ஆண்டுகால வரலாறுகளும் சாதிச் சாக்கடையில் கலந்து தானே கிடக்கிறது .
“சாதியத்தின்” ஆபத்து கருதிதான் அம்பேத்கர் , பெரியார் எனும் கைத்தடிகள் சாதியத் திமிரின் தலையில் ஓங்கி கொட்டு வைத்தார்கள், குட்டுக்களை அம்பலப்படுத்தினார்கள் . சாதி ஒழிப்பின் மிக நீண்ட பயணத்தில் மிரட்டல்களை கடந்தேதான் அத்தகைய பயணங்கள் கூட நகர்ந்தன . வரலாற்றில் மிக நீண்ட நெடிய போராட்டங்களை, ‘காலணிகளை கக்கத்தில் வைத்துக்கொண்டு , கோவணம் கட்டித் திரிந்த’ சாமானிய மண்ணின் மைந்தர்களுக்காக முன்னெடுத்து இட ஒதுக்கீட்டு உரிமையை பெற்றுத் தந்தார் அண்ணல் அம்பேத்கர் . சாதியை சட்டங்களால் தகர்த்தெறிவோமென கனவு கண்டார் . சாதியமற்ற சமத்துவமான தேசத்தை கட்டமைக்க அம்பேத்கரும், பெரியாரும் பல நல்ல கருத்துக்துருவாக்கத்தினை நாகரிக சமூகத்திற்கு விட்டுச் சென்றுள்ளனர்.
கடந்த வாரம் மதுரையில் தாழ்த்தப்பட்ட மக்களில் சிறு பிரிவினர் நடத்திய அரங்க கூட்டமும் , அதில் பாஜக வின் தேசியத் தலைவரின் பங்கேற்ப்பும் , அதனைத்தொடர்ந்து எழுந்த சர்ச்சைகளும் ஊடகத்தின் வாயிலாக நாம் அறிந்ததே . இந்தியாவில் சமத்துவமற்ற, அகண்ட பாரத கனவு காணும் அரசை, சிந்தாந்தத்தை நிறுவ முயற்சிக்கும் பா.ஜ.க வின் அணி திரட்டலுக்கான வேலைப்பாடுகளே இவை. பெரும்பான்மை ஒடுக்கப்பட்ட சமூக மக்களை தன்வயப்படுத்துவதற்கான அரசியல் அணி திரட்டலும் , சிறுபான்மை மக்களுக்கெதிரான வெறுப்பை தலித்களிடம் விதைத்து அவர்களை ஆயுதங்களாக பயன்படுத்தும் உத்தியும் இவற்றில் ஒழிந்து கிடக்கிறது.
“சலுகைகள் கூட வேண்டாம் , தேவேந்திர குல வேளாளர் ” என்று பெயர் மாற்றம் மட்டும் போதும் என்று யாதுமறியா அடிவருடி தங்கராஜ் என்ற நபர் அமித்ஷாவிடம் வாய் மலர்ந்திருக்கிறார் . எலியே வலையில் விழ ,பூனை பூரித்துப்போனது . அமித்ஷாவுக்கு புல்லரித்துப்போனது.
மாட்டு அரசியல் முதல் இட ஒதுக்கீடு அரசியல் வரை பேசி ஒருவாராக தங்கராஜின் மனதை குழுமையடையச் செய்திருக்கிறார் . ஐஐடி யில் பாடமெடுக்க தகுதியற்ற குருமூர்த்தியோ தேவேந்திரன் வரைக்கும் சென்று சாதியப் பெருமைகளுக்கு அவரது பாணியில் பட்டி, டிங்கரிங் செய்திருக்கிறார் . சாதி இருந்தால்தான் சக்திமிக்க இந்தியா, அவரவர் தன் சொந்த சாதியைப் பெருமையாக நினைக்க வேண்டும் என்பன போன்ற புழுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டுள்ளனர் .
பார்ப்பனியத்தின் மென்மைப்போக்கான வர்க்க அரசியலை ஆர்.எஸ்.எஸ் உம், பாஜக வும் கொள்கைகளாக கொண்டிருக்கும்போது இவர்களிடமிருந்து நாம் என்ன எதிர் பார்க்க முடியும் . இவற்றையெல்லாம் அறியாமலா “இந்துத்துவா என்பது ஒரு புற்றுநோய் “என அம்பேத்கர் சொல்லிச் சென்றுள்ளார் .
சாதிய அரசியலுக்கும் , இட ஒதுக்கீட்டிற்கும் முடிச்சு போடுவதென்பதே அபத்தமானது .
மனுநீதியால் ஊக்குவிக்கப்பட்ட சாதியின் படிநிலைகள் அடித்தட்டு மக்களை கோரதாண்டவம் ஆடிய வேளையில் தான் அம்பேத்கர் , பெரியார் போன்ற அறிவுஜீவிகள் பலகட்ட போராட்டங்களை முன்னெடுத்து காலங்காலமாக ஒடுக்கிவைக்கப்பட்ட மக்களுக்கு அரசு உரிமைகளை இட ஒதுக்கீட்டின் மூலம் பெற்றுத்தந்தனர் .இட ஒதுக்கீடு என்பது உரிமையே அன்றி அவமானம் அல்ல. இன்றைய சமூகச் சூழலில் தலைவர்களாகவும் , ஆட்சியாளர்களாகவும் , அதிகாரம் வகிக்கும் மனிதர்களாகவும் ஒடுக்கப்பட்ட மக்கள் சிறிதளவேனும் முன்னேற்றம் கண்டிருக்கிறார்கள் எனில் அதற்கு மிக முக்கிய காரணம் இட ஒதுக்கீடு உரிமைதான் . சமூக படிநிலைகளால் பெரும் கொடூரங்களுக்கு உள்ளாக்கப்பட்ட அடித்தட்டு மக்களை தூக்கி நிறுத்தவோ, அவர்களின் அவலங்கள் குறித்து பொதுச் சமூகத்தின் எடுத்துரைக்கவோ சாதியச் சங்கங்களோ, சங்கப்பரிவாரங்களோ முன்னெடுத்த வரலாறு துரதிர்ஷ்டவசமாக இந்தியச் சமூகத்தில் இருந்ததில்லை . பின் எப்படி இறுதி வாய்ப்பான இட ஒதுக்கீட்டையும் மறுப்பது அறிவார்ந்த குரலாக இருக்க முடியும் .
இப்படியான முட்டாள்தனமான குரல்களுக்கு ஒத்தூவதென்பது பாஜக இரத்தத்தில் இரண்டறக் கலந்த ஒன்று..!!
“ஆடு நனைகிறதே என ஓநாய் கவலைப்பட்ட” பழமொழி கணக்கச்சிதமாக பாஜக வகையறாக்களுக்கு பொருந்தும் . இட ஒதுக்கீடு வேண்டாமென்றதும் புல்லரித்துப்போன பாஜகவின் அரசியல் சித்து விளையாட்டுகளையும் , இரட்டை நிலைப்பாடுகளையும் கொஞ்சம் அலசுவோம் .
உ.பி.யில் ஜாட் இன மக்கள் குறித்த ஆய்வினை அரசே நடத்தி அதில் “ஜாட் இன மக்கள் சமூக பொருளாதார அந்தஸ்தில் இட ஒதுக்கீட்டு உரிமையை பயன்படுத்தி கணிசமான முன்னேற்றம் கண்டுள்ளனர். எனவே அவர்களது இட ஒதுக்கீட்டை ரத்து செய்யலாம் “என அரசே முடிவெடுத்தபொழுது ஜாட் சமூகத்தை சார்ந்த அமைப்புகள் அதனை கண்டித்து பெரும்திரள் போராட்டங்களை முன்னெடுத்தனர் . அப்போராட்டத்திற்கான முழு ஆதரவை பாஜக அளித்தது . மறுபுறம் தாழ்த்தப்பட்ட மக்கள் இன்னமும் சாதிய வன்கொடுமைகளுக்கு இரையாகின்றனர் என்ற அரசின் அறிக்கை தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் சூழலில் இட ஒதுக்கீடு வேண்டாம் என்ற குரலை பாஜக உயர்த்திப் பிடிக்கிறது . பாஜக யாருக்கானது என அதன் கோட்பாட்டு புத்தியிலிருந்தே அடையாளமிட்டுவிடலாம் . சாதி வெறியால் சாகடிப்படும் சாமானியர்களை மதவெறியை தூண்டி சிறுபான்மையினருக்கு எதிரான கள ஆயுதக் குழுக்களாக மாற்றும் உத்திதான் பாஜகவின் கேடுகெட்ட அரசியல் . அதில் தானாக முன்வந்து கழுத்தை நீட்டியவர்தான் தங்கராஜ்.
தங்கராஜ் முன்வைத்த கோரிக்கை நியாமானதாக இருக்கலாம் . அதற்கான மாற்று இட ஒதுக்கீட்டை கேவலமானதாக நினைப்பதல்ல சாதியை கேவலமாக நினைப்பதுதான் . ஒருவேளை இட ஒதுக்கீடை மறுத்து “தேவேந்திர குல வேளாளர் “என்று பெயர் மாற்றம் செய்துவிட்டால் மட்டும் பிற சாதியினர் கலப்பு திருமணத்தை ஆதரித்து தாலியை எடுத்துத் தரப்போகிறார்களா என்ன..??
இளவரசனை ஏன் இழந்தோம் , கோகுல் ராஜை ஏன் பலியிட்டோம், செந்திலின் கை கால்களை எதற்காக சாதிக்கு காணிக்கையாக்கினோம் என்பதை புரிந்து கொள்ளாமல் பெயர் மாற்றம் வேண்டுமென முடிவெடுப்பது வடிகட்டிய முட்டாள்தனம்.
வெறுமென பெயர் மாற்றம் மட்டுமே தீர்வென அம்பேத்கர் அன்று முடிவெடுத்திருந்தால் தங்கராஜ் அமித்ஷா வின் முன் நின்று அறிக்கைகூட கொடுத்திருக்க முடியாது. தாழ்த்தப்பட்டோர் ஒன்று சேர்ந்து மாநாடு நடத்தியிருக்க முடியாது. அமித்ஷா , குருமூர்த்தி போன்றோரின் முன் வெள்ளைச் சட்டை அணிந்து சமமாக நின்றிருக்க முடியாது.
மொத்தத்தில் சக மனிதனாகவே வாழ்ந்திருக்க முடியாது. இவற்றையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு பெயரில் தான் பிரச்சினை என கூவுவதும் , ஒத்தூதுவதும் எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம் . எப்படிப்பட்ட சூழலில் அம்பேத்கர் அத்தகைய உரிமைக்காக குரல் கொடுத்தார் என்பதை ஆழ்ந்து கவனிக்க வேண்டும் .
அம்பேத்கர் பேசுகிறார் ..
” ‘எனக்குத் தாயகம் உண்டு என்று
நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால், நான்
மீண்டும் கூற விரும்புகிறேன்,
எனக்கு அது இல்லை.
நாய்கள்,பூனைகளைவிட நாங்கள் மோசமாக
நடத்தப்பட்டால்,
குடிதண்ணீர் பெறவும் உரிமை இல்லை என்றால்
சுயமரியாதையுள்ள எந்த
தீண்டப்படாதவன் இந்த நாட்டைத் தன்
நாடாகக் கருதுவான்?
இந்த நாடு எங்களுக்கு அளித்த உதவி,
இன்னல்களையும் அநீதிகளையும்
மலைபோல் எங்கள் மீது சுமத்தியதே ஆகும். யுகயுகமாகக் காலால்
மிதித்து நசுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட என்
மக்களுக்கு மனித உரிமைகளுக்காக
நான் செய்யும் முயற்சிகளின்
காரணமாக இந்த நாட்டுக்கு எவ்விதத்
தீங்கும் நேர்ந்துவிடாது.’ “”.
ஒடுக்கப்பட்ட மக்களை வைத்தே இட ஒதுக்கீடு வேண்டாமென்று சொல்ல வைப்பதும் ,
இஸ்லாமியர்களை வைத்தே சிறுபான்மையினர் பிரிவில் இஸ்லாமியர்கள் இல்லை என சொல்ல வைப்பதும் , கிருஸ்துவர்களை வைத்தே அவர்களது பிரச்சினைகளை மழுங்கடிக்கச் செய்ய வைப்பதும் பாஜக, ஆர்எஸ்எஸ் வகையறாக்களுக்கு கைதேர்ந்த கலை.
சுயமரியாதை பிரகடனம் செய்த தமிழகத்தில் இட ஒதுக்கீடு வேண்டாம் என்ற மதுரை பிரகடனம் நடந்தேறியது தான் கூடுதல் வேதனை. இந்தியாவிலேயே யாரும் கொண்டுவராத வரலாற்றுச் சிறப்புமிக்க சுயமரியாதை திருமணமத்திற்கான சட்ட அங்கீகாரத்தை திராவிட கட்சிகள் கொண்டுவந்தன. இன்றோ கலப்புத் திருமணத்திற்கு எதிராக சாதிய அணிகள் வெளிப்படையாகவே கட்டமைக்கப்படுவதை இருபெரும் திராவிட கட்சிகள் கைகட்டி , வாய் பொத்தி வேடிக்கை பார்க்கிறது . வன்கொடுமை சட்டத்தினை திரும்ப பெற வேண்டுமென்ற கோரிக்கையும் இதே சாதிய சங்கங்களால் முன்வைக்கப்படுகிறது. இதற்கும் திராவிட கட்சிகளிடத்தில் எந்தவொரு மறுப்பும் இல்லை .இத்தகைய ஆபத்தான சூழலில் தான் தங்கராஜின் “இட ஒதுக்கீடு வேண்டாம் “என்ற கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது.
ஒடுக்கப்பட்ட மக்களுக்கான வாழ்வியல் அங்கீகாரத்தை இந்திய சமூகம் அளித்தால் மட்டுமே இட ஒதுக்கீடு பற்றி பேசுவது நல்லது. அத்தகைய எந்தவொரு சாத்தியக்கூறுகளற்ற இறுக்கமான சாதியக் கட்டமைப்பில் வாழ்ந்து கொண்டு சமம் , சமத்துவம் என முழங்குவதெல்லாம் வெறுமனே பத்தாம் பசலித்தனம் தான். உரிமைகள் வேண்டாம் வர்ணங்களோடு வாழ்ந்துவிடுகிறோம் என்று சாதிய சமூகத்துக்குள் போர்த்திக்கொண்டு உறங்க ஆசைப்பட்டால் ஆம்பேத்கரின் வார்த்தையில் தான் அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டும் .
சாதிதான் சமூகமெனில்…
வீசும் காற்றில் விஷம் பரவட்டும் ..!!!
அஹ்மது யஹ்யா அய்யாஷ்
ahmed.joinislam@gmail.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக