தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சென்று சந்தித்தது தேர்தல் கூட்டணிக்கான அச்சாரமாகக்கூட இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
தேசிய கைத்தறி தின அறிவிப்பு மற்றும் தேசிய அளவில் நெசவாளர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடந்தது. விழா முடிந்ததும், போயஸ் தோட்டத்தில் உள்ள முதல்வர் ஜெயலலிதா வீட்டுக்கு பிரதமர் மோடி சென்றார்.
இந்த சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசு நெறிமுறைகளை மீறி பிரதமர் ஒரு மாநில முதல்வர் வீட்டுக்குச் சென்றிருக்கிறார் என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், அரசியல் கணிப்புகளை ஒப்பிட்டு பார்க்கும்போது இவ்வாறான அரசு நெறிமுறைகளை மீறுவதில் தவறில்லை என்பதை உணர்த்துவதுபோல் மோடி நேரில் சென்று ஜெயலலிதாவை சந்தித்திருக்கிறார்.
அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் தமிழக சட்டப்பேரவை தேர்தல் குறித்து பிரதமர் மோடி – ஜெயலலிதா சந்திப்பில் எவ்வித பேச்சுவார்த்தையும் இடம் பெறாவிட்டாலும், தனது கட்சியின் தமிழக பொறுப்பாளர்களைக் கூட அழைத்துச் செல்லாமல் பிரதமர் தானே தனியாக சென்றதன் மூலம் தமிழக பாஜகவுக்கு முக்கிய சமிக்ஞை ஒன்றை அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.
அண்மைகாலமாக, மதுவிலக்கு, ஊழல் விவாகரங்களை முன்வைத்து அதிமுக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறது தமிழக பாஜக.
அதேபோல் அண்மையில் மதுரையில் பேசிய பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, “தமிழக அரசு வளர்ச்சியடைந்த மாநிலங்களில் முதல் இடம் பெற்றிருப்பதுபோல், நாட்டில் ஊழல் மலிந்த மாநிலத்திலும் முதலிடத்தைப் பெற்றுள்ளது. தேர்தல் காலத்தில் தமிழகத்தில் அதிகளவு ஊழல்கள் நடைபெறுகின்றன” எனக் கூறியிருந்தார்.
ஆனால், மோடியைப் பொறுத்த வரை 2016 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி ஏற்படுத்திக் கொள்ள இன்னமும் வாய்ப்புகள் உள்ளன.
இத்தகைய சூழலில், அதிமுகவுடன் கொண்டுள்ள கரார் போக்கை சற்றே தணிக்க மாநில பாஜகவினர் முற்படவேண்டும் என்பதை உணர்த்தவே பிரதமர் மோடி ஜெயலலிதாவை சந்தித்திருக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது.
2014 மக்களவை தேர்தலில் பாஜகவுடன் ஓரணியாக நின்ற மதிமுக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் தற்போது தங்களிடம் ஈடுபாடு காட்டாத நிலையில் பலம் வாய்ந்த கூட்டணி இல்லாத சூழலில் பாஜக இருக்கிறது.
எனவே ஊழல் வழக்குகளை முன்வைத்து ஜெயலலிதாவை தங்கள் கூட்டணிக்கு இழுக்கும் முயற்ச்சிகளிலும் பாஜக இறங்கியிருக்கிறது.
நன்றி தூது ஆன்லைன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக