யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்ட செய்தியை சர்ச்சைக்குரிய வகையில் வெளியிட்டதாகக் கூறி 3 செய்தி சேனல்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியதற்கு இந்திய பத்திரிகையாளர்கள் அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
யாகூப் தூக்கிலிடப்பட்ட பிறகு, மும்பை நிழல் உலக தாதா சோட்டா ஷகீலிடம் 2 செய்தி சேனல்கள் தொலைபேசியில் பேட்டி எடுத்து ஒளிபரப்பின. இதேபோல் மற்றொரு செய்தி சேனல், யாகூப் மேமனின் வழக்கறிஞரிடம் பேட்டி எடுத்து ஒளிபரப்பியது.
இந்த 3 சேனல்களும் யாகூப் தூக்கிலிடப்பட்ட செய்தியை சரியாக கையாளவில்லை என்றும் சமுதாயத்தில் ஒரு குறிப்பிட்ட மதத்தவர் மத்தியில் அவநம்பிக்கையை ஏற்படுத்தும் விதத்திலும், உள்நோக்கத்துடன் நீதித் துறைக்கு களங்கம் கற்பிக்கும் வகையிலும் செய்தி ஒளிபரப்பியதாக 3 சேனல்கள் மீதும் மத்திய அரசு அதிருப்தி அடைந்துள்ளது.
இதையடுத்து, “தங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது என்பது குறித்து 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும்” என்று கேட்டு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் சம்பந்தப்பட்ட சேனல்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
அந்த நோட்டீஸை உடனே திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தை ‘எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா’ கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், “கேபிள் டிவி கட்டுபாட்டு விதிமுறைகளின் கீழ் ஆஜ்தக், ஏபிபி நியூஸ், என்.டி.டிவி ஆகிய சேனல்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.
அந்தக் கட்டுப்பாட்டு விதிமுறைகளில் பொதுநலன் மற்றும் பொது ஆர்வம் குறித்த சுதந்திரமான விவாதங்களுக்கு எதிராக எதுவும் இல்லை. அதாவது, அரசுக்கு ஏற்றுக் கொள்ள முடியாத உள்ளடக்கங்கள் இருந்தாலும் கூட கட்டுப்பாட்டு விதிமுறைகளில் இத்தகைய நோட்டீஸ் அனுப்பப்படுவதற்கான காரணிகள் இல்லை.
குடியரசுத் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் முன்வந்த யாகூப் மேமன் விவகாரம் அதனையடுத்து தூக்கிலிடப்பட்ட விவகாரம் பரந்துபட்ட பொது ஆர்வத்தையும், பலதரப்பட்ட கருத்துகளையும் வெளிக்கொணர்ந்துள்ளது.
இந்த விவாதங்கள் அரசியல் பேச்சு அல்லது உரை என்ற அளவிலேயே உள்ளது. எனவே இந்த பேச்சுரிமை கட்டுப்பாடுகளின்றி அனுமதிக்கப்பட வேண்டும்.
அரசால் ஏற்றுக் கொள்ள முடியாத கருத்துகள் வன்முறையைத் தூண்டுகிறது என்றோ, துவேஷத்தை பரப்புகிறது என்றோ தண்டனைக்குரியதாக்கப்பட முடியாதது.
எனவே, இந்திய பத்திரிகை ஆசிரியர்கள் கூட்டமைப்பு, சேனல்களுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸை திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தை கேட்டுக் கொள்கிறது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நன்றி தூது ஆன்லைன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக