தனக்காக என்ன ஒரு தமிழனத்தின் சுதந்திரம் பற்றி பேசவே தமிழ்நாட்டில் சுதந்திரம் இல்லை! நேரம் காட்டும் கடிகாரத்திற்கு இருக்கும் சுதந்திரம் நேரம் பார்க்காது உழைக்கும் தொழிலாழிகளுக்கு
இல்லை !தடை இல்லாமல் இடைவிடாது இயங்கும் இருதயத்திற்கான சுதந்திரம் இந்தியாவில் இயக்கவாதிகளுக்கு
இல்லை! காந்திமட்டும் இப்போது இருந்தால் தனது முன் சொன்ன கருத்திலிருந்து பின்வாங்கியிருப்பார்!
எங்கள் சுதந்திரம் எங்கள் கைகளுக்கு வந்தது என்பதை நான் மறுக்க வில்லை! ஆனால் கைக்கு வந்தது வாய்க்கு வரும் வழியிலேயே நழுவிப்போனது என்பதை மறக்கவும் இல்லை! சொன்னால் கேவலம்! நஞ்சை புஞ்சைகளில் கூட தஞ்சை கோபுரங்களாய் கட்டிடங்கள் கட்டப்பட்டு விட்டதால் சில கிராமத்து மக்களுக்கு காலைக்கடன் கழிக்கவே சுதந்திரம் இல்லை!
இங்கே சிலருக்கு அதன் பெருமை தெரியவில்லை!!
புல்லாங்குலலின் இசை மட்டும் எங்களுக்குத்
தெரியும் !இசைக்காக தன் உடலில் சூடு வைத்துக் கொண்ட மூங்கிலின் வலி தெரியாது! கைகளில் தவழும் குழந்தையை தெரியும்! குழந்தைக்காக குற்றுயிர் குலையுயிராக இறுதிவரை குருதி சிந்திய தாயைப் பற்றி தெரியாது !!எங்கள் சுதந்திரக் குழந்தையும் குருதிகளிலிருந்தே மீட்டெடுக்கப்பட்டாள்!
வேவுகனைகளால் தப்பு செய்த ஆங்கிலேயனை தன் ஏவுகணையால் ஆப்பு வைத்த திப்பு சுல்தான்! கொடிபிடித்தே மடிந்துபோன எங்கள் கொடிகாத்த குமரன் !சுதந்திரம் அடைந்த பின்பும் இரத்தம் சிந்தி இறந்த காந்தி!! ஆங்கிலேயின் துப்பாக்கிகளுக்கு அஞ்சாமல் தன் நெஞ்சு நிமிர்த்திய குஞ்சு மரைக்காயர்! நீ துப்பாக்கி தூக்கிய பிறகுதான் ஆங்கிலேயன் பயந்தான் என ஒரு கூட்டம் சபாஷ் போடும் எங்கள் சுபாஸ் சந்திர போஸ்!!
நாங்களும் சுதந்திரம் அடைந்து விட்டோமென எங்கள் இல்லத்தார்களுக்கு தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளும், குழந்தைகளுக்கு அவசரமாக விநியோகிக்கப்பட்ட ஆரஞ்சுமிட்டாய்களும், இளைய சமுதாயத்திற்கு தன் சட்டைப்பைகளில் குத்திக்கொண்ட கொடிகள் மட்டுமே சொல்லிக் கொண்டிருக்கின்றன. கொண்டாடியதும் மறுநாள் மறந்துபோகும் பண்டிகைகள் போல் அதுவும் கடந்தே போகும் !நாங்களும் எப்போதாவது எங்கள் சுதந்திரத்திற்காக போராடுகிறோம்! கிளைமேக்ஸில் ஹீரோ பந்தாடிய வில்லன்களை பிடிக்க போராடும் போலீஸ்காரர்கள் போல் போராடுகிறோம் நாங்களும்!!
எங்கள் ஏழை விளையாட்டு வீரர்கள் நீளம் தாண்டவே பயிற்சி அளிக்காத அரசாங்கம் வறுமைக்கோட்டை தாண்ட முயற்சி பண்ணாத வரையிலும் ,அப்பாவி மருமகள்களை தன் மகளாக மாமியார்கள் பாவிக்காத வரையிலும், தன் இறுதி சடங்கிற்கே செலவழிக்க உறுதி இல்லாத ஏழைகள் இருக்கும் வரையிலும், கட்டையில் போகும் வரையிலும் தங்கள் இயக்க போராட்டாங்களுக்கு முட்டுக்கட்டையாக அரசாங்கம் இருக்கும் வரையிலும்…
படித்தும் நாங்கள்
பாமரர்கள்! சுதந்திரம் அடைந்த அடிமைகள்! முகவரி தொலைத்த காகிதங்கள் !இயற்கை வளம் மிகுந்த ஏழைகள் !!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக