Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2015

ஆட்டம் காணும் ஆயில் உலகம்! எதிர்நோக்குவது என்ன?

“நீரின்றி அமையாது உலகு” என்பர்.  “ஆயிலின்றி  அமையாது உலகு” என தற்போது மாற்றி சொன்னாலும், யாரும் மறுத்திட இயலாது என்பதே நிதர்சனம். இயந்திரமயமான உலகில், ஆற்றல் சார்ந்த பெரும்பான்மை சாதனங்கள், கச்சா எண்ணெய் அல்லது அதன் உற்பத்திப் பொருளைக்  கொண்டே இயங்குகின்றன. எனவே தான் கச்சா எண்ணெயின் விலை மாறுதல்கள் உலக பொருளாதாரத்தை அவ்வப்போது அசைத்துப் பார்க்கின்றது. 
​​
தற்போது ஆயில் உலகம் சந்தித்து கொண்டிருக்கும் வீழ்ச்சி, உலக பொருளாதாரத்தை நெருக்கடிக்கு உள்ளாக்குமோ என்ற அச்சம் பொருளாதார நிபுணர்களிடையே வெகுவாக எழுந்திருக்கிறது. அரங்கேறி வரும் பொருளாதார நடவடிக்கைகளை உற்று நோக்கினால், அபாய சங்கொலி ஒலிப்பதை நம்மாலும்  உணர முடியும். 
கடந்த 2008-ல் ஏற்பட்ட பொருளாதார  நெருக்கடி கற்றுக் கொடுத்த பாடம், இம்முறை எண்ணெய் வளத்தை தன்னகத்தே கொண்ட அரேபிய நாடுகளை முன் கூட்டியே யோசிக்க வைத்திருக்கிறது போலும். பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய, விலை ஏற்றங்களுக்கும், வரி விதிப்புகளுக்கும் தயாராகின்றன வளைகுடா நாடுகள். (வழக்கம்போல் ஐயோ பாவம் வெளிநாட்டவர்கள் தான்!). என்னய்யா பெரிய பீடிகை… விஷயத்துக்கு வா என்று நீங்கள் சொல்வது கேட்கிறது… அப்படியே ஒரு நூறு ஆண்டுகள் ரீவைண்ட் செய்து ஆரம்பிப்போம்.
கச்சா எண்ணெய் பயன்பாடு
​கச்சா எண்ணெயை முதன் முதலாக கி.பி 1556 இல் ஜெர்மன் கனிமவியலாளர் ஜியார்ஜியஸ் அகிரிகோலா (Georgius Agricola) என்று அறியப்பட்ட, “கியார்கு பௌவர்” (Georg Bauer) என்பவர் பயன்படுத்தியதாக அவருடைய ஆய்வுநூல் தெரிவித்தாலும், சுமார் 100 ஆண்டுகளுக்கும் முன்னர், மே 26, 1908 ஆம் நாள் பெர்சியாவில், ஒரு பிரித்தானிய நிறுவனம் எண்ணெய்க் கிணறு ஒன்றை வெட்டி எண்ணெய் எடுத்ததே,  இன்றைய கச்சா எண்ணெய் பயன்பாட்டுக்கு வழிவகுத்த முதல் நிகழ்வு. 
Inline image 2
1900 களின் துவக்கத்தில் கச்சா எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டாலும், அதன் உற்பத்தி அளவு மிக  மிக குறைவுதான். 20ம் நூற்றாண்டின் நடுப்பகுதியே எண்ணையின் உற்பத்தியும், பயன்பாடும் உலகில் அதிகரிக்கத் துவங்கிய காலம். பயன்பாடு அதிகரித்தால் பணமும் அதிகரிப்பதுதானே இயல்பு. அதனடிப்படையில் விலையில் ஏறுமுகத்தைக் கண்டது எண்ணெய்! 
1950 முதல் 1973 வரையிலான ஆண்டுகளில் ஒரு பேரல் (சுமார் 160 லிட்டர்கள்) கச்சா எண்ணெயின் விலை சுமார் $22 (+/-3) அமெரிக்க டாலர் என்னும் அளவிலேயே இருந்தது. ஆனால் 1974 ஆம் ஆண்டு துவக்கத்தில், $52 அமெரிக்க டாலர் அளவிற்கு உயர்ந்து அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்த விலையேற்றம் இயல்பாய் ஏற்பட்டதல்ல. மேற்கத்திய உலகை பணிய வைத்த அரபுலகின் துணிச்சலான முடிவே இந்த விலையேற்றத்திற்கு காரணம். 
எண்ணெய் போர்
 
ஆம்! 1973 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேலிய படைகளுக்கு அமெரிக்கா ஆயுதங்களை வழங்கி அரபு நாடுகளுக்கு எதிரான போருக்கு உதவியது. இதனை எதிர்த்திட, OPEC நாடுகளின் கூட்டமைப்பு, மேற்கத்திய நாடுகளுக்கான  எண்ணெய் ஏற்றுமதிக்கு “வணிகத்தடை” முடிவை எடுத்தது. இத்தடையின் மூலம் உடனடியாக பலவகையில் பொருளாதார தாக்கங்கள் ஏற்பட்டன. ஓபெக் (OPEC) அமைப்பின் நடவடிக்கைகள் மூலம், எண்ணெய் நிறுவனங்கள் கடுமையான விலை ஏற்றத்தை அமல்படுத்த வேண்டிய கட்டாயத்திற்க்கு தள்ளப்பட்டது. ஆயுதப்போர் இறுதியில் எண்ணெய் போர் ஆனது. அரபு நாடுகள் எண்ணெய் உற்பத்தியை தடைசெய்ததன் மூலம் போரினை முடிவுக்கு கொண்டு வந்தததால் இது “எண்ணெய் ஆயுதம்” என்றும் வர்ணிக்கப்படுகிறது.
​​Inline image 1
இந்த நெருக்கடி காலங்களில் அதிகம் பாதிப்பிற்குள்ளாகியது அமெரிக்கா தான். அந்த வருடம் கிறிஸ்துமஸ் விளக்குகளை எரிய விட வேண்டாம் என மக்களை கேட்டுக்கொண்டது அமெரிக்க அரசு. மேலும் வார இறுதி நாட்களில் பெட்ரோல் விநியோகத்திற்கு  தடையும்  விதித்தது. 1973-74 ஆண்டுகளில் குளிர்காலத்தில் பிரிட்டனில் ஒரு பெரிய ஆற்றல் நெருக்கடியால் நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள் மற்றும் இரயில் தொழிலாளர்கள் அதிகமாக  பாதிக்கப்பட்டனர்.மேலும் இங்கிலாந்து , ஜெர்மனி , இத்தாலி , சுவிச்சர்லாந்து , நார்வே போன்ற நாடுகளில் ஞாயிறு அன்று ஆற்றல் சார்ந்த பொழுதுபோக்குகள் (பறத்தல்,ஓட்டுதல் மற்றும் படகு சவாரி ஆகிய) அனைத்தும்  தடை செய்யப்பட்டது. ஸ்வீடன் நாடானது எண்ணெய் மற்றும் மின்சாரம் ஆகியவற்றில் பொது விநியோக (ரேசன்) முறையை அறிமுகப்படுத்தியது.நெதர்லாந்து நாட்டில் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட அளவை விட அதிகமாக எரிபொருட்களை பயன்படுத்துவோர்க்கு சிறை தண்டை கூட விதிக்கப்பட்டது. 
செல்லாக்காசு ஆன அமெரிக்க டாலர் 
உலகையே ஆட்டிப்படைத்த ஓபெக் (OPEC) அமைப்பின் நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டுவர, மார்ச் 1974 இல் வாஷிங்டன் நகரில் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.  எண்ணெய் கூட்ட பேச்சுவார்த்தையின் விளைவாக நெருக்கடி நிலை விலக்கிக்கொள்ளப்பட்டது. எனினும் இதன் விளைவுகள் 1970 களில் உலக சந்தையில் டாலரின் முக்கியத்துவத்தை குறைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. மற்றொரு முக்கியமான விளைவு, விலை ஏற்றங்களால், அரபு நாடுகளில் செல்வம் குவிய,அந்த ஆண்டுகளில்தான் தங்கள் வளத்தினை உணர்ந்தது அரபு நாடுகள். அதன் பின்னரே அந்நாடுகளில் பெரிய அளவில் வேலை வாய்ப்புகள் ஏற்பட்டு, அபார வளர்ச்சி அடைந்தன.
ஈரான் புரட்சியில்…
1974 முதல் 1979 வரையிலான ஆண்டுகளில் கச்சா எண்ணெயின் விலை சுமார் $50 அமெரிக்க டாலர் என்னும் அளவில் தொடர்ந்தது. இந்நிலையில் தான் ஈரானில் புரட்சி வெடித்து, இரண்டாம் “எண்ணெய் நெருக்கடி” ஏற்பட்டது. உலக எண்ணெய் உற்பத்தியில் (சுமார் 4.5% சதவிகித பங்களிப்பை அளித்து) ஏழாம் இடத்தில் இருக்கும் ஈரானில் ஏற்பட்ட புரட்சியால், மீண்டும் நெருக்கடி நிலை ஏற்பட்டதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. அந்த ஆண்டில் ஈரான் தங்களது ஒட்டுமொத்த  உற்பத்தியையும் நிறுத்தியது என்றே சொல்லலாம். இராக்கின் உற்பத்தியும் வெகுவாக குறைந்து, 50 களில் இருந்த பேரல் விலை எட்டுக்கால் பாய்ச்சலில் நூறைத் தாண்டியது. 
 உற்பத்தியை துவக்கிய NON-OPEC நாடுகள் 
தேவைகள் ஏற்படும்போது தான் கண்டுபிடிப்புகள் நிகழ்கின்றன (Necessity is the mother of invention) என்பார்கள். அதுபோல் முதல் நெருக்கடியும், இரண்டாம் நெருக்கடியும், பல்வேறு நாடுகளை, தங்களின் எண்ணெய் தேவைக்கு OPEC நாடுகளை மட்டும் சார்ந்திருப்பது அறிவார்ந்த செயல் ஆகாது என்பதை உணர்த்தியது. மாற்று வழியின் தேடலின் விளைவாக, பல நாடுகள் தங்கள் நாட்டில் உள்ள எண்ணெய் வளங்களை கண்டறிந்து உற்பத்தியை பெருக்கியது. OPEC நாடுகளுக்கு மாற்றாக  NON-OPEC நாடுகள் உற்பத்தியை பெருக்க, உலகின் முதன்மை உற்பத்தி நாடாக USSR ( Union of Soviet Socialist Republics) உருவெடுத்தது. இதனால் உயர்ந்து கொண்டே சென்ற எண்ணெய் விலை, 20 ஆண்டுகளுக்கு முன் இருந்த விலைக்கு வீழ்ச்சி அடைந்தது. 
​​வளைகுடா போர் வளைத்த விலை
 
கி.பி.1980 களில் 25 டாலர் முதல் 35 டாலர் வரை ஏற்ற இறக்கங்களோடு  நிலை பெற்றிருந்த என்னை விலை, இராக், குவைத் மீது தொடுத்த போரினால் மீண்டும் உச்சத்தை எட்டியது. 65$ வரை சென்றாலும், குவைத்திற்கு அமெரிக்கா போர் உதவி செய்து, அதில் வெற்றியும் கண்டதால், இந்த விலை ஏற்றம் வெகு நாள் நிலைக்கவில்லை. வளைகுடா போர் என அறியப்படும், இப்போருக்குப் பின் தொடர்ந்து விலை சரிவு இருந்து கொண்டே இருந்தது. 1973 க்கு முன் இருந்த விலை வரை வீழ்ச்சி அடைந்தது.  அதன் பின் அமெரிக்க மற்றும் ஆசிய கண்டங்களின் பொருளாதார வளர்ச்சி 1997 வரை விலையில்  ஓர் நிலைத்தன்மையை ஏற்படுத்தியது.
பொருளாதார நெருக்கடி 
​​
ஆனால் 1998 இல் ஆசிய நாடுகள் சந்தித்த  பொருளாதார நெருக்கடியால், கச்சா எண்ணெயின் பயன்பாடு மிக மிக குறைந்து, 1982 ஆம் ஆண்டின் பயன்பாட்டின் அளவுக்கு சென்றது. அதேநேரம் இதை சரிவர  கணிக்காத, OPEC நாடுகள், தங்களது எண்ணெய் உற்பத்தியை நாளொன்றுக்கு 2.5 மில்லியன் பேரலில் இருந்து 27.5 பேரலாக உயர்த்தியது. பத்து மடங்கு அதிக உற்பத்தி மற்றும் குறைவான பயன்பாடு, மீண்டும் வரலாறு காணாத விலை (16.5$)  வீழ்ச்சிக்கு வித்திட்டது. பின் OPEC நாடுகள் தங்களது உற்பத்தியை சுமார் 3 மில்லியன் பேரல் அளவு குறைத்து 25$ எனும் அளவிற்கு விலையை தூக்கி நிறுத்தியது. 
இரட்டை கோபுர தாக்குதல் 
​​
கி.பி 2001 ல் அமெரிக்காவின் இரட்டை கோபுரங்கள்  தாக்குதலுக்கு உள்ளாக, கோபுரங்களுடன் சேர்ந்தே சரிந்தது எண்ணெய் விலை. ஷ்ஷ்ஷ்ஷ்… அப்பப்பா என்னடா இது… என்ற சத்தம் எனக்கே கேட்டாலும் என்னங்க பண்றது… நான் என் கடமையைத்தானே செஞ்சேன்னு சொல்லிட்டு…. மிச்ச மீதி கதையையும் சொல்லிடலாம்னு நினைக்கிறேன். இப்படி பரமபத விளையாட்டு போல, ஏறுவதும் இறங்குவதுமாக இருந்த எண்ணெய் விலை, 2002 முதல் 2008 ன் ஜூலை மாதம் வரை  ஏறிக்கொண்டேதான்  சென்றது. அதுவும் வரலாறு காணாத ஏற்றமாக 145.3 $ தொட்டு  NYMEX  ல் (The New York Mercantile Exchange) ரெக்கார்ட் பதித்தது. 
2008 உலகப் பொருளாதார நெருக்கடி 

கடந்த 80 வருடங்களில் சந்திக்காத மிகப்பெரும் பொருளாதார பின்னடைவை உலகம் சந்தித்தது 2008 ம் ஆண்டில் தான். பேராசையின் விளைவே இந்த நெருக்கடிக்கு மிக முக்கிய காரணம். கிரடிட் கார்டுகளையும், அதிக பட்ச லோன்களையும் ​​அள்ளிக் கொடுத்த வங்கிகள் (குறிப்பாக 150 வருட பாரம்பரியமிக்க  லெஹ்மான் ப்ரதர்ஸ் நிறுவனம்), திவாலானதால் மிகப்பெரும் பொருளாதார நெருக்கடியும், அதனைத் தொடர்ந்து நிறுவனங்களில் ஆள் குறைப்பு, உணவுப் பொருட்களின் விலையேற்றம் என மிகப்பெரும் மிரட்டலோடு துவங்கியது 21ம் நூற்றாண்டு.  அன்று ஏற்பட்ட நெருக்கடியின் தாக்கம் இன்று வரை குறையவில்லை என்றுதான் கூற வேண்டும். இப்பொருளாதார நெருக்கடியில் பெரிதும் பாதிப்படைந்தது அமெரிக்கா மற்றும் துபாய் தான். இவ்வளவு நடந்த பின் எண்ணெய் விலையில் மாற்றமில்லாமல் இருக்குமா? 45$ க்கும் குறைவாக சென்றது எண்ணெய் விலை. 
உணர்த்துவது என்ன ?
மேற்கண்ட வரலாற்றை சற்றே கவனித்தால் சில உண்மைகள் நமக்கு புலப்படும். மத்திய கிழக்கு நாடுகளில் எப்போதெல்லாம் அமைதி குலைகிறதோ, அப்பொழுதெல்லாம் எண்ணெய் விலையில் தலைகீழ் மாற்றம் ஏற்படும். எப்பொழுதெல்லாம்   எண்ணெய் விலையில் மாற்றம் ஏற்படுகிறதோ அப்பொழுதெல்லாம் பொருளாதார நெருக்கடிக்கான அபாயமும் சேர்ந்தே ஏற்படும். அத்தகைய சூழல் தற்போதும் ஏற்பட்டுள்ளதோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஏனெனில் கச்சா எண்ணெயின் தற்போதைய விலை 40 டாலருக்கும் குறைந்து விட்டது.
எச்சரிக்கை நடவடிக்கைகளில் அரபு நாடுகள்
இதை உணர்ந்த அரபு நாடுகள் சில எச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன. குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகம், பெட்ரோலிய பொருட்களுக்கான மானியத்தை கடந்த மாதம் முதல் குறைத்திருக்கிறது. மேலும் மதிப்பு கூட்டு வரி (VAT) இன்னும் 18 மாதங்களில் அமல் படுத்தப்படும் எனவும் அறிவித்திருக்கிறது. வரி இல்லாத நாடாக திகழ்ந்ததால் பல முதலீட்டாளர்களை தன் வசம் இழுத்து உலகின் மிகப்பெரும் சந்தையாக திகழும் ஐக்கிய அரபு அமீரகத்தின் இத்தகைய முடிவு, அதன் வளர்ச்சியை வெகுவாக பாதிக்கும் என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். மேலும் வரி விதிக்கப்பட்டால் எலெக்ட்ரானிக் சாதனங்களின் விலையும் அதிகரிக்கும். இதனால் விற்பனை மந்த நிலையும் ஏற்பட வாய்ப்புள்ளது. 
ஆயில் உலகம் ஆட்டம் காண்பது மொத்த உலகுக்கும் நல்லதல்ல. எனவே முன்னேற்பாடுகள் ஆட்சித் தலைவர் முதல் குடும்பத் தலைவர் வரை அனைவராலும் எடுக்கப்பட வேண்டும்.
முஹம்மது ஷாஃபி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக