”எங்கள் குழந்தைகளின் டிசியைக் கொடுங்கள். நாங்கள் வேறு பள்ளிகளில் அவர்களைச் சேர்த்துக் கொள்கிறோம். இந்தப் பள்ளியில் எங்கள் குழந்தைகள் படிக்க வேண்டாம்” என்றனர் பெற்றோர்கள். இதற்குக் காரணம் என்னவென்று நீங்கள் நினைக்கிறீர்கள் ?. அந்தப் பள்ளியில் குழந்தைகளுக்குச் சரியாக பாடம்
கற்பிக்கவில்லை என்றா ? அவ்வாறு இல்லை. சில தினங்களுக்கு முன், பள்ளிக்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்திய சிலர், போதை அதிகமானதால் பள்ளிக்குள் வந்து படுத்துக் கொண்டனர். இதனை அறிந்த பெற்றோர், பள்ளிக்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். ஆனால் மதுக்கடை அகற்றப்படவில்லை. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகளும் திறந்துவிட்ட நிலையில் அதிகாரிகள் கூறியதுபோல், மதுக்கடை அந்த இடத்திலிருந்து அகற்றப்படவில்லை. கோபமடைந்த பெற்றோர்கள், பள்ளி நிர்வாகத்திடம் குழந்தைகளின் டிசியை வழங்கக்கோரி முற்றுகையிட்டனர். இந்தச் சம்பவம் நடந்தது நீலகிரி மாவட்டம் பெத்தட்டியில் உள்ள துவக்கப் பள்ளியில்.
இந்தியாவில் மது அருந்துவோர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு :
இந்தியர்களின் குடிப்பழக்கம் கடந்த 20 ஆண்டுகளில் 55 சதவீதம் வரை உயர்ந்துள்ளது என ஓஇசிஎடி (Organization for Economic Cooperation and Development – OECD)என்ற பன்னாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக அளவில் இளமையிலேயே மது அருந்தத் தொடங்குபவர்களின் எண்ணிக்கையில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. மொத்தம் உள்ள மக்கள் தொகையில் 30 சதவீதம் பேர் மது அருந்துபவர்களாகவும், அதில் 50 சதவீதத்தினர் ஆல்கஹால் அதிகம் உள்ள அபாயகரமான மதுவினைக் குடிப்பதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. 2003-05 வருடத்தில் 1.6 லிட்டராக இருந்த தனிநபர் மது நுகர்வு, கடந்த 2010-2012ல் 2.2 லிட்டராக உயர்ந்துள்ளது. இது தனிநபர் ஒருவரின் வருடாந்தர மது நுகர்வு ஆகும். மது அருந்துபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது போன்றே, அவர்கள் அருந்தும் அளவும் அதிகரித்துள்ளது. அதேபோல், இந்தியாவில் 2020ஆம் ஆண்டில் இதன் அளவு 4.6 சதவீதமும், 2025-ல் 4.9 சதவீதம் அதிகரிக்கும் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் பீர் அருந்துபவர்களின் எண்ணிக்கை 6.8 சதவீதமாகவும், ஒயின் அருந்துபவர்களின் எண்ணிக்கை 0.1 சதவீதமாகவும், ஸ்பிரிட்ஸ் பயன்படுத்துவோர்களின் எண்ணிக்கை 93.1 சதவீதமாகவும் உள்ளது. அவர்கள் தினமும் 62.7 கிராம் ஆல்கஹால் உட்கொள்கிறார்கள். இது வருடத்தில் 22 லிட்டராக உள்ளது.
இந்தியாவில் மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத்தில், கள்ளச் சாராயம் அதிக அளவில் விற்பனையாகி வருகிறது. 2014 மக்களவைத் தேர்தலின்போது குஜராத்தில் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காகக் கொண்டு சென்ற ஒரு கோடி லிட்டர் கள்ளச் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது; குஜராத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு ஜூலையில் கள்ளச் சாராயத்துக்கு 107 பேர் பலியானார்கள்.
நீண்ட காலமாக மதுவிலக்கு அமலில் இருந்த தமிழகத்தில், தற்போது அரசே நடத்தும் டாஸ்மாக் பல விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. மது அருந்துவோர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதை டாஸ்மாக் வருமானம் மூலம் தெரிந்து கொள்ளலாம். 2003-2004ஆம் ஆண்டுகளில் 3,639 கோடி ரூபாயில் தொடங்கிய வருமானம், படிப்படியாக உயர்ந்து தற்போது 26,188 கோடி ரூபாய் அளவுக்கு உள்ளது. ஒரு புறம் மது விற்பனை அதிகரிப்பதும், மறுபுறம் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. சாலை விபத்துகள் அதிகம் நிகழும் மாநிலமாக தமிழகம் உள்ளது. 2013ஆம் ஆண்டில் மட்டும் போதையில் வாகனம் ஓட்டி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 718 ஆகும். மது அருந்துவதால் ஏற்படும் போதை மட்டுமின்றி, அதில் ஒயிட்னர் போன்ற ரசாயனங்களைக் கலந்து குடிக்கும் நிலையும் அதிகரித்து வருகிறது.
குடிப்பழக்கத்தால் ஏற்படும் உயிரிழப்புகள்
போதைக்கு அடிமையாகும் நிலை
ஆசையில் ஆரம்பிக்கும் இந்தக் குடிப்பழக்கம் பின்னர் மெல்ல மெல்ல அவதாரமெடுத்து அதிக அளவில் குடித்தால் தான் போதை வரும் என்ற நிலைக்குத் தள்ளிவிடுகிறது. சிலர் குடிப்பதற்கு பல நியாயமான கருத்துக்களைச் சொல்வர். ஆனால் அந்தக் கருத்துக்கள் எல்லாம் அவர்கள் பார்வையை மறைக்கும் வார்த்தைகள்தான். பொய்யான காரணங்களை அடுத்தவரிடம் கூறிக்கொண்டு தங்களை தாங்களே ஏமாற்றிக்கொள்கின்றனர். குடிப்பழக்கத்திற்கு அடிமையாகும் தீவிரத்தை உணர மாட்டார்கள். மதுவினால் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் விபரீதங்களுக்கு அளவில்லாமல் உள்ளது. மது போதையினால் ஏற்படும் வாகன விபத்துக்கள், அதனால் அதிகரிக்கும் உயிரிழப்புகள், கொலை, கற்பழிப்பு போன்ற குற்றச்செயல்கள் மதுவின் போதையால் நடந்தது என பதிவு செய்யப்பட்ட வழக்குகள் பல உள்ளன.
ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு போதுமா ?
டாஸ்மாக் வருமானம் 26 ஆயிரம் கோடி ரூபாய் என்பது மாநில அரசின் வருவாயில் 20 சதவிகிதமாக உள்ளது. ஆனால் மதுவினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு தமிழக அரசு ஒதுக்கியுள்ள தொகை மிகக் குறைவே. கடந்த 2013ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் போது, பள்ளிகளில் கட்டுரைப் போட்டிகள் நடத்தவும், அதற்கு ரூ.ஒரு கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் தமிழக அரசு தெரிவித்தது. இந்த நிதி உண்மையில் போதுமானதா ? அல்லது இது போன்ற கட்டுரைப் போட்டிகள் மட்டும் நடத்தி மது அருந்துபவர்களைத் திருத்த முடியுமா ?.
மதுபானக் கல்வி காலத்தின் தேவை
மது போதையால் பள்ளி மாணவர்கள் செய்யும் ரகளைகளும் அதிகமாகி விட்டன. அண்மையில் கோவை தனியார் பள்ளியில் பிளஸ் டூ படிக்கும் மாணவி, மது அருந்திவிட்டு பொது இடத்தில் தகராறில் ஈடுபட்டது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துவிட்டது. பள்ளிப் பருவத்தில் தடம் மாறும் மாணவர்களை திருத்த கட்டுரைப் போட்டி மட்டும் போதாது. மது ஒழிப்பு குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரம் எங்கிருந்து தொடங்கப்பட வேண்டும் என்பதனை அரசு சிந்தித்துப் பார்க்க வேண்டும். மதுவினால் ஏற்படும் விளைவுகள் குறித்த விழிப்புணர்வைப் பள்ளிப் பாடங்களிலிருந்து ஆரம்பிக்கவேண்டும். அரசு மற்றும் அரசு இயந்திரம் செயல்படும் விதத்தை எப்படி குடிமையியல் என்ற பாடப்பிரிவின் மூலம் விளக்கப்படுகிறதோ அது போன்றே மதுவினால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் பள்ளிப் பருவத்தில் மாணவர்களிடம் பாடம் நடத்தவேண்டும்.
மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் சமீப காலமாக போராடி வருகின்றனர். மாணவர்களுக்கு தற்போதைய தேவை மதுவிலக்கு மட்டுமல்ல மதுபானத்தினால் ஏற்படும் விளைவுகளை தெரிந்து கொள்ளக்கூடிய மதுபானக் கல்வியும் கூட.
நன்றி இப்போதுடாக்காம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக