Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2015

இஸ்லாமிய ஆட்சியின் வியக்க வைக்கும் தீர்ப்புகள் ...

இஸ்லாமிய ஆட்சியின் வியக்க வைக்கும் தீர்ப்புகள்!
 செங்கம் எஸ்.அன்வர்ஷா
உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு எதிராக, கலீஃபா அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் வழக்கு தொடுத்த பெண்மணி.

o பாதிக்கப்பட்ட கிறிஸ்தவருக்கு சாதகமாக தன்னுடைய கவர்னரின் மகனுக்கு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் வழங்கிய தண்டனை!

o ஜமாஅத்துடன் தொழாத சுல்தானின் சாட்சியத்தை ஏற்க மறுத்த நீதிபதி!
"லோக்பால்" மசோதாவில் பிரதம மந்திரியையும் விசாரிக்கும் சட்டம் கொண்டுவர வேண்டுமெண்று இன்று குரல் எழுப்பப்பட்டு வருகிறது. 

அதே சமயம் வரலாற்றைப் புரட்டிப்பார்ப்பவர்களுக்கு இஸ்லாமிய ஆட்சியில் நாட்டின் கலீஃபாவுக்கு எதிராக வழக்குத் தொடர முடியும் எனும் உண்மையை எவரும் கண்டுகொள்ள முடியும்.

இஸ்லாத்தில் நீதிக்கு மிகவும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. ஏழை எளியவர்களும் அச்சமின்றி நீதிமன்றத்தை அணுகி, எளிதில் சட்டப்படி தீர்ப்பினை பெற்றுக்கொள்ள முடியும். சாதாரண குடிமகன் கூட நாட்டின் கலீஃபாவுக்கு எதிராக வழக்குத் தொடர முடியும்.

அதை கலீஃபாவும் குற்றமாக கருதியதில்லை. இஸ்லாமிய வரலாற்று ஏடுகளில், பொன்னெழுத்துக்களில் பதிய வைத்துள்ள பல நிகழ்ச்சிகளை இன்றும் உலகம் வியந்து பாராட்டுகிறது.

இஸ்லாமிய ஆட்சியில் கலீஃபாக்களும், பேரர்சர்களும் கட்டிக்காத்த நீதித்துறை தன் கடமையை குறைவின்றி செயலாற்றி வந்தது. நீதிபதிகள் சுதந்திரமாக செயல்பட்டு, குர்ஆனின் கட்டளைகளையும், சுன்னத் வழிமுறைகளையும் கவனத்துடன் பின்பற்றி தீர்ப்புகளை வழங்கினர். அவற்றில் சிலவற்றையாவது நாம் அறிந்துகொள்வது அவசியமில்லையா?!

உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு எதிராக அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் வழக்கு தொடுத்த பெண்மணி!
முதலாம் கலீஃபா ஹளரத் அபூபக்ர் ஸித்தீக் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆட்சி காலத்தில், ஹளரத் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு எதிராக ஒரு வழக்கு தொடரப்பட்டது. 

கூஃபாவில் வசித்து வந்த "ஜமீலா" என்னும் பெண்ணை ஹளரத் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் மணம் முடித்திருந்தார்கள். அவர்கள் இருவருக்கும் "ஆஸிம்" என்ற ஆண் குழந்தையும் பிறந்தது. 

தவிற்க முடியாத சில காரணங்களினால், ஹளரத் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள். ஜமீலா அவர்களை விவாகரத்து செய்து விட்டார்கள். 

அதன் பிறகு ஹளரத் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், மதீனா மாநகருக்கு குடியேறி விட்டார்கள். ஜமீலா அவர்கள் தன்னுடைய மகன் ஆஸிமுடன் கூஃபாவில் தங்கிவிட்டார்கள்.

இந்நிலையில், ஹளரத் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், கூஃபாவுக்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அப்போது, எதேச்சையாக தன் மகன் ஆஸிமை அங்கு பார்க்க நேர்ந்தது. பாச மிகுதியால் தன் குழந்தையை வாரி அணைத்து தன் குதிரையின் மீது தூக்கி உட்கார வைத்துக் கொண்டார்கள். 

தன்னுடைய குழந்தையை மதீனாவுக்கு அழைத்துச்செல்ல விரும்பினார்கள்.
செய்தி அறிந்த ஜமீலா அவர்கள் ஓடோடி அங்கு வந்து, ஹளரத் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுடன் எக்காரணத்தைக்கொண்டும் தன் குழந்தையை அனுப்புவதற்கு மறுத்ததுடன், தன் குழந்தையை அவரிடமிருந்து பிடுங்கி எடுத்துக்கொள்ள முயற்சித்தார்கள். 

பாசப்பிணைப்பில் இருவரும் உறுதியாக இருந்ததால் வாக்குவாதம் முற்றி பிரச்சனை, அன்றைய கலீஃபா ஹளரத் அபூபக்ர் ஸித்தீக் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் சென்றுவிட்டது.

குழந்தை ஆஸிமின் இளம் வயதினை கருத்தில் கொண்டு ஹளரத் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு எதிராக "குழந்தை அதன் தாயாருடன் தான் இருக்க வேண்டும்" என்று கலீஃபா அவர்கள் தீர்ப்பு அளித்தார்கள். தீர்ப்பை உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார்கள்.

பாதிக்கப்பட்ட கிறிஸ்தவருக்கு சாதகமாக தன்னுடைய கவர்னரின் மகனுக்கு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் வழங்கிய தண்டனை :
ஹளரத் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆட்சிக்காலத்தில் ஹளரத் அம்ரிப்னுல் ஆஸ்
ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் எகிப்தின் கவர்னராக இருந்தார். கிறிஸ்தவர் ஒருவர், எகிப்தின் கவர்னரின் மகனுக்கு எதிராக, மதீனாவில் இருந்த அமீருல் முஃமினீன், ஹளரத் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் வழக்கு தொடர்ந்தார்.
 
"கவர்னருடைய மகன் சாட்டையினால் தன்னுடைய முதுகுத்தோல் உரியும் அளவுக்கு அடித்து துன்புறுத்தினார். நீதி கேட்டு தங்களிடம் முறையீடு செய்ய வந்துள்ளேன்" என்று அந்த கிறிஸ்தவர் முறையிட்டார்.

"உம்மை எதற்காக அவர் அடித்தார்?" என்று உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கேட்க, "எகிப்து நகரின் வெளியில் குதிரை சவாரி பந்தயம் நடந்தது. இதில் என்னுடைய குதிரை வேகமாக ஓடி கவர்னரின் மகன் சவாரி செய்த குதிரையை பின்னடையச்செய்து வெற்றி பெற்று விட்டது. 

இதை பொறுத்துக்கொள்ள முடியாத கவர்னரின் மகன், என்னை சாட்டையினால் தாக்கினார்" என்று பதிலளித்த கிறிஸ்தவர், தன் சட்டையினைத்தூக்கி, காயம்பட்ட இடத்தைக் காட்டினார்.

இதைக்கேட்ட உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் மிகுந்த கோபத்துடன், "உமக்கு நீதி கிடைக்காதவரை, நான் வேறு எந்த வேலையையும் செய்யப்போவதில்லை" என்று உறுதியளித்தார்கள்.

ஹளரத் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், தன்னுடைய பணியாளர், முஹம்ம்து பின் முஸல்லமாவிடம் அவசரக் கடிதம் கொடுத்து எகிப்துக்கு அனுப்பி வைத்தார்கள். அதில், "எகிப்தின் கவர்னர், உடனடியாக மதீனாவுக்கு வரவேண்டும். 

ஒரு ஏழையின் உடலை கசையடியால் சல்லடையாக்கிய தங்கள் மகனையும் தங்களுடன் அழைத்து வரவும்" என்று கட்டளையிடப்பட்டிருந்தது. கடிதம் கிடைத்ததும், எகிப்தின் கவர்னரும், அவருடைய மகனும் உடனடியாக மதீனா மாநகரம் வந்து கலீஃபா முன் ஆஜரானார்கள்.

கலீஃபா உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கிறிஸ்தவரையும் அங்கு வரவழைத்து, மூவரையும் கூண்டில் நிற்கும்படி கட்டளையிட்டார்கள். கலீஃபா அவர்கள், கிறிஸ்தவரை நோக்கி "நீங்கள் சுமத்தும் குற்றத்தை விளக்கமாகக் கூறவும்" என்று கூற உடனே அந்த கிறிஸ்தவர் குதிரை சவாரியின்போது நடந்த நிகழ்ச்சியை விவரித்தார்.

இதனைக் கேட்ட கவர்னரின் மகன் தலை தொங்கியபடியே குற்றத்தை ஒப்புக்கொண்டார். அதிர்ச்சியடைந்த கவர்னர் அம்ரிப்னுல் ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், தன்னுடைய சாட்டையை எடுத்து ஹளரத் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் நீட்டியபடியே, "அமீருல் முஃமினீன் அவர்களே! என்னுடைய சாட்டையினால் என் மகனுக்கு தண்டனை வழங்கி நீதியை நிலைநாட்டுங்கள்" என்று உணர்ச்சிபொங்க கேட்டுக்கொண்டார்.

அதற்கு கலீஃபா உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், "உமது சாட்டையைக் கொண்டு தண்டனை வழங்கப்பட வேண்டியிருந்தால், எகிப்திலேயே தண்டனை வழங்கும்படி செய்திருப்பேன். இப்போது உமது சாட்டைக்கும் அவசியமில்லை, எனது கரங்களுக்கும் வேலையில்லை. எனது சாட்டை, கிறிஸ்தவரின் கரங்களில் இருக்கும். 

தண்டனை பெறும் உடல் உமது அருமை மகனுடையதாக இருக்கும்!" என்று சொல்லியபடியே, தன்னுடைய சாட்டையை கிறிஸ்தவரிடம் கொடுத்து "அடியுங்கள், உங்களை எப்படி அடித்தாரோ அதைப் போலவே அடியுங்கள். உங்களை எப்படி இழிவு படுத்தினாரோ, அதே விதமாக இன்று அவரை இழிவுபடுத்துங்கள்" என்று அமீருல் முஃமினீன் கட்டளையிட்டார்கள்.

பழியைத் தீர்த்துக்கொள்ள தயாராகிவிட்ட கிறிஸ்தவர், சாட்டையினை தன்னுடைய கையில் பிடித்தபடியே, கவர்னரின் முன் வந்து நின்று கொண்டு, "அவர் என்னை கசையால் அடிக்கும்போது, எனது முதுகில் துணி இன்றி, வெற்று உடம்போடு இருந்தேன்" என்று கூறினார்.

இதைக் கேட்ட எகிப்தின் கவர்னர், உடனே தன் கைகளால், தன் மகனின் துணிகளை அகற்றினார். அதற்குப்பின்னரே அந்த கிறிஸ்தவர் தனது பழியைத் தீர்த்துக்கொண்டார்.

பழிக்குப்பழி தீர்த்துக்கொண்ட அந்த கிறிஸ்தவர், "நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அடிமைகள் கூட நீதியும் நேர்மையும் கொண்டவர்கள் என்று யாரோ ஒருவர் சொன்னது இன்று உண்மையாகிவிட்டது. 

அமீருல் முஃமினீன் அவர்களே! தாங்கள் யாரிடம், அடிமையாக இருந்து இந்த நீதியும் நேர்மையும் கொண்ட புனித பாடத்தை கற்றுக்கொண்டீர்களோ என்னையும் அவருடைய அடிமையாக சேர்த்துக்கொள்ளுங்கள்" என்று உணர்ச்சி பொங்க கத்தினார்! அடுத்த நிமிடமே, அந்த கிறிஸ்தவர் இஸ்லாத்தை தழுவி விட்டார்.

ஜமாஅத்துடன் தொழாத சுல்தானின் சாட்சியத்தை ஏற்க மறுத்த நீதிபதி :
துருக்கி நாட்டின் சுல்தான்களில், சுல்தான் பாயஜித் மிகவும் புகழ் பெற்றவர்களில் ஒருவர். அவருடைய ஆட்சியில் ஷம்சுத்தீன் ரூமி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் நீதிபதி பதவியை கண்ணியத்துதுடன் அலங்கரித்து வந்தவர்கள். ஒருநாள், அவர் முன் வந்த வழக்கொன்றில் சுல்தான் பாயஜித் அவர்களே சாட்சியம் அளிக்க வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டது. 

சுல்தான் நீதிமன்றத்திற்கு ஆஜராகி சாட்சிசொல்ல முன்வந்தபோது அவரது சாட்சியத்தை நீதிபதி ஷம்சுத்தீன் ரூமி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் ஏற்க மறுத்தார்கள்.

அதற்கு அவர்கள் கூறிய காரணம் என்னவென்றால், "தொழுகையை ஜமாஅத்துடன் சேர்ந்து தொழாதவருடைய சாட்சியம் அவ்வளவு வலுவானதக கருத முடியாது" என்பதுதான்! இதைக் கேட்டு, சுல்தான் பாயஜித் சிறிதும் கோபப்படவில்லை. நீதிபதி தன்னை அவமானப்படுத்தியதாகவும் கருதவில்லை. 

நீதிபதிக்கு எதிராக ஒரு வார்த்தைக்கூட சொல்லாமல் அங்கிருந்து வெளியேறிவிட்டார். இஸ்லாமிய ஆட்சியில் நீதித்துறையின் தீர்ப்புகள் இவ்வாராகத்தான் இருந்திருக்கின்றன.

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் வகுக்கப்பட்ட நீதிநெறிகள், இறையருளால் போற்றி, பாதுகாக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டதன் காரணமாக நீதி நிலைநாட்டப்பட்ட சம்பவங்கள் ஏராளமாக சரித்திரக்குறிப்புகளில் காணலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக