சமீபத்திய ஒரு செய்தி முஸ்லிம்கள் அனைவரின் மனங்களிலும் கோபத்தை ஏற்படுத்தியது. அச்செய்தி உணர்த்தும் பொருள் அனைவருக்கும் வெறுப்பை ஏற்படுத்தியது. “முஸ்லிம்களை இனி அமெரிக்காவில் நுழைய அனுமதிக்கக் கூடாது” என்று அமெரிக்க நாட்டின் அதிபர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் டொனால்ட் ட்ராம்ப் கூறிய செய்திதான் அது.
உண்மையில் டொனால்ட் கூறிய வார்த்தைகள் அவர் மனதில் ஏற்பட்ட
மாற்றத்தினால் வெளிவந்தவை. கடந்தகால நிகழ்வுகளில் முஸ்லிம்கள் மீது ஆதிக்கவர்க்கம் திணித்த பொய்யான குற்றசாட்டுகள்தான் இதற்கு முக்கிய காரணிகள்.
அமெரிக்காவின் நவீன வரலாற்றில் முஸ்லிம்கள் இருப்பு 20ஆம் நூற்றாண்டுகளில் மட்டும்தான் காணப்படுகிறது. உண்மையில் அமெரிக்காவின் ஆக்கம், உருவாக்கம், வளர்ச்சி மற்றும் நிலைநிறுத்தல் ஆகிய அனைத்து பக்கங்களையும் முஸ்லிம்கள் நிரப்பியுள்ளனர்.
1775 – 1783 ஆகிய காலகட்டத்தில் நடைபெற்ற வேர்ஜினியா எல்லைக்கான போரில் பம்பெட் முஹம்மது என்ற முஸ்லிம் போர் வீரர் கலந்துகொண்டுள்ளார்.
பிரித்தானிய காலனியாட்சிக்கு எதிராக ஜார்ஜ் வாஷிங்டன் தலைமையில் போராடிய படைகளில் பங்கர் ஹில் (சலாம்) என்ற ஆபிரிக்க அரேபிய முஸ்லிமும் அடங்குவார்.
அமெரிக்கா என்றவுடன் அனைவரின் கண் முன் வருவது வானுயர்ந்த கட்டடங்கள்தான். ஆனால் அக்கட்டடங்கள் உருவாக முக்கிய பங்காற்றிய முஸ்லிம் பொறியாளர் யார் என்று நம் கண்ணுக்கும் தெரியாது.
ஆம்! ‘கட்டமைப்பு பொறியியல்துறையின் அயின்ஸ்டீன்’ என்றழைக்கப்படும் வங்கதேசத்தில் பிறந்து அமெரிக்காவில் குடியமர்ந்த முஸ்லிம் பொறியாளர் ஃபஜ்லுர் ரஹ்மான்தான் அவர்.
ஃப்ரேம் குழாய் மூலம் கட்டப்படும் கட்டடங்களால் இரும்பின் பயன்பாடு குறைக்கப்படுவதை கண்டுபிடித்து அமெரிக்கா முழுவதும் வானுயர்ந்த கட்டடங்களைக் கொண்டு அமெரிக்காவை அவர் அலங்கரிக்கச் செய்தார்.
இன்னும் சற்று தெளிவாக கூறுவதென்றால் டொனால்டுக்குச் சொந்தமான நட்சத்திர ஹோட்டல்களும் கட்டடங்களும் இக்கட்டடக் கலையை பயன்படுத்தி கட்டப்பட்டதுதான்.
இதேபோல் மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை துறையில் டாக்டர் அய்யூப் ஓமாயவின் பங்கு எண்ணற்றது. இருதய கீழறையின் குழாய் அறுவை சிகிச்சைக்கு இவர் கண்டுபிடித்தவை அறுவை சிகிச்சைதுறைக்கு மிகப் பெரிய உதவியாக விளங்கியது. கீமோதரப்பி முறையின் அடிப்படையில் மூளையில் ஏற்பட்டுள்ள கட்டியை அகற்ற பயன்பட்டது.
விளையாட்டுத் துறையை பொறுத்தவரை குறை என்று சொல்ல முடியாது. காரணம், அவ்விடத்தை முஹம்மது அலீ என்ற ஒற்றை மனிதர் நிரப்பியுள்ளார். மூன்று முறை உலக குத்துச்சண்டை போட்டியின் சாம்பியன் பட்டம் பெற்றவர். நான் இவரை மட்டும் சொல்ல இன்னும் ஒரு காரணமும் உண்டு. 2007ல் முஹம்மது அலீக்கு தன் பெயரைக் கொண்ட “முஹம்மது அலீ” என்னும் விருதை இதே டொனல்ட்தான் வழங்கினார்.
ஃபரா பண்டித் என்னும் முஸ்லிம் பெண்மணியின் பல பரிமாணங்கள் அமெரிக்காவிற்கு மிகவும் உதவியாக இருந்தது. மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொடர்பை ஏற்படுத்தவும் உறவுகளை உண்டாக்கவும் ஏற்படுத்தப்பட்ட அமைப்பின் இயக்குனராகவும், ஐரோப்பிய நாடுகளின் முஸ்லிம்களின் ஈடுபாட்டை உருவாக்கும் பிரிவின் ஆலோசகராகவும், ஹிலாரி கிளிண்டனின் உலக முஸ்லிம் சமூகத்தின் தூதராகவும் பதவி வகித்தார்.
வேதியியல் துறையில் நோபல் பரிசு பெற்ற அஹமத் ஜிவைல் வேதியியல் துறையில் பல ஆய்வுகளை செய்துள்ளார். இவரது அறிவியல் துறையின் அறிவாற்றலாலும், மத்திய கிழக்கு நாடுகளில் இவருக்குள்ள மதிப்பினாலும் ஒபாமா தனது அதிபர் அவையில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையில் இவரைப் பணியாற்ற செய்தார். இவரை கண்ணியப்படுத்தும் விதமாக இவருடைய புகைப்படம் தபால்தலையாக வெளியிடப்பட்டது.
நான் கடைசியாக இம்மனிதரை குறிப்பிடுவதனால் இவர் சளைத்தவர் அல்ல. அமெரிக்க மக்களின் குடியுரிமையை மீட்டுத் தரப் போராடியவரும், கருப்பினத்திற்கு எதிராக நடந்தேறிய வெறியாட்டத்தை கட்டுப்படுத்தியவரும், சமூக விடுதலைப் போராளியுமான மால்கம் X அவர்களின் பங்கு அளப்பரியது.
அமெரிக்காவின் முதல் அதிபர் ஜார்ஜ் வாஷிங்டன் கூறியதாவது: “அமெரிக்காவில் யார் வேண்டுமென்றாலும் வாழலாம். அவர் எந்த ஒரு மதத்தையும் பின்பற்றலாம். ஆனால் தான் ஓர் அமெரிக்கர் என்ற எண்ணம் அவருக்கு வேண்டும்.”
ஆனால் இக்கொள்கை டொனால்ட் அவர்களின் பார்வைக்கு நேர்மாறாக உள்ளது. டொனால்ட் தனது நிலையை மாற்றிக் கொள்ளவேண்டும். இல்லையெனில் அதிபர் கனவு கனவாகவே போய்விடும்.
ஆரூர் யூசுஃப்தீன்
yousufdeen35@gmail.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக