பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டத்தில் மழை அளவைக் கணக்கிட மழைமானி அமைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், ஆலத்தூர் வட்டத்தில் பாடாலூர், செட்டிகுளம், வேப்பந்தட்டை வட்டத்தில் வெண்பாவூர், தழுதாழை ஆகிய பகுதிகளில் மட்டுமே மழையின் அளவைக் கணக்கிட மழைமானி அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால், அதிகளவில் மழை பெய்யும் கடலூர் மாவட்ட எல்லையில் உள்ள குன்னம் வட்டத்தில் மழைமானி இல்லை. அண்மையில் பெய்த பலத்த மழை காரணமாக குன்னம் பகுதியில் உள்ள வெள்ளாறு மற்றும் சின்னாறுகளில் காட்டாற்று வெள்ளம் ஓடுகிறது. 10-க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பி வழிகின்றன.
இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டத்தில் 33 ஊராட்சிகளைக் கொண்ட குன்னத்தில் அதிக நீர்ப்பிடிப்பு பகுதியாக திருமாந்துறை,லப்பைக்குடிக்காடு, அகரம்சீகூர்,வடக்கலூர், ஒகளூர், வேப்பூர், புதுவேட்டக்குடி ஆகிய கிராமங்கள் கருதப்படுகிறது.
குன்னம் வட்டத்தில் மழைமானி அமைக்கப்படாததால் மழை அளவை கணக்கிட முடியாத நிலை உள்ளது.
எனவே,குன்னம் வட்டத்தில் பெய்யும் மழையைக் கணக்கிட மழை மானி அமைக்க வேண்டும். ஒரு வருவாய் வட்டத்துக்கு ஒன்று அல்லது 2 இடங்களில் மட்டுமே மழை அளவு கணக்கிடப்படுகிறது. இதைத் தவிர்த்து, வருவாய்க் கிராமங்கள் தோறும் மழைமானி அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக