“கற்றவர்களும், கல்லாதவர்களும் சமமா?” என்று கேட்கிறது திருமறை. கற்காதவர்கள் ஒருபோதும் கற்றவர்களுக்கு சமமாக வர முடியாது. கற்பது என்பதை பலர் கல்லூரியில் படிப்பது என்பதாக மட்டுமே என்று நினைக்கிறார்கள். அது ஒரு பகுதிதான். அதையும் தாண்டி கற்க நிறைய இருக்கிறது. அதற்கு நாம் முதலில் புத்தக உலகத்திற்குள் நுழைய வேண்டும்.
பல்வேறு விசயங்களையும், நிகழ்வுகளையும், வரலாறுகளையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டுமானால் புத்தகங்களை வாசிப்பதை கடமையாக்கி கொள்ளவேண்டும். வாசிப்பது என்பது நமக்கு பல்வேறு சிந்தனைகளை தூண்டும் நண்பனாக இருக்க வேண்டும்.
“எனக்கு அதிகம் தேவைப்படுகிறவர் யார் என்றால் இயன்றதைச் செய்யுமாறு தூண்டும் மனிதர்கள்தான்” என்கிறார் அமெரிக்க அறிஞர் எமெர்சன். ஆம்! வாசிப்பதும் அப்படிதான். அது நமக்கு பல்வேறு வகைகளில் நமக்கு உதவுகிறது. பலருக்கு உதவ தூண்டுகிறது.
இன்று சமூகம் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து பெரும்பான்மையினர் மௌனம் சாதிக்கிறார்கள். அந்த பிரச்சனைகள் சம்மந்தமாக அவர்களுக்கு போதிய விவரம் இல்லாத காரணத்தால் அது குறித்து சிந்திக்க மறுக்கிறார்கள். அதுதான் சமூகத்திற்கு இருக்கும் முதன்மையான பிரச்சனையாக இருக்கிறது. முதலில் வாசிக்க வேண்டும், யோசிக்க வேண்டும், செயல்பட வேண்டும். அது நமக்கு, நம் சமூகத்திற்கு பல்வேறு வழிகளில் உதவிகரமாக இருக்கும்.
வாசிப்பதின் பலன்களை நம் சமூகம் அனுபவிக்காமல் இல்லை. அதன் பலன்களை ஏற்கனவே நம் சமூகம் கண்டுள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இஸ்லாத்தின் பொற்காலமாக இருந்தது. மருத்துவர்கள், அறிஞர்கள், சமூக சீர்திருத்தவாதிகள், மக்களை நேசிக்கும் தலைவர்கள் என அனைவரும் இஸ்லாமியர்களாக இருந்தார்கள். இஸ்லாம் வெற்றிகொள்ளப்படும் இடங்கள் எல்லாம் பல கல்விசாலைகள், நூலகங்கள் அமைக்கப்பட்டது. அது இருளில் சூழ்ந்திருந்த மக்களிடத்திலே புதிய வெளிச்சத்தை காட்டியது.
அவர்கள் அந்த நிலைக்கு உயர்ந்ததிற்கு அடிப்படை காரணம் வாசிப்பு பழக்கம்தான்.
“ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே முஸ்லிம்கள் முன்னேற்ற பாதையில் நடைபோட்டனர். முஸ்லிம் நாடுகளின் அரசியல் எல்லைகள் அட்லாண்டிக் முதல் சிந்து வரையிலும், ஸ்பெயின், பிரான்ஸ் முதல் ஆப்ரிக்கா கண்டத்தின் சஹாராவின் விளிம்பு வரையிலும் வியாபித்து விரிந்து கிடந்தன. முஸ்லிம்கள் ஆளுகையின்கீழ் இருந்த பிரதேசங்களில் தலை சிறந்த கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வந்தன. முஸ்லிம்கள் அறிவியல் வளர்ச்சியில் பெரும் பங்காற்றினர். அதில் இப்னு சீனா, இப்னு ருந்து, போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். உலகத்தின் வர்த்தகச் செழிப்பிற்கும் முஸ்லிம்கள் மகத்தான பங்களிப்பு செய்தனர். அதே காலத்தில் மேற்கத்திய நாகரிகம் மடமையிலும், வறுமையிலும் அமிழ்ந்து கிடந்தது”. – கேசவ மேனன். தி இந்து ஜனவரி 06 – 2006.
அதேபோல கஸ்ஸாலி இமாம் ஏழ்மையில் பிறந்தவர். கஷ்டப்பட்டு முன்னேறி உலகில் மிகப்பெரிய அறிஞராக விளங்கினார். வான இயல், தர்க்கம், தத்துவம், கணிதம், புவி இயல் ஆகியவற்றில் சிறந்து விளங்கினார். அவர் நிறைய கற்றதினால், நிறைய கற்பித்துவிட்டு சென்றார். ஆம் அப்போதே அவர் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். தான் கற்று தேர்ந்ததை பலரும் கற்கும் விதமாக செய்தார். அது பலருக்கு வழிகாட்டியாக இருக்கிறது.
மாவீரன். திப்பு சுல்தானை எடுத்துக்கொள்வோம். தனது திருமண பரிசாக தனது தந்தை ஹைதர் அலியிடம் அவர் கேட்டது என்ன தெரியுமா? மிகப் பெரிய நூலகத்தைதான். அங்கு அவர் கற்றதை தான் தனது ஆட்சியில் செயல்படுத்தினார். பல புரட்சிகர சீர்திருத்தங்களை செய்தார். பிரெஞ்சு புரட்சிக்கு ஆதரவாக் இருந்தார். அமெரிக்க புரட்சிக்கு நன்கொடை அளித்தார். பல வெளிநாடுகளிலும் வணிக தொடர்பை வைத்திருந்தார். போரில் புதிய தொழில்நுட்பங்களை புகுத்தினார். காலனியாதிக்கத்து க்கு எதிராக கடுமையாக போராடினார். திப்பு பெரிய ஆளுமையாக செயல்பட்டதற்கு காரணம். அவர் பல விசயங்களையும் கற்க வேண்டும் ஆவல் கொண்டவராக இருந்ததினால்தான்.
“ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாதவரை அவர் வேறு, இவர் வேறு” என்கிறது ஒரு பாராசிக கவிதை. அதுபோலதான் புத்தகமும். நாம் நெருங்கி போகாதவரை, அந்த சிறப்புமிக்க வரலாறுகள், கருத்தாழமிக்க சிந்தனைகள் நம்மை நோக்கி வராது. வரவே வராது!
கற்போம்! நிறைய கற்போம்!!
அப்போதுதான் புதிய உலகை நம்மால் படைக்க முடியும்!
- வி.களத்தூர் பாரூக்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக