பாபரி மஸ்ஜித் இரத்த சாட்சியாக்கப்பட்டு 23 ஆண்டுகள் நிறைவுறுகிறது.சகிப்புத்தன்மையற்ற, இம்சையும், உச்சபட்ச அநீதிகளும் கலந்த ஒரு அரசியல் சித்தாந்தம் இந்தியாவின் மைய ஆட்சி பீடத்தை அலங்கரித்துக்கொண்டிருக்கிறது.இந்தியாவில் பாசிசம் வலுவடைந்து வருவதற்கான தெளிவான சாட்சியாக பாபரி மஸ்ஜித் இடிப்பு சம்பவம் அமைந்தது.
சங்க்பரிவாரம் நாட்டின் மதச்சார்பின்மை விழுமியத்தை திரிசூலத்தின் மூலம் குத்திக் கிழித்தார்கள்.கரசேவகர்கள் உலக நாடுகளின் இந்தியாவின் அந்தஸ்தை கடப்பாறையில் இடித்து தள்ளினார்கள்.பாபரி மஸ்ஜிதின் கும்பாக்கள் மட்டுமல்ல ஜனநாயகத்தின் மாண்புகளும் கீழே விழுந்தன.இங்கே பலாத்காரம் செய்யப்பட்டது சிறுபான்மை சமூகத்தின் வழிப்பாட்டு சுதந்திரம் மட்டுமல்ல.இந்திய சமூகத்தின் கண்ணியமும் தான்.ஒரு நாடு என்ற நிலையில் நமது இருப்புக்கு அத்தியாவசியமான அனைத்து சமூகங்களுக்கு இடையேயான நல்லிணக்கத்திற்கு எதிராகத்தான் இந்துத்துவா சக்திகள் போர் பிரகடனம் செய்துள்ளனர்.
அரசியல் சாசனத்தையும், ஜனநாயக கட்டமைப்புகளையும் பயன்படுத்தி தான் பாசிசம் அதிகாரத்தில் அமர்ந்துள்ளது.நரேந்திரமோடி அரசியல் சாசன தத்துவங்களை குறித்தெல்லாம் பேசுவது கபட நாடகம்.
ஜெர்மன் - இத்தாலிய பாசிசத்தின் அனைத்து குணநலன்களையும் இந்திய பாசிசம் நகலெடுத்துள்ளது.அத்துடன் சாதாரண இந்துக்களை குழப்பத்தில் ஆழ்த்தும் விதமாக மதச் சின்னங்களை தீவிரமாக பிரயோகிக்கின்றனர்.ஆகையால்தான் இந்துத்துவா பாசிசம் ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய எதிரியாக மாறுகிறது.
இந்திய தேசத்தின் அனைத்து விழுமியங்களுக்கும் எதிரியாக திகழும் சங்க்பரிவார பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்துவதற்கு இந்நாளில் உறுதி ஏற்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக