மலேரியா நோய் தாக்காமல் இருப்பதற்கான எதிர்ப்பு சக்தியை உடலில் இயற்கையாகவே பெற்றுள்ள தான்சானியப் பிள்ளைகளைப் பயன்படுத்தி மலேரியா நோய்க்கு புதிய தடுப்பு மருந்து ஒன்றை உருவாக்க விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர்.
மலேரியாவை உண்டாக்கும் கிருமியைத் தாக்கி அழிக்கக்கூடிய Antibodies எனும்
இரசாயனங்கள் இவர்களது உடலில் உற்பத்தி ஆகின்றன என்று அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இவர்கள் உடலில் இருந்து எடுக்கப்பட்ட இவ்வகை இரசாயனங்களை எலிகளுக்கு செலுத்தியபோது அந்த எலிகளின் உடலிலும் மலேரியா நோய் எதிர்ப்பு சக்தி வந்துள்ளது என தம் பரிசோதனைகள் காட்டுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இந்த பரிசோதனையை குரங்குகளிடத்தும் பின்னர் மனிதர்களிடத்தும் நடத்திப்பார்த்து, இதன் அடிப்படையில் மலேரியாவுக்கு ஒரு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க முடியுமா என்று கண்டுபிடிக்க வேண்டும் என இந்த ஆய்வின் முடிவுகளை சயின்ஸ் என்ற அறிவியல் இதழில் வெளியிட்டுள்ள ஆராய்ச்சிக் குழு கூறுகிறது.
குறிப்பிட்ட இந்த குழந்தைகளின் உடலில் உற்பத்தியாகும் Antibodies நோய் எதிர்ப்பு இரசாயனம், மலேரியா கிருமியியை தாக்கி அந்தக் கிருமி நோயாகப் பரவ விடாமல் தடுத்துவிடுகிறது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆனாலும் பல்வேறு கட்டங்களில் ஆராய்ந்த பின்னரே இந்த வழியில் ஒரு வெற்றிகரமான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க முடியுமா என்பதை உறுதியாக சொல்ல முடியும் என பேராசிரியர் கர்டிஸ் தெரிவித்துள்ளார்.
கிளாக்ஸோஸ்மித்கிளைன் நிறுவனம் உருவாகிக்கியுள்ள RTS,S தடுப்பு மருந்துதான் இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்ட மலேரியா தடுப்பு மருந்தில் அதிகம் பலன் தந்த மருந்தாக பார்க்கப்படுகிறது. இவ்வகையான தடுப்பு மருந்துகள் இருந்தும், மலேரியா என்பது தொடர்ந்தும் நிறைய பேரைக் கொல்லும் நோயாக இருந்துவருகிறது.
2012ஆம் ஆண்டு ஆறு லட்சம் பேருக்கும் அதிகமானோர் மலேரியாவால் உயிரிழந்ததாக உலக சுகாதார நிறுவனத் தரவுகள் கூறுகின்றன. இதில் தொண்ணூறு சதவீதத்துக்கும் அதிகமான உயிரிழப்புகள் சஹாராவுக்கு தெற்கிலுள்ள ஆப்பிரிக்காவில் நிகழ்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக