அல்லாஹ்வும், அவனது தூதரும் சொல்லித்தராத விஷயங்களைச் செய்வதும்சொல்லித்தந்த விஷயங்களில் அவர்கள் கூறாத செயல்களை அதிகப்படியாக செய்வதும் அவர்கள் சொன்ன விஷயங்களுக்கு மாற்றமாக செய்வதும் வரம்பு மீறுதலாகும்.
இதைப்பற்றி அல்லாஹ் தான் திருக்குர்ஆனில் பின்வருமாறு கூறுகின்றான்.
அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும்போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும்,பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுய விருப்பம் கொள்ளுதல் இல்லை.அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழி கேட்டு விட்டார். குர்ஆன்;33;36
ஹலால் ஹராம் விஷயத்தில் வரம்பு மீறுதல்.
தாமாக செத்தவை, இரத்தம், பன்றியின் மாமிசம், மற்றும் அல்லாஹ் அல்லாதவர்களுக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்கு தடை செய்துள்ளான். யார் வலியச் செல்லாமலும் வரம்பு மீறாமலும் நிர்பந்திக்கப்படுகிறாரோ அவர் மீது எந்தக் குற்றமுமில்லை.நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவன் கருணையுடயவன்.
குர்ஆன்2;173
நிர்பந்தமான நேரத்திலும்கூட அனுமதிக்கப்பட்ட அளவே பயன்படுத்த வேண்டும். அதை மீறி அதிகமாகப் பயன்படுத்தினால் அதுவும் வரம்பு மீறுதலாகவே கவனிக்கப்படும்.
விமர்சிப்பதில் வரம்பு மீறக் கூடாது
அகில உலகுக்கும் ஒரே ஒரு கடவுள் கொள்கைதான் இருக்க முடியும் என்பது இஸ்லாத்தின் அடிப்படையாகும். எனினும் முஸ்லிமல்லாதவர்கள் தெய்வமாக நம்புவோரை தரக்குறைவாக விமர்சிப்பதோ ஏசுவதையோ இஸ்லாம் கண்டிக்கிறது.
அல்லாஹ்வையன்றி யாரிடம் அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ அவர்களை ஏசாதீர்கள்! அவர்கள் அறிவில்லாமல் வரம்பு மீறி அல்லாஹ்வை ஏசுவார்கள். இவ்வாறே ஒவ்வொரு சமுதாயத்திற்கும் அவர்களது செயலை அழகாக்கிக் காட்டினோம். பின்னர் அவர்களின் மீளுதல் அவர்களின் இறைவனிடமே உள்ளது. அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அவன் அவர்களுக்கு அறிவிப்பான். (அல்குர்ஆன் 6:108)
முஸ்லிமல்லாதவர்கள் எவ்வளவுதான் வம்புக்கு இழுத்தாலும் அவர்கள் புனிதமாக கருதுவோரை எக்காரணம் கொண்டும் ஏசக்கூடாது. அதே நேரத்தில் பல கடவுள்கள் இல்லை, அல்லாஹ் மட்டும் தான் இறைவன் என்று அறிவுப்பூர்வமாக விமர்சிப்பது பிற மத தெய்வங்களை குறை கூறியதாக ஆகாது.
போர்க்களத்தில் வரம்பு மீறக்கூடாது.
அநியாயங்கள் தட்டிக்கேட்கப்பட்டு அதற்காகப் பாடுபடும் போர்க்களத்தில்கூட வரம்பு மீறாமல் இருக்க வேண்டும் என்றும் பெண்களையும் குழந்தைகளையும் கொல்லக்கூடாது என்றும் இஸ்லாம் போதிக்கின்றது.
உங்களிடம் போருக்கு வருவோருடன் அல்லாஹ்வின் பாதையில் நீங்களும் போர் செய்யுங்கள். வரம்பு மீறாதீர்கள். அல்லாஹ் வரம்பு மீறியோரை நேசிக்கமாட்டான். (அல்குர்ஆன் 2:190)
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் கலந்துகொண்ட புனிதப் போர்களில் ஒன்றில் பெண் ணொருத்தி கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டாள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதைக் கண்டித்தார்கள். நூல் : புகாரி 3014
எதிரிகளுடன் போர் நடக்கும் போது அவர்களின் குழந்தைகள், பெண்கள் ஆகியோரை தாக்கக்கூடாது என்று இஸ்லாம் கூறுகின்றது.
இல்லறத்தில் வரம்பு மீறுதல்
இவ்வுலகில் பிறந்த ஆணும் பெண்ணும் தங்களின் கற்புகளைப் பேணிப்பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அதை விட்டு விட்டு கட்டுப்பாடின்றி தான்தோன்றித்தனமாக வாழ்ந்தோமேயானால், இம்மையிலும் மறுமையிலும் நம்மால் வெற்றிபெறவேமுடியாது. நாம் நமது குடும்பம் என்ற அமைப்பை மறந்து நினைத்தவருடன் வாழலாம் என்றால் இவ்வுலகம் சீராக இயங்காது.
அது தான் இல்லறத்தில் வரம்பு மீறுவதாகும். இதைப்பற்றி அல்லாஹ் கூறுகிறான்.
அவர்கள் தமது மனைவியர் அல்லது தமது அடிமை பெண்களிடம் தவிர தமது கற்ப்பைக் காத்துக் கொள்வார்கள். அவர்கள் பழிக்கப்பட்டோர் அல்லர். இதற்கு அப்பால் வேறு வழியைத்தேடியவர்களே வரம்பு மீறியவர்கள்.
(அல்குர்ஆன் 23;5;6;7)
மேலும் நபி (ஸல்) அவர்களும் விபச்சாரம் செய்பவன், அதை செய்யும்போது முஃமினாக இருக்கமாட்டான் என்றும் மறுமை நாளில் இப்படிப்பட்டவர்களுடன் அல்லாஹு ரப்புல் ஆலமீன் பேசவும் மாட்டான் அவர்களை தூய்மைப்படுத்தவும் மாட்டான் என்றும் கூறியுள்ளார்கள்.
அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மறுமையில் மூன்று நபர்களிடம் அல்லாஹ் பேசவும் மாட்டான்.அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான்.அவர்களுக்கு துன்பம் தரும் வேதனையும் உண்டு.
1. விபச்சாரம் செய்யும் கிழவன். 2.பொய் சொல்லும் ஆட்சியாளன். 3.பெருமையடிக்கும் ஏழை.
(நூல் ; முஸ்லிம்;172)
எனவே இவ்வுலக வாழ்க்கை வெறும் வீனும் விளையாட்டும் தான். இவ்வுலகத்தில் நாம் எத்தனை வருடம் வாழ்வோம் என்று நமக்கே தெரியாது. சொற்பமாக ஐம்பது அல்லது எழுபது வருடங்கள்தான். எனினும் இதில் நாம் நிரந்தரமாக வாழப்போவதில்லை. ஆகையால் இக்காலக்கட்டத்தில் தவறான வழிகேட்டின் பக்கம் சென்று விடாமல் கற்புகளைப் பாதுகாத்து தூய்மையான முறையில் வாழ்ந்து என்றும் நிரந்தரமான உலகமான மறுமையில் வெற்றிப்பெறுவோமாக.
உளுவில் வரம்பு மீறுதல்
இஸ்லாமிய மார்க்கம் உலகின் அனைத்து மார்க்கங்களை விடவும் தனித்து விளங்கக்கூடிய மார்க்கம். அனைத்து விஷயங்களிலும் தூய்மையை கடைப்பிடிக்கச் சொல்லும் மார்க்கம். அதைப் போன்று தொழுகைக்காக உளூ செய்துகொள்ளக் கட்டளையிடுகின்றது. அதில் கூட சரியான முறையில் செய்யும் படியும்; வரம்பு மீறாமலும் வீண்விரயம் செய்யாமலும் கடைப்பிடிக்கச் சொல்கின்றது.
அம்ர் இப்னு ஷுஐப் அவர்கள் கூறியதாவது. நபி (ஸல்) அவர்களிடம் கிராமவாசி ஒருவர் வந்து உளூ செய்யும் முறைபற்றி கேட்டார்.அதற்கு நபியவர்கள் மூன்று, மூன்று தடவைதான். இது தான் உளூ ஆகும். யார் இதை விட அதிகப்படுத்துகிறாரோ அவர் மாறு செய்துவிட்டார், வரம்பு மீறிவிட்டார் அல்லது அநீதி இழைத்து விட்டார் என்று கூறினார்கள்.
நூல்; இப்னுமாஜா 440
எனவே முஃமின்கள் ஆகிய நாம் மிகைத்தோன் அல்லாஹ்வின் மார்க்கமான இந்தத் தூய இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து அல்லாஹ்வும் ரசூலும் கட்டளையிட்ட காரியங்களை செய்து கட்டளையிடாத செயல்களைச் செய்யாமல் தவிர்ந்து இம்மையிலும் மறுமையிலும் வெற்றிபெற ஏக இறைவன் உதவி செய்வானாக.
ஆக்கம் : பர்ஸானா, திருச்சி
Thanks Deen kulapenmani Apr 2014
நன்றி LBK TNTJ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக