மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சராக பதவியேற்ற ஒரே நாளில் உலகம் முழுவதும் பிரபல்யமான நஜ்மா ஹெப்துல்லாஹ்வை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வது அவசியம். ஏப்ரல் 13-ம் தேதி 1940ல் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் செய்யது யூசுஃப் அலீ மற்றும் பாத்திமா யூசுஃப் அலீ ஆகியோரின் மகளாக பிறந்தார்.
தனது பள்ளிப் படிப்பை மோதிலால் விக்யான் மகாவித்யாலயாவில் (MVM) தொடங்கிய நஜ்மா விலங்கியல் துறையில் இரண்டு முதுகலை பட்டங்களை பெற்றவர். அதோடு தல்வார் பல்கலைக்கழகத்தில் கார்டியாக் அனாடமி துறையில் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.
1966-ல் அக்பர் அலீ ஹெப்துல்லாஹ் என்பவரை திருமணம் செய்த நஜ்மா தம்பதிக்கு மூன்று மகள்கள் உள்ளனர்.
நஜ்மா ஹெப்துல்லாஹ் இந்தியாவின் புகழ் பெற்ற ஒரு முஸ்லிம் அரசியல்வாதியின் பேரப்பிள்ளையாகும். இவர் சுதந்திர இந்தியாவின் முதலாவது கல்வி அமைச்சராக இருந்த மௌலானா அபுல் கலாம் ஆஸாத்தின் பேத்தி என்றும் கூறப்படுகிறது.
தனது இளமைப் பருவத்திலேயே பாட்டன் வழி இந்தியன் நேஷனல் காங்கிரஸில் அரசியல் பயணத்தை தொடங்கியவர், 1986-ல் அதன் தேசிய பொதுச்செயலாளராக பதவி ஏற்றார். காங்கிரஸ் சார்பாக 1980-ல் மகாராஷ்ட்ராவில் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நஜ்மா ராஜ்யசபை அங்கத்தவராக 1980, 1986, 1992, 1998 என்று நான்கு முறை தெரிவாகியுள்ளார்.
1985-ல் மாநிலங்களவை துணைத் தலைவர் பொறுப்புக்கு சொந்தக்காரர் ஆனார். அது ஒரு வருடம் மட்டுமே நீடித்தது. மீண்டும் 1988-ல் மாநிலங்களவை துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு 2004 வரை பதவி வகித்தார்.
1993-ம் ஆண்டு Inter-Parliamentary Union (IPU) வில் அங்கம் வகித்தவர், ஜெனிவாவில் அங்கம் வகிக்கும் உலக நாடுகளின் 165-வது மாநாடு 1999-ல் பெர்லினில் நடந்தபோது IPUவின் தலைவராக அறிவிக்கப்பட்டார்.
பல பொறுப்புகளோடு காங்கிரஸில் வலம் வந்த நஜ்மா 2004-ல் திடீரென பா.ஜ.கவில் இணைந்தார். இதற்கு காங்கிரசின் தலைவர் சோனியாவுடனான கருத்துவேறுபாடுதான் காரணம் என்று கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை காங்கிரசின் தேசிய தலைவர் பதவியை கேட்டாரா என்று தெரியவில்லை.
ஆனால் இத்தனை பெரும் பொறுப்புகளில் பதவி வகித்த போது பதவி சுகத்தை அனுபவித்ததைத் தவிர முஸ்லிம் சமூகத்திற்காக ஒரு கிள்ளுக் கீரையைக் கூட பிடுங்கியதாக வரலாறு இல்லை. கட்சியில் சேர்ந்த மூன்றே வருடத்தில் 2007-ல் நடந்த துணை குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் ஹமீத் அன்சாரிக்கு போட்டியாக பா.ஜ.க கூட்டணி களமிறக்கிய வேட்பாளர் இதே நஜ்மாதான்.
பா.ஜ.கவில் படுவேகமாக வளர்ந்த நஜ்மா ராஜ்நாத் சிங் தலைமையில் தேசிய செயற்குழு உறுப்பினராக இருந்து 2010-ல் நிதின் கத்காரி தலைமையில் பா.ஜ.கவின் 13 தேசிய துணை தலைவர்களில் ஒருவராக பதவி உயர்வு பெற்றார். மே 26-2014 அன்று குஜராத் இனப்படுகொலை புகழ் மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் சிறுபான்மை நலத்துறை அமைச்சராக பதவி பிரமாணம் எடுத்துள்ளார்.
இவருடைய வாழ்நாள் முழுவதும் பதவிக்கான பயணமாகவே தெரிகிறதே தவிர நாட்டு நலனோ, சமூக நலனோ கிஞ்சிற்றும் தெரியவில்லை என்பதை புரிந்து கொள்ள முடியும்.
முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலைகள், போலியான தீவிரவாத முத்திரைகள் என தொடர்ந்து அடுக்கடுக்காய் நடக்கும் அடக்குமுறைகளையும், அநீதிகளையும் கண்டித்து ஒரு வார்த்தை பேசாதவர் இந்த நஜ்மா. 2002-ல் குஜராத்தில் கூட்டம் கூட்டமாக முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டு, கர்ப்பிணிகளின் வயிற்றை பிளந்தெடுத்த கொடூரங்கள் அரங்கேறிய போது, பச்சிளம் குழந்தைகள் தீக்கிரையாக்கப்பட்டபோது வாய் திறக்காதவர் இன்றைய சிறுபான்மை நலத்துறை (?) அமைச்சர்.
இந்தப் படுகொலைக்கு மோடிதான் காரணம் என்ற உண்மை உலகின் பார்வைக்கு கொண்டுவரப்பட்ட போது “1984-ல் சீக்கியர்களால் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதற்கு காங்கிரசில் இருந்த சீக்கியர்கள் யாரும் பொறுப்பெற்கவில்லையே? குஜராத் கலவரத்திற்கு மோடி எப்படி பொறுப்பேற்க முடியும்?” என்று கேள்வி கேட்டார்.
குஜாராத்தில் அன்று ஒரு கலவரம் மட்டுமே நடந்தது. பின்னர் நடந்த காங்கிரஸ் ஆட்சியில் 400-க்கும் மேற்பட்ட கலவரம் நடந்துள்ளது என்று குஜராத் கலவரத்தை நியாயப்படுத்தும் நஜ்மாவை முஸ்லிம் சமூகம் உமா பாரதி, சுஷ்மா சுவராஜ், தமிழிசை சௌந்தரராஜன் என்ற வரிசையில் வைத்து பார்ப்பதுதான் நல்லது.
நஜ்மா ஹெப்துல்லாஹ் முஸ்லிம்தான் என்பதை மறுப்பதற்கில்லை. இஸ்லாத்தில் இரண்டு அம்சங்களின் அடிப்படையில் மனிதர்களை எடை போடலாம். ஒன்று மனிதன் இறைவனுக்கு செய்யும் கடமைகள். இதை பொறுத்தவரை விமர்சனம் செய்ய யாருக்கும் உரிமை இல்லை. தவறு செய்பவர்களுக்கு தவறை சுட்டிக்காட்டி நேர்வழிப்படுத்த முயலலாம்.
இரண்டு மனிதன் சக மனிதனுக்கு செய்யும் கடமைகள். இதில் சமத்துவம், சகோதரத்துவம், மனிதாபிமானம், ஒருவருக்கொருவர் உதவி செய்தல் எனப் பல்வேறு அம்சங்கள் அடங்கும்.
இந்த அடிப்படையில் நஜ்மாவை நோக்கும்போது அவர் என்று பா.ஜ.கவில் இணைந்தாரோ அன்றே அவரது மனித நேயம் மரித்துவிட்டது எனலாம். இனி அவரிடம் இருந்து சமநீதி அடிப்படையிலான கருத்துகளை எதிர்பார்ப்பது குஜராத்தின் இனப்படுகொலைக்கு மோடிக்கு தண்டனை கிடைக்கும் என்பதற்கு சமம்.
நன்றி தூது ஆன்லைன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக