காஸ் சிலிண்டர் விநியோகத்தை முறைப்படுத்தக் கோரி கிராம மக்கள் திடீர் சாலை மறியல் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
பெரம்பலூர், : குன்னம் அடுத்த லெப்பைக்குடிக்காட்டில் வீட்டு உபயோகத்துக்கான காஸ் சிலிண்டர்களை முறையாக விநியோகம் செய்ய
வலியுறுத்தி பொதுமக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பெரம்பலூர் மாவ ட்டம், குன்னம் அடுத்துள் ளது லெப்பைக்குடிக்காடு. பேரூராட்சி நிர்வாகத்தின் கீழ் இருந்து வரும் இப்பகுதியில் உள்ள 2 ஆயிரத்து க்கும் மேற்பட்டோர் பெரம்பலூர் வெங்கடேசபுரம் பகுதியில் இயங்கி வரும் தனியார் காஸ் ஏஜன்சியில் வீட்டு உபயோகத்துக்கான எரிவாயு இணைப்பு பெற்றுள்ளனர். இருப்பினும், 500 சிலிண்டர்களை மட்டும் மாதம் ஒரு முறை வாகனத்தில் எடுத்துச் செல்லும் சம்பந்தப்பட்ட ஏஜன்சி பணியாளர்கள், குறிப்பிட்ட ஒரே இடத்தில் வாகனத்தை நிறுத்தி அங்கு இணைப்புதாரர்களை வரவழைத்து விநியோகம் செய்து வருகின்றனர். இதனால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர்.
மேலும், எஸ்எம்எஸ் மூலம் பதிவு செய்தால் வாடிக்கையாளர்களின் எண் பதிவாகவில்லை எனக் கூறி சம்பந்தப்பட்ட நிறுவன ஊழியர்கள் சிலிண்டரை முறையாக விநியோகம் செய்ய மறுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில், லெப்பைக்குடிகாடு அரங்கூர் சாலையில் வழக்கம் போல், காஸ் சிலிண்டர்களை சம்பந்தப்பட்ட கேஸ் ஏஜன்சி நிறுவன ஊழியர்கள் நேற்று விநியோகம் செய்துகொண்டிருந்தனர். இதுகுறித்து தெரிய வந்ததும் அங்கு சென்ற பொதுமக்கள், அனைவருக்கும் வீடுவீடாகச் சென்று முறையாக காஸ் சிலிண்டர்களை விநியோகம் செய்ய வலியுறுத்தி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த குன்னம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் திருஞானம் மற்றும் போலீசார் அங்கு சென்று அவர்களை சமரசப்படுத்த முயன்றனர். இதுகுறித்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் ஆவேசமடைந்த பொதுமக்கள் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபடுவதற்காக திருமாந்துறை வழியாக பேரணியாகச் சென்றனர். இதையடுத்து அங்கு சென்ற தாசில்தார் மணிவேலன், கூடுதல் துணை கண்காணிப்பாளர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிகாரிகள் பொதுமக்களைத் தடுத்துநிறுத்தி சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில், இதுதொடர்பான சமாதானப் பேச்சுவார்த்தை 9ம் தேதி லப்பைக்குடிகாட்டில் நடத்தப்படும் என்றும், இணைப்பு பெற்றுள்ள அனைவருக்கும் முறையாக அவர்களின் வீடுகளுக்கே சென்று விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் உறுதியளித்தனர்.
இதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.இருப்பினும், இப்போராட்டத்தால் பெரம்பலூரில் இருந்து லெப்பைக்குடிக்காடு வழியாக அகரம் சீகூர் செல்லும் சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கீழே உள்ள வீடியோவில் உள்ள பேச்சை கவணமாக கேளுங்கள். அதில் குறிப்பாக இன்றே 2000 காஸ் வினியோகம் செய்வதாக அதிகாரிகள் வாக்குறுதி அளித்தனர். அதன் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டதா ? நமக்குள்ளேயே உள்ள அந்த நம்பிக்கை தூரோகி யார் ? ஆனால் கடைசி சமயத்தில் நடத்தது என்ன ? இன்ஷா அல்லாஹ் இதன் உண்மை தன்மை கூடிய விரைவில்.
Post by Labbaikudikadu Updating.
நன்றி தினகரன் மற்றும் வீடியோ முகநூலிலிருந்து
புகைப்படம் நமது நிருபர்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக