Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 8 மார்ச், 2015

மகளிர் பாதுகாப்பே சிறந்த தேசத்தின் அடையாளம்!

பெண் மனிதப்பிறவியா? என்ற விவாதம் நடந்த காலம் உண்டு.பெண், ஆணுக்கு அடிமையாகவும், 2-ஆம் தர குடிமகளாகவும், விற்பனை பொருளாகவும் கருதப்பட்ட காலங்களும் நம்மை கடந்து சென்றுவிட்டன. பெண்களை சக்திப்படுத்துதல் குறித்த விவாதம் தீவிரமடைந்துவரும் இக்காலக்கட்டத்தில் பெண் எவ்வாறு கவனிக்கப்படுகிறாள்? என்ற கேள்வி நம்மில் பலருக்கும் எழாமலில்லை.
கடந்த காலங்களில் பெண்களுக்கு எதிராக
நிகழ்ந்த அநீதிகள் எல்லாம் தற்காலத்தில் நவீன வடிவம் பெற்றுள்ளதை தவிர எவ்வித மாற்றமும் நிகழவில்லை என்பதுதான் கசப்பான உண்மை. இந்நிலையில் மீண்டும் ஒரு மகளிர் தினம் நம்மை கடந்து செல்கிறது. கலச்சார வளமிக்க சமூகத்தின் பண்புகளில் முக்கியமானது பெண்களுக்கு அந்த சமூகத்தில் அளிக்கப்படும் பதவியாகும். பெண்ணுக்கு பாதுகாப்பும், கண்ணியமும் அளிக்கும் ஆண் மகனைத்தான் நாம் நாகரீகமானவர், நேர்மையானவர் என அழைப்போம். அப்பொழுதுதான் சமூகத்திற்கு சிறந்ததொரு அந்தஸ்து கிடைக்கும்.
இஸ்லாம் வெற்றியடையும் காலக்கட்டத்தைக் குறித்து நபி(ஸல்) அவர்கள் தமது தோழர் அதீய் இப்னு ஹாதிம்(ரலி) அவர்களிடம் இவ்வாறு கூறினார்கள்:
“நீ நீண்ட நாள் வாழ்ந்தால், நீ நிச்சயம் காண்பாய். ஒட்டகச் சிவிகையில் அமர்ந்திருக்கும் ஒரு பெண் இறையில்லம் கஃபாவை(வலம் வருவதற்காக) பயணித்து ஹிராவில் இருந்து வருவாள். அவள்(வழியில்) அல்லாஹ்வைத் தவிர வேறெவருக்கும் அஞ்சமாட்டாள்”.
மக்காவில் வைத்து தமது தோழர் கப்பாப் இப்னு அரத்(ரலி) அவர்களிடம் நபி(ஸல்) அவர்கள் கூறுகையில்,”ஸன்ஆ முதல் ஹழர மவ்த் வரை ஒரு பெண் தனியாக நடந்து செல்லும் சூழல் உருவாகும்” என்றார்கள்.
நல்ல மனிதர், சிறந்த மனிதன், சிறந்த சமூகம் உள்ளிட்ட பதவிகளை தனி மனிதனுக்கும், சமூகத்திற்கும் வழங்குவது, பெண்களுடனான அவர்களுடைய நடவடிக்கையையும், பெண்ணுக்கு அளிக்கப்படும் அந்தஸ்தையும் கவனத்தில் கொண்டே இதன் மூலம் நபி(ஸல்) அவர்கள் நமக்கு கற்பிக்கின்றார்கள்.”…உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் நற்பண்பால் சிறந்து விளங்குபவரே!” என்ற நபிமொழியில் அடங்கியிருக்கும் சித்தாந்தம் மிகப்பெரியது.
பாதுகாப்பும், சுபிட்சமும் ஒரு நலன் மிகு தேசத்தின் முக்கிய அடையாளங்களாக புனித திருக்குர்ஆன் கற்பிக்கிறது. இறையருள் பெற்ற தேசம் என்று ஒரு நாட்டை நாம் வர்ணிக்கவேண்டுமெனில் அச்சமில்லாத பிரயாண வசதிகளும், அமைதியான வாழ்க்கை சூழல்களும் சாத்தியமாகவேண்டும். ஏழ்மையில் இருந்தும் பட்டினியில் இருந்தும் விமோசனம் பெறவேண்டும்.
திருக்குர்ஆனில் குறைஷ் என்ற அத்தியாயத்தின் கடைசி இரு வசனங்கள் இவ்வாறு கூறுகிறது: ”இவ்வீட்டின் இறைவனை அவர்கள் வணங்குவார்களாக!அவனே, அவர்களுக்கு பசிக்கு உணவளித்தான்.மேலும் அவர்களுக்கு அச்சத்திலிருந்தும் அபயமளித்தான்”(அல்குர்ஆன் 106:3-4)
இந்திய பெண் சமூகத்தின் நிகழ்கால அனுபவங்களை முன்வைத்து நலன் மிகு தேசத்தையும், பாதுகாப்பான சமூகத்தையும் குறித்த குர்ஆனின் வசனங்களை ஆய்வுச் செய்ய கடமைப்பட்டுள்ளோம்! பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத, அவர்களுக்கு கண்ணியத்தை வழங்காத தேசம், எவ்வாறு நலன் மிகு தேசமாகும்? பாதுகாப்பையும், அச்சமின்றி வாழ்வதற்கான உரிமைகளையும், கடமைகளையும் பரஸ்பரம் அங்கீகரிக்காத மனிதர்கள் எவ்வாறு நாகரீக மனிதர்களாக இருப்பார்கள்? சிறந்த தேசம், முன்னேறிய சமூகம் என்று நாம் பெருமை பேசுவதெல்லாம் முற்றிலும் அர்த்தமற்றது என்பதை சமீபகாலமாக நிகழ்ந்து வரும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நமக்கு எடுத்தியம்புகின்றன.
பெண் குழந்தை பிறந்தாலே மண்ணில் புதைத்த ஏழாம் நூற்றாண்டு அரேபியாவை விட மோசமான சூழல் இன்று நிலவுகிறது. சமூகம் பவுதீக வாழ்வின் அடிமைகளாக மாறியதன் விளைவாக தீமைகள் கோரத்தாண்டவமாடுகின்றன. எவ்வாறேனும் பணத்தை சம்பாதிக்கவேண்டும், சுகபோகமாக வாழவேண்டும், எல்லாவற்றையும் அனுபவிக்கவேண்டும் என்பதற்கு அப்பால் வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லாது போனது.
மதம் சமூக வாழ்வில் இருந்து முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. தார்மீக பாடங்களை கற்றுத்தந்த இறைத்தூதர்களுக்கும், சான்றோர்களுக்கும் உள்ளங்களில் இடமில்லை. அதற்கு பதிலாக ஷைத்தான் உள்ளங்களில் குடியேறினான். மதம் சடங்கு, சம்பிரதாயங்களுடன் தன்னை சுருக்கிக்கொண்டது. வாழ்க்கையும், நாகரீகமும் இருளடைந்துவிட்டன. நண்பகலிலும் அந்த இருள் சூழ்ந்திருப்பதால்தான் அமெரிக்காவில் நர்ஸரி மாணவர்களுக்கு கூட உயிர் நஷ்டமாகிறது.
பள்ளிக்கூடங்களிலும், பொது இடங்களிலும் தொடர்ந்து எழும் துப்பாக்கிச் சத்தங்கள் அந்நாட்டின் பவுதீக நவீன நாகரீகம் உற்பத்திச் செய்த தயாரிப்பு. நர்ஸரி பள்ளிக்கூட சிறார்களுக்குக் கூட பாதுகாப்பு இல்லாத, பெண்கள் அச்சமின்றி பயனிக்க முடியாத நாடுகளின் தலைநகரங்களை குறித்து சிந்தித்துப்பாருங்கள்.
நவீன பவுதீகமே இவற்றையெல்லாம் உருவாக்கியது.இதில் இருந்து விடுபடவேண்டுமெனில் உலக வாழ்வின் மீதான ஒரு தலைபட்சமான கண்ணோட்டம் மாறவேண்டும்.பவுதீக உலகின் மீது ஆன்மீகத்தை கட்டியெழுப்பவேண்டும். மதத்தை வழிப்பாட்டுத்தலங்களில் இருந்து வீதிகளுக்கும், மார்க்கெட்டுகளுக்கும், அலுவலகங்களுக்கும், ஆட்சி,அதிகார மையங்களுக்கும் ஏன் வாழ்க்கையின் அனைத்து துறைகளுக்கும் பரவலாக்கவேண்டும்.
பெண்கள் குறித்த மனோநிலையை ஆண் வர்க்கம் மாற்றிக்கொள்ளவேண்டும். தாய், மனைவி, சகோதரி போன்ற உறவுகளை எவ்வாறு நாம் மதிக்கிறோமோ அதுபோலவே பிற பெண்களையும் நமது சகோதரிகளாக மதித்து உரிய மரியாதையும், வரம்புகளையும் பேணும் போதுதான் ஒழுக்கமிக்க சமூகம் உருவாகும். இறைவனின் பூமியில் ஆண்களும், பெண்களும் சமமான அந்தஸ்தை உடையவர்களே!
சர்வ அதிகாரமும் படைத்த இறைவனின் எவ்வித அதிகாரங்களுமில்லாத படைப்புகள்தாம் ஆண்களும், பெண்களும் என புரிந்து கொள்பவர்களால் பெண்கள் அவமானத்திற்கு அநீதத்திற்கும் ஆளாக்கப்படமாட்டார்கள்.
விபச்சாரம் செய்ய அனுமதிக் கேட்ட இளைஞர் ஒருவரிடம் நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு கேள்வி எழுப்பினார்கள்:
‘உன்னுடைய தாய், அல்லது சகோதரி விபச்சாரம் செய்வதை நீர் விரும்புவீரா?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர், ‘நான் விரும்பமாட்டேன்’ என்று கூறினார். அப்போது நபியவர்கள்,’“உமக்கு எதை நீ விரும்புகின்றாயோ, அதையே பிறருக்கும் நீ விரும்புவாயாக! உம் விஷயத்தில் எதை நீ வெறுப்பாயோ அதையே பிறரின் விஷயத்திலும் வெறுப்பாயாக!” என்று கூறினார்கள். இந்த சம்பவத்தை அறிவிக்கும் நபித்தோழரான அபூ உமாமா {ரலி} அவர்கள் கூறுகின்றார்கள்: “இதன் பின்பு அந்த இளைஞரின் வாழ்வினில் எந்த ஒரு தருணத்திலும் கற்பொழுக்கத்தை உரசிப்பார்க்கும் எந்த ஒரு செயலும் இடம் பெற வில்லை.”(ஹதீஸ் சுருக்கம், நூல்:முஸ்னத் அஹ்மத்)
அதுபோலவே, தன்னைக் குறித்த உணர்வுப்பெற்ற பெண்ணால் மட்டுமே தனது அடையாளத்தை நிலைநிறுத்தி வாழ முடியும். பெண் என்பவள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும், அறிவு ரீதியாகவும் பலம் பெறவேண்டும். சமூக நீதிக்கான, உரிமைகளுக்கான போராட்டங்களில் பெண்களின் பங்கு முக்கியத்துவம் பெறவேண்டும். இத்தகைய முயற்சிகளில் இருந்து பெண்களை திசை திருப்ப முயலும் சில மோசடி சக்திகள் குறித்து நாம் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும்.
நன்றி தூது ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக