புதுச்சேரி: ‘கர்வாப்ஸி’ என்ற பெயரில் சிறுபான்மையினருக்கு எதிராக பயங்கரவாத பிரச்சாரத்தை இந்துத்துவா சக்திகள் மேற்கொண்டு வருகின்றன என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) கடுமையாக சாடியுள்ளது.
புதுச்சேரியில் நடைபெறும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 22-வது மாநாட்டில் தொடக்க உரையாற்றிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி, நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி மீது கடும் விமர்சனங்களை அடுக்கினார்.
“சிறுபான்மையினருக்கு எதிராக இந்துத்துவா சக்திகள் கர்வாப்ஸி என்ற பெயரில் பயங்கரவாத பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.
நாட்டை மத ரீதியாகத் துண்டாடுவதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் மூலம் பதற்றத்தையும், அச்சம் ஏற்படுத்தக்கூடிய மனநிலையையும் உருவாக்கி, நாட்டின் முக்கியமான பிரச்சனைகளிலிருந்து திசை திருப்ப முயற்சிகள் நடைபெறுகிறது.
சர்ச்கள் தாக்கப்படுகின்றன. சங்பரிவாரின் வழிகாட்டுதல்களின் படி கலாச்சார பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்படுகிறது. அறிவியல் ரீதியான மனநிலைகளுக்கு பங்கம் ஏற்படுத்தப்படுகிறது. கலைஞர்கள், எழுத்தாளர்கள் மீதான அடக்குமுறை அதிகரித்து வருகிறது.
மகாத்மா காந்தி உள்ளிட்ட தேசியத் தலைவர்களின் புகழுக்குக் களங்கம் விளைவித்து அந்த இடத்தில் கோட்சே வழிபாடு முன் வைக்கப்படுகிறது. சகிப்புத் தன்மை அற்ற நிலையும், வெறுப்பும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. தாராளவாத பொருளாதாரக் கொள்கைகளை செயல்படுத்துவதில் பாஜக-வுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே மேட்ச் பிக்சிங் உள்ளது” என்றார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக பெற்ற வெற்றி குறித்து சுதாகர் ரெட்டி கூறுகையில், “கடந்த தேர்தல், மதவாத-கார்ப்பரேட் ஆதரவு ஆட்சியைக் கொண்டு வந்துவிட்டது. சங்பரிவாரின் நேரடி ஆசியுடன் இயங்கும் பிற்போக்குவாத ஆட்சியைக் கொண்டு வந்துவிட்டது” என்று சுதாகர் ரெட்டி பேசினார்.
நன்றி தூது ஆன்லைன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக