தமிழக அரசின் பல்வேறு உயர் பதவிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட 83 பேரின் பணி நியமனம் செல்லாது என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியிருக்கும் நிலையில், இம்மாதிரி தேர்வுகளுக்கான பயிற்சி மையங்களைக் கண்காணிக்க வேண்டும் என்கிறார்கள் நிபுணர்கள்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) 2001ஆம் ஆண்டில் நடத்திய க்ரூப் 1 நிலை அதிகாரிகளுக்கான தேர்வில் 91 பேர்
பல்வேறு பணிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களில் 24 பேர் துணை ஆட்சியர்களாகவும் 20 பேர் டி.எஸ்.பி.க்களாகவும் 10 பேர் வணிக வரித் துறை அதிகாரிகளாகவும் 33 பேர் கூட்டுறவு துணைப் பதிவாளராகவும் பல பணிகளில் நியமிக்கப்பட்டனர்.
இந்த 91 பேரை அதிகாரிகளாக தேர்வு செய்ததில் பல முறைகேடுகள் நடந்துள்ளதாகக்கூறி, இவர்களின் நியமனத்தை எதிர்த்து ஏ.பி. நடராஜன் என்பவர் வழக்குத் தொடர்ந்தார். தேர்வாணையத்தின் தேர்வு விதிமுறைகளுக்கு மாறாக விடைத்தாளில் ஸ்கெட்ச் பேனா மற்றும் பென்சில் பயன்படுத்தியது, இரண்டு வண்ண மைகளைப் பயன்படுத்தியது, சில வழிபாட்டுச் சின்னங்களை விடைத்தாளில் எழுதிவைத்தது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் இவர்கள் மீது சுமத்தப்பட்டன.
இந்த வழக்கினை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகளைக் கொண்ட அமர்வு, அதிகாரிகளாகத் தேர்வு செய்யப்பட்டவர்களில் 8 பேர் தவிர மற்ற 83 பேரின் பணி நியமனம் செல்லாது என்று கடந்த 2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து, தமிழக அரசின் சார்பிலும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையே, தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்கப்பட்டு பல்வேறு பணிகளில் அமர்த்தப்பட்டனர். இந்த நிலையில்தான், இவர்களது பணி நியமனத்தை ரத்து செய்த, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு செல்லும் என இந்திய உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.
பத்தாண்டுகளாகப் பணியிலிருந்த 83 பேரின் நிலை கேள்விக்குரியதாகியிருக்கும் நிலையில், எதிர்காலத்தில் இம்மாதிரி சூழல் ஏற்படாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை தேர்வாணையம் மேற்கொள்ள வேண்டும் என்கிறார் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் முன்னாள் தலைவர் நட்ராஜ். குறிப்பாக, பயிற்சி மையங்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்கிறார் அவர்.
அதேபோல, பயிற்சி மையங்கள் தயாரித்துப் பயிற்சியளிக்கும் கேள்வித்தாளைவிட கடினமான கேள்விகளை தேர்வாணயம் தயாரிக்க வேண்டும் என்றும் இம்மாதிரி தேர்வுகளில் புத்திசாலித்தனமான நேர்மையானவர்களைத் தேர்வுசெய்வதுதான் முக்கியம் என்கிறார் நட்ராஜ்.
இந்த நிலையில், பத்தாண்டுகளுக்கும் மேலாக அரசுத் துறைகளில் பணியாற்றிவிட்டு, தற்போது நீதிமன்றத்தால் பணி நியமனம் ரத்து செய்யப்பட்டவர்களின் நிலையும் கேள்விக்குள்ளாகியுள்ளது. பணி நியமனம் தொடர்பான வழக்குகள் நீதிமன்றங்களுக்கு வரும்போது, அவை உடனடியாக, அதாவது ஓராண்டிற்குள் தீர்க்கப்பட வேண்டும் என்கிறார்கள் தேர்வாணைய செயல்பாடுகளை தொடர்ந்து கவனிப்பவர்கள்.
நன்றி தூது ஆன்லைன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக