நபிகள் நாயகம் போதனைகளை அனைவரும் கடைபிடித்து வாழ்ந்தால், இந்தியா அமைதிப் பூங்காவாக விளங்கும் என முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
அதிமுக சார்பில் நந்தம்பாக்கத்தில் திங்கள்கிழமை மாலை நடந்த இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
இஸ்லாம் மார்க்கம் என்பது நல்வழி மார்க்கம். ஒற்றுமையுடன் இருப்பது, தர்மம் செய்வது, அனைவரிடத்திலும் அன்புடன் நடந்து கொள்வது, கோபத்தை அடக்குவது, மன்னிப்பது, சண்டை சச்சரவுகளை தீர்த்து வைப்பது போன்ற நற்பண்புகளை போதித்தவர் நபிகள் நாயகம். அவர், தீயவர்களையும் நல்வழிப்படுத்தியவர்.
நபிகள் நாயகம் ஒரு கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, ஒரு குடிகாரர் எழுந்து, ‘எனக்கு இஸ்லாத்தில் இடம் உண்டா’ என கேட்டார். பக்கத்தில் இருந்த ஒருவர், ‘இஸ்லாத்தில் குடிகாரருக்கு இடம் கிடையாது’ என்றார். அதற்கு நபிகள் நாயகம், குடிகாரரைப் பார்த்து, ‘உனக்கு இஸ்லாத்தில் இடம் உண்டு’ என்று கூறினார்.
உடனே குடிகாரர், ‘நான் இஸ்லாத்தில் சேரலாமா’ என்று கேட்டார். ‘கட்டாயம் சேரலாம். ஆனால் ஒரேயொரு நிபந்தனை. இறைவனை தொழுகிறபோது மட்டும் குடிக்கக் கூடாது’ என்று நபிகள் கூறினார். அவரும் இஸ்லாத்தில் சேர்ந்தார். தொழுகைக்கு போகிறபோது மட்டும் குடிக்க முடியாத நிலைமை அவருக்கு ஏற்பட்டது.
சிறிது நாட்கள் கழித்து அந்த நபரைப் பார்த்த நபிகள் நாயகம், ‘காலையில் மட்டும் தொழுதால் போதாது. மாலையிலும் தொழ வேண்டும்’ என்றார். 2 வேளையும் தொழுகைக்கு போக ஆரம்பித்த அந்த நபர், அந்த நேரத்தில் குடிக்காமல் இருந்தார்.
பின்னர் சிறிது நாட்கள் கழித்து, ‘மேலும் பகலிலும், அந்தியிலும் ஒருமுறை தொழ வேண்டும்’ என்று அந்த நபரிடம் கூறினார் நபிகள் நாயகம். பின்னர் அந்த நபர் ஐந்து வேளையும் தொழ ஆரம்பித்துவிட்டார்.
ஒருநாள் தொழுகைக்கு போய்க் கொண்டிருந்த அந்த நபரைப் பார்த்த நபிகள், ‘இறைவனைத் தொழ போகிறபோது மட்டும் குடிக்காமல் இருந்தால் பயனில்லை. இறைவனை தொழுதுவிட்டு வந்த பிறகும் குடிக்காமல் இருக்க வேண்டும்’ என்று கூறினார். கடைசியில் அந்த நபருக்கு குடிப்பதற்கே நேரம் இல்லாமல் போய்விட்டது.
இறைவனிடம் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டும் என்பதே நல்ல பழக்க வழக்கங்கள், வர வேண்டும் என்பதற்காகத்தான். அனைத்து மதங்களும் இதைத்தான் நமக்கு போதிக்கின்றன.
நபிகள் நாயகம், நற்பண்புகளை போதித்தது மட்டுமல்லாமல், அதன்படி வாழ்ந்தும் காட்டியவர். அவரது போதனைகளை அனைவரும் கடைபிடித்து வாழ்ந்தால், இந்தியா அமைதிப் பூங்காவாக விளங்கும்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார்.
விழாவில், சன்னி பிரிவு தலைமை ஹாஜி சலாவுதீன் முகமது அயூப், ஷியா பிரிவு தலைமை ஹாஜி குலாம் முகமது மெஹடி கான், அண்ணா சாலை தர்கா அறங்காவலர் சையத் மொய்னுதீன், ஆற்காடு இளவரசர் முகம்மது அலி மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக