Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

சனி, 26 ஜூலை, 2014

மகிழ்ச்சிப் பெருநாள்!

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராளி டாக்டர் உதயகுமார். விடியல் வெள்ளியில் தொடர் எழுதி வருகிறார். அதில் இந்த மாதம் தங்கள் போராட்டம் காரணமாக அவரும் அவரைச் சார்ந்தவர்களும் சந்தித்த நெருக்கடிகள்; வழக்குகள்; அவதூறுகள்; மன உளைச்சல்கள். இவற்றை சொல்லி விட்டு, சில பல மனப் பயிற்சிகளை தான் மேற்கொண்டிருக்காவிட்டால் எப்போதோ நொறுங்கிப் போயிருப்போம் என்று சொல்கிறார்.
ஆமாம். வாழ்க்கையில் அடுக்கடுக்காக வரும் சோதனைகளை எல்லோராலும் தாக்குப் பிடிக்க முடிவதில்லை. சிலர் விரக்தியின் எல்லைக்கே சென்று விடுகின்றனர். அதனால் மன நலம் பாதிக்கப்படுகிறது. சிலர் தங்களையே மாய்த்துக் கொள்கின்றனர்.

இந்த சோதனைகள், தொடர் துன்பங்கள் தனி மனிதர்களை மட்டும்தான் தாக்கும் என்றில்லை சமயங்களில் ஒரு முழு சமுதாயத்தையும் தாக்கிடும். நமக்குத் தெரிந்து இந்த முஸ்லிம் உம்மத்தை விட இப்படி ஒரு தொடர் சோதனையை அண்மைக் காலத்தில் சந்தித்துக் கொண்டிருக்கும் ஒரு சமுதாயம் உலகில் வேறு உண்டா?
முஸ்லிம்கள் ஒரு சர்வதேச சமுதாயம். அத்துடன் அல்லல்களுக்கும் அநீதிக்கும் நாள்தோறும் ஆட்படும் சமுதாயம். இதனால் கவலை தோய்ந்த சமுதாயமாக சதா சர்வ காலமும் நின்று கொண்டிருக்கிறது. இதைத்தான் அல்லாஹ்வின் இறுதி தூதர் பெருமானார்(ஸல்) சொன்னார்கள். “முஸ்லிம்கள் உடலின் உறுப்பை போன்றவர்கள். ஒரு பகுதிக்கு பாதிப்பு ஏற்பட்டால் மற்றொரு பகுதி உறங்காமல் காய்ச்சலால் வாடுகிறது”.
இதன் நடைமுறை அர்த்தத்தை இன்று கண்டு வருகிறோம். உதாரணத்திற்கு இந்திய முஸ்லிம்களையே எடுத்துக் கொள்வோம். முஸ்லிம்களை இனப்படுகொலை செய்தவர் இந்தியாவின் பிரதமராகி விட்டார். இந்தப் படுகொலைகள் மூலமாகத்தான் அவர் உலகெங்கும் அறியப்பட்டார். இந்த எதிர்மறை பிரபலத்தையே மூலதனமாக்கி அவரை அரியாசனம் ஏற்றி விட்டனர் மனசாட்சி அற்ற பாதகர்கள். இந்த அதிர்ச்சியிலிருந்தும் கவலையிலிருந்தும் மீண்டு வருவதற்குள் இலங்கை முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. உயிர் பலி ஏற்பட்டது.
இலங்கை கலவரம் முடிந்தும் முடியாமலும் இருக்கும் போது பர்மாவில் மீண்டும் முஸ்லிம்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தப்பட்டது. அத்துடன் ரமலானும் வந்தது. ரமளானிலும் உலக முஸ்லிம்களின் அமைதியை குலைத்துப் போட்டனர் கொலை வெறிக் கூட்டத்தினர். ஃபலஸ்தீன முஸ்லிம்களை எண்ணி எண்ணி கண்ணீர் வற்றி விட்டது. உள்ளம் வறண்டு விட்டது. ரமலானின் இரவுகள் துக்கத்தால் நீளுகிறது.
இஃதல்லாமல் எப்போதும் அல்லல்படும் காஷ்மீர் முஸ்லிம்கள், தொடர்ந்து கொண்டே இருக்கும் சிரியாப் படுகொலைகள், குண்டுவெடிப்புகளில் சிதறும் ஈராக் முஸ்லிம்கள், ஆஃப்கானிஸ்தான் அவலங்கள்…
இடையில் ஒரு வெற்றி வந்தது. ஒரு ஆறுதல் வந்தது. எகிப்தில் இஹ்வான்கள் வெற்றி பெற்றனர். முஸ்லிம்கள் மகிழ்ந்தனர். அதையும் இடைமறித்து முறித்துப் போட்டனர் ஏகாதிபத்திய சக்திகள். அதை தொடர்ந்து நடைபெற்ற படுகொலைகள்; கைதுகள்; ஆயுள் தண்டனை மரண தண்டனைகள்; நாள்தோறும் நடக்கும் போராட்டங்கள். முஸ்லிம் உலகம் கொந்தளித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் இந்த ஏகாதிபத்திய சக்திகளின் விருப்பம் போலும். அதில்தான் அவர்கள் வாழ்வின் மகிழ்ச்சி உள்ளது போலும்.
சரி இந்த நெருக்கடிகளை எல்லாம் முஸ்லிம்கள் எப்படி தாங்குகிறார்கள்? எந்த வகையான பயிற்சிகளை எடுக்கிறார்கள்? உண்மையில் அதிசயமான பயிற்சிகளை அவர்களை அறியாமலே நாள்தோறும் மேற்கொள்கிறார்கள். அந்தப் பயிற்சிகளை எடுக்கும் படியாக பிறந்தது முதலே பயிற்றுவிக்கப் படுகிறார்கள்.
இப்போது ஃபலஸ்தீனில் நடப்பதையே பார்ப்போம். தொலைக்காட்சி செய்தியாளர் செய்திகளை வழங்கிக் கொண்டிருக்கிறார். இஸ்ரேலின் அக்கிரமங்களை எடுத்து சொல்கிறார். இரவு நேரம். அந்த செய்தியாளரின் வார்த்தைகளை ஊடறுத்து ஒரு ஒலி நம் காதில் விழுகிறது. அருகாமையிலுள்ள பள்ளிவாசலில் இருந்து வரும் திருக்குரானின் ஒய்யார ஓசைதான் அது.
சூழ்நிலைகள் எவ்வளவு மோசமாக இருந்தாலும் தொழுகை நேரம் வந்தவுடன் பாங்கு(தொழுகை அழைப்போசை) ஒலிக்கும். “தொழுகையின் பக்கம் வாருங்கள்; வெற்றியின் பக்கம் வாருங்கள்”. முஸ்லிம்கள் தொழுகைக்கு விரைவார்கள்.
தொழுகை! தங்களைப் படைத்தவனிடம் முற்றிலுமாக தங்களை ஒப்படைத்து விட்டு நிற்பார்கள். தொழுகை முழுவதும் பிரார்த்தனைகள். தூய இறைத்துதி சொற்கள். தொழுகை முடிந்ததும் இரு கரம் ஏந்தி அகில உலக அரசனிடம் பிரார்த்திப்பார்கள்.
பிரார்த்தனை! இதை விட மனக் காயத்திற்கு ஒரு மாமருந்து உண்டா? அதுவும் திருமறை மற்றும் நபி மொழிகளில் இருந்து பெற்ற பிரார்த்தனைகளின் தொகுப்பு. அது ஒரு பொக்கிஷம். நம் ஆன்மாவை கழுவித் துவைத்து தூய்மைப் படுத்திடும் ஒரு அற்புதப் பேழை. மன வருத்தத்திற்கும் உடல் வருத்தத்திற்கும் கண் கண்ட நிவாரணம்.
திருமறை குர்ஆன்! இது ஒரு அதிசயம். கண் முன் உதாரணம் ஃபலஸ்தீன முஸ்லிம்கள். வல்லரசு இஸ்ரேலை கையில் கிடைத்தவற்றை கொண்டு எதிர்த்து நிற்கிறார்கள். உலகம் வியந்து பார்க்கிறது. அக்கிரமத்தை எதிர்த்து நிற்கும் இந்த ஊக்கத்தின் ஊற்றுக் கண் திருமறை குர்ஆன்.
“ஹஸ்புனல்லாஹு வ நிஃமல் வக்கீல் – அல்லாஹ்வே எங்களுக்குப் போதும் அவனே எங்கள் பாதுகாவலன்”. திருக்குர்ஆனின் இந்த வார்த்தை இப்போது ஃபலஸ்தீன முஸ்லிம்களின் தேசிய கீதமாகிப் போனது. மருத்துவமனைகளின் அழுகுரல்களுக்கு மேலாக இந்த வார்த்தைதான் அதிகமாக கேட்கிறது.
ஃபலஸ்தீனில் ஷஹீதான ஷுஹதாக்களின் நெற்றியில் முத்தமிடும் வாய்ப்பை நாளை அல்லாஹ் சுவனத்தில் நமக்கு தரட்டும். அந்த நம்பிக்கையும் ஆறுதலும்தான் இப்போது உள்ளத்தில்.
அதிலும் அந்தப் பொடியன் அந்தப் பாலகன் அனைவரையும் விஞ்சி விட்டான். தாங்கள் வெற்றிப் பெற்றுக் கொண்டிருக்கிறோம் என்றல்லாவா சொல்கிறான். கருணையாளன் அல்லாஹ் அப்படியே ஆக்கட்டும்.
உலக முஸ்லிம்களுக்கு மகிழ்ச்சிப் பெருநாளாகவும் வெற்றிப் பெருநாளாகவும் இந்த ஈதுத் திருநாள் அமையட்டும்.
நன்றி தூது ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக