நம் சமூகத்தின்
மனசாட்சி யார் ?
லியான் யூரிஸ்.
இந்த பெயரை இதற்கு முன் நீங்கள் கேள்விப்பட்டதுண்டா ? இவர் எழுதிய புத்தகத்தின் பெயர்
“ தி எக்ஸோடஸ் ” இவ்வுலகத்தில் எத்தனையோ எழுத்தாளர்கள் தங்கள் கனவுகளை, நம்பிக்கைகளை,
பண்பாட்டு அசைவுகளை, சரித்திரத்தை பற்றி எழுதிய எண்ணிலடங்கா புத்தகங்கள் உண்டு. ஆனால்,
எந்த புத்தகத்திற்கும் இல்லாத மாறுபட்ட அதிர்ச்சிகரமான பின்னணி இந்த புத்தகத்திற்கு
உண்டு என்று நாம் உறுதியாக கூறலாம். ஆம் ! நாவலின் அடிநாதம் இது தான்.
சைப்ரசில் பிரிட்டீஷ்
அரசால் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் யூதர்கள் ஒரு கப்பலில் தப்பித்து தங்கள் பூர்வீக
பிரதேசம் என்று சொல்லிக் கொள்ளும் ஃபலஸ்தீனத்திற்கு செல்வது போல் கதை. கதையின் பின்னணியில்
யூதர்கள் காலம் காலமாக பட்ட கஷ்டங்கள், ஹிட்லரால் யூதர்களுக்கு இழைக்கப்பட்ட அநியாயங்கள்
எல்லாம் பிளாஷ்பேக்கில் வர, ஐ.நா. தீர்மானத்தின் படி இஸ்ரேல் என்ற புதிரான புது நாடு
உருவாவதுடன் நாவல் முடியும். இந்த நாவலை எடுத்தால் கையில் இருந்து கீழே வைக்க முடியாது.
அந்த அளவிற்கு சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும் அந்த நாவலில் வரும் கதை மாந்தர்களாக
நம்மை உருவகப்படுத்தும் அளவுக்கு வசீகர சக்தி பெற்ற மாறுபட்ட நாவல் இது.
பொதுவாக ஒரு நாவலை
எழுத எழுத்தாளருக்கு ஓர் மையக் கரு தேவை. சமயங்களில் சில ஆண்டுகளாக கூட எழுது, எழுது
என்று மனம் அவரை துரத்திக் கொண்டே இருக்கும். ஆனால், ஒரு அரசாங்கமே தனது பிரச்சாரத்தின்
வெளிப்பாடாக ஒரு எழுத்தாளனை அழைத்து யூதர்களுக்கு சாதகமாக ஒரு நாவலை எழுது என்று சொல்லி
இருந்தால், அது நிச்சயம் இந்த நாவலாகத்தான் இருக்க முடியும். இஸ்ரேல் என்ற கள்ள நாடு
1948 ல் உருவான பொழுது அதை ஆதரிக்க அமெரிக்காவில் உள்ள பெரும் யூத பணக்காரர்களும்,
அதிகாரத்தில் இருந்த யூத அரசியல்வாதிகளும், கண்டு கொள்ளாமல் இருந்த பொழுதுதான் இஸ்ரேல்
பக்கம் இவர்களது கவனத்தை திருப்ப ஒரு நாவல் வெளியிட இஸ்ரேல் அரசு முடிவு செய்தது.
அதன் விளைவாக அமெரிக்காவில்
புகழ்பெற்ற மக்கள் தொடர்பு நிறுவனம் ஒன்றை நடத்திக் கொண்டிருந்த எட்வர்ட் கோட்லி என்ற
யூதர் லியோன் யூரிஸை தொடர்பு கொண்டு யூதர்களுக்கு சாதகமாக ஒரு நாவலை எழுதச் சொல்லி
தன் திட்டத்தை அவரிடம் கூறுகிறார். நாவல் எழுத லியோன் யூரிஸ் மேற்கொண்ட பயணங்கள் ,
ஆய்வுகள் , அனைத்திற்கும் கோட்லியின் நிறுவனம் செலவு செய்தது. அதற்கு கைமேல் பலன் கிடைத்தது.
அதுவரையில் இஸ்ரேலை கண்டு கொள்ளாத யூதர்கள் அனைவரும் இஸ்ரேலுக்கு போட்டி போட்டு அனைத்து
உதவிகளையும் செய்ததோடு மட்டுமல்லாது அமெரிக்க அதிகார மட்டத்தில் இஸ்ரேலுக்கு ஆதரவு
லாபி ஒன்று உருவானது. சாதாரண மக்கள் கூட யூதர்கள் மேல் கரிசன பார்வையை வீச ஆரம்பித்ததும்
இந்த நாவல் வந்த பிறகுதான் என்பதே யதார்த்தமான உண்மை.
இவ்வளவு ஏன், சோவியத்
யூதர்கள் கூட யூத இனம் என்ற இன உணர்வு தலைதூக்கி இஸ்ரேலில் குடிபுக அனுமதி கேட்டதாக
சொல்லப்படுகிறது. இஸ்ரேலின் பிரதமர் பென்குரியன் “ எக்ஸோடஸ் நாவல் ஒரு அருமையான பிரச்சார
சாதனம் ” என்று வெளிப்படையாகவே கூறினார். பின் இந்நாவல் திரைப்படமாக எடுக்கப்பட்டு
பெரும் வரவேற்பை பெற்றதோடு ஐம்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழி மாற்றமும் செய்யப்பட்டது.
இதில் மிகவும் வருத்தமான அம்சம் என்னவென்றால் இந்த நாவல் யூதர்களை பெரும் தியாகிகளாக
சித்தரிப்பதோடு , அரேபிய முஸ்லிம்களை முட்டாள்களாகவும் , மோசமான பிம்பங்களாகவும் காட்சிப்படுத்தியது.
நாவலின் சுவாரசியத்தில் வரலாற்று உண்மைகள் கூட அப்பட்டமாக மறைக்கப்பட்டது என்கின்றனர்
விமர்சகர்கள். (ஆதாரம் புதிய புத்தகம் பேசுகிறது , ஏப்ரல் மாத இதழ் 2014)
.இந்த நாவலில்
நமக்கு நல்ல படிப்பினைகள் இருக்கின்றது.
அலெக்ஸ் ஹேலி எழுதிய
ரூட்ஸ் வெளிவந்த பிறகுதான் கருப்பர்கள் தங்கள் பூர்வீக மார்க்கம் இஸ்லாம் என்பதை அறிந்து
கொண்டு அலை, அலையாக இஸ்லாமிய மார்க்கத்தை நோக்கி வந்தார்கள் என்பது நிதர்சனமான உண்மை.
ஆனால், நல்ல இலக்கியங்களோ,
நல்ல வரலாற்று படைப்புகளோ மதிப்பெண்களையும் , வேலையையும் குறிக்கோளாக கொண்டு வேலையின்
மூலமாக பணம் சம்பாதித்து தர வேண்டும் என்கிற சமூகத்தின் போக்கை புரட்டிப் போடுகின்ற
படைப்பாகவோ, குறைந்தது தன் சமூகத்திலாவது மாற்றத்தை ஏற்படுத்துகின்ற மகத்தான படைப்பாக
எவ்வாறு வர இயலும் ?
சமீபத்தில் மறைந்த
இலத்தீன் அமெரிக்க எழுத்தாளர் காப்ரியல் மார்குவேஸை இலத்தீன் அமெரிக்காவின் மனசாட்சி
என்பார்கள். இவரது The Hundred Years of Solitude “ நூற்றாண்டுகால தனிமை ” புத்தகம்
வந்த பிறகுதான் இலத்தீன் அமெரிக்க பழங்குடி மக்களின் அவலங்களை உலகம் அறிந்து கொண்டது.
1982 ல் இந்த நாவலுக்கு நோபல் பரிசும் கிடைத்தது. அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பில்கிளிண்டன்
கூட மார்குவேஸின் தீவிர ரசிகர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இத்தனைக்கும் அமெரிக்காவுக்கும்
இவரது கொள்கைகளுக்கும் ஏழாம் பொருத்தம்தான்.
ஆனால், இன்று நாம்
என்ன செய்து கொண்டிருக்கிறோம் ? அடுத்தவர்களின் குறைகளை விமர்சனம் செய்வதிலும் தேவையற்ற
விமர்சனங்களை செய்வதிலும் தான் நம்மில் பலர் நேரத்தை செலவு செய்கிறோம். ஆக்கப்பூர்வமான
கருத்துகளால் சமுதாயம் பலன் பெறலாம். ஆனால், தேவையற்ற விமர்சனங்களாலும் கருத்து மோதல்களாலும்
யாருக்குதான் இலாபம் ? நம் மக்களின் சோதனைகளையும், சாதனைகளையும், எதிர்பார்ப்புகளையும்
உலகிற்கு உரக்கச் சொல்ல நம்மிடம் செய்திகள் இல்லையா ? இல்லை அதற்கான மனோபாவம் இல்லையா
? எழுதுவதற்கு நம்மிடம் செய்திகளும் கருப்பொருள்களும் ஏராளமாகவே உள்ளன. மறைக்கப்பட்ட
சம்பவங்களும் வரலாறுகளும் மக்கள் மனங்களில் எத்தனையோ தப்பெண்ணங்களை ஏற்படுத்தி விட்டன.
இவற்றையெல்லாம் எழுதுவதற்கு ஒரு காப்ரியல் மார்க்ஸ் மட்டும் நமக்கு போதாது. எத்தனை
மார்கஸ்கள் வந்தாலும் அவர்களுக்கான கருப்பொருள்கள் நம்மிடம் தட்டுப்பாடின்றி உள்ளன.
ஆனால், இதற்காக
முன்வருபவர்கள் யார் ? நமது சமூகத்தின் மனசாட்சியாக மாறும் எண்ணம் கொண்டவர்கள் எத்தனை
பேர் ?
நன்றி விடியல் வெள்ளி ஜூன் 2014
சார் தற்போது இதை யார் நடத்துகிறார்கள்?
பதிலளிநீக்குயார் இந்த புத்தகம் தற்போது வெளியிடுகிறார்கள்?
பதிலளிநீக்கு