முஸ்லிம்களின் ஷரீஅத் நீதிமன்றங்கள் சட்டப்படியானவை அல்ல என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொது நலமனுவில் முஸ்லிம் சமுதாயத்தினரின் ஷரியத் நீதிமன்றங்கள், நாட்டின் நீதித்துறைக்கு இணையானவையாக செயல்படுகின்றன. இவை பிறப்பிக்கும் ஃபத்வா உத்தரவுகள் அரசியல் சட்டத்துக்கு எதிரானவை என்று அறிவிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
விஸ்வ லோசன் மாதன் என்ற வழக்கறிஞர் தாக்கல் செய்திருந்த இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், “ஷரியத் நீதிமன்றங்கள் சட்டப்படியானவை அல்ல; அந்த நீதிமன்றங்களுக்கு எந்த ஒரு சட்ட அங்கீகாரமும் வழங்கப்படவில்லை.
மக்களின் அடிப்படை உரிமையை பறிக்க எந்த ஒரு மதத்துக்கும் உரிமை இல்லை. அடிப்படை உரிமைகளை பறிக்கும் மத அடிப்படையிலான உத்தரவுகளை கட்டாயம் பின்பற்ற வேண்டிய அவசியமும் இல்லை.
தனிமனித உரிமைகளைப் பறிக்கும் மத அடிப்படையிலான உத்தரவுகள் சட்டவிரோதமானவை” என்று உச்சநீதிமன்றம் 07.07.2014 அன்று தீர்ப்பளித்துள்ளது.
உச்சநீதிமன்றத்தின் பார்வையில் ஷரீஅத் நீதிமன்றம் என்பது கட்ட பஞ்சாயத்து அமைப்பு போல் தெரிந்திருக்க வேண்டும்?அதனால் தான் தனிநபர் உரிமையை பறிக்கும் மத அடிப்படையிலான உத்தரவுகள் சட்ட விரோதமானவை என சுட்டிக்காட்டியுள்ளது.
ஷரீஅத் நீதிமன்றம் என்பது முஸ்லிம்களின் வேதநூலான அல்குர்ஆன் மற்றும் இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்)அவர்களின்வாழ்வியல் நெறிமுறையை முன்வைத்து தீர்வு காணும் ஓர் அமைப்பாகும்.
விவாகரத்து மற்றும் ஜீவனாம்சம் உள்ளிட்ட இந்த இரட்டை பிரச்சினையில் மட்டுமே பெரும்பாலும் ஷரீஅத் நீதிமன்றங்கள் தலையிடுகின்றன.
பாதிக்கப்பட்ட மக்கள் அணுகாதவரை தானாக எந்த வழக்கிலும் ஷரீஅத் நீதிமன்றம் தலையிடுவதில்லை. கணவன்,மனைவிக்கு இடையிலான விவாகரத்து வழக்குகள் தற்போது பெருகிவரும் சூழலில், இஸ்லாமிய கோட்பாட்டிற்கு உட்பட்ட காரணம் இருந்தாலே தவிர யாருக்கும் விவாகரத்து கொடுத்து விடுவதில்லை.
ஷரீஅத் நீதிமன்றத்தின் தீர்ப்புகளில் மனநிறைவு பெறாதவர்கள் நாட்டின் எந்தவொரு நீதிமன்றத்தையும் அணுகி மேல் முறையீடு செய்து கொள்ளலாம்.
ஷரீஅத் நீதிமன்றங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட பெரும்பாலான விவாகரத்து வழக்குகளில் கணவன்,மனைவி இருவரும் சேர்ந்து வாழவே வழிகாட்டப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் லட்சக்கணக்கான வழக்குகள் நீதிமன்றங்களில் தேக்கமடைந்துள்ள நிலையில் ஷரீஅத் நீதிமன்றங்களின் மூலம் அதன் சுமை குறைக்கப்படுகிறது என்பதே நிதர்சனமாகும்.
உச்சநீதிமன்றம் கூறியுள்ளபடி தனிப்பட்ட யாருடைய உரிமைகளிலும் ஷரீஅத் நீதிமன்றம் தலையிடுவதில்லை.
தனக்கு இஸ்லாமிய வாழ்வியல் அடிப்படையில் தனது கணவனிடமிருந்து விவாகரத்து வேண்டுமென்று விண்ணப்பிக்கும் ஒரு பெண்ணின் கோரிக்கைக்கு அவளது கணவனுக்கு முறைப்படி நோட்டீஸ் கொடுத்து அவரை அழைத்து விசாரிப்பதை தனிமனித உரிமை மீறல் என்று எங்ஙணம் எடுத்து கொள்வது?
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அரசியல் அமைப்பு சட்டம் வழங்கியுள்ள மத சுதந்திரம் மீதான தாக்குதலாகவே கருத தோன்றுகிறது.
பாஜக வலியுறுத்தும் பொதுசிவில் சட்டமும் ஷரீஅத் சட்டத்திற்கெதிரானதே.
குர் ஆன், ஹதீஸை பின்பற்றி வாழ்வது தான் முஸ்லிம்களின் நிலைபாடு. அதற்கு பெயர்தான் ஷரீஆ என்னும் மார்க்க சட்டம். அத்தகைய சிறப்பு வாய்ந்த ஷரீஆவுக்கு எதிரான சூழ்ச்சி வலைகள் எங்கிருந்து பின்னப்பட்டாலும் நமது சமுதாய ஒற்றுமையின் மூலம் அந்த வலைகளை கிழித்தெறிய முடியும்.
நாட்டில் உள்ள ஒவ்வொரு ஜமாஅத்திலும் ஷரீஆவுக்கெதிரான ஆபத்துகளை மக்களிடம் எடுத்துக்கூறி எந்த சூழலிலும் நமது வாழ்வியல் வழக்குகளை ஷரீஆவுக்கு வெளியில் கொண்டு செல்வதில்லை என்று உறுதி ஏற்போமானால்…
ஷரீஅத் நீதிமன்றங்களின் உயிரோட்டத்தை படைத்தவனை தவிர யாராலும் நிறுத்த முடியாது!
நன்றி தூது ஆன்லைன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக