அபூதபீ அவ்காஃபுடன் இணைந்து இந்திய சமூக கலாச்சார மையம் நடத்திய திருக்குர்ஆன் மனனப் போட்டியில் காயல்பட்டினத்தைச் சேர்ந்த்த ஹாஃபிழ் எச்.எல்.இஸ்ஸத் மக்கீ முதலிடம் பெற்று சாதனை புரிந்துள்ளார்.
விரிவான விபரம் வருமாறு:-
ஐக்கிய அரபு அமீரகம் - அபூதபீயிலுள்ள இந்திய சமூக கலாச்சார மையம் (Indian Social & Cultural Centre), அபூதபீ அவ்காஃபுடன் இணைந்து, மறைந்த ஷெய்க் ஸாயித்.பின் ஸுல்தான் அல் நஹ்யான் நினைவாக, அபூதபீயில் வசிக்கும் மக்களுக்காக திருக்குர்ஆன் மனன (ஹிஃப்ழு)ப் போட்டியை இவ்வாண்டு முதல் ஆண்டுதோறும் ரமழான் மாதங்களில் நடத்திட திட்டமிட்டுள்ளது.
நடப்பாண்டு போட்டி இம்மாதம் 19 முதல் 22ஆம் நாள் வரை, திருமறை குர்ஆனில் 10 ஜுஸ்உகள் மனனம் செய்தோர், 20 ஜுஸ்வுகள் மனனம் செய்தோர், முழுமையாக மனனம் செய்தோர் ஆகியோருக்காக - வயது வரம்பு அடிப்படையில் மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்டது.
இப்போட்டிகளில், அபூதபீயில் வசிக்கும் - மொரோக்கோ, சிரியா, எகிப்து, எமன் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த ஹாஃபிழ்களும், அபூதபீயிலுள்ள உள்ளூர் ஹாஃபிழ்கள் மற்றும் பள்ளிவாசல்களின் இமாம்களும் பங்கேற்றனர்.
இப்போட்டியில் இந்தியர்களை அதிகளவில் பங்கேற்கச் செய்வதற்காக, அபூதபீயிலுள்ள இந்தியன் முஸ்லிம் ஃபோரம் தொடர் தூண்டுதலளித்து வந்தது. அத்தூண்டுதலின் பேரில், அபூதபீயில் பணிபுரியும் - காயல்பட்டினம் மர்ஹூம் நூ.த.முஹம்மத் மக்கீ ஆலிம் ஸித்தீக்கீ அவர்களின் பேரனும், காயல்பட்டினம் அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளியின் இமாம், சொளுக்கார் தெருவைச் சேர்ந்த மவ்லவீ ஹாஃபிழ் மக்கீ எம்.எம்.ஹாமித் லெப்பை ஃபாஸீயின் மகனுமான ஹாஃபிழ் எச்.எல்.இஸ்ஸத் மக்கீ, திருமறை குர்ஆனை முழுமையாக மனனம் செய்தோர் பிரிவிற்கான போட்டியில் பங்கேற்று முதல் பரிசை வென்றுள்ளார்.
அவருக்கு, முதல் பரிசு பெற்றதற்கான விருதும், பணப்பரிசும் வழங்கப்பட்டுள்ளது. போட்டியின் நிறைவில், ஹாஃபிழ் எச்.எல்.இஸ்ஸத் மக்கீ பேட்டியளித்தார்.
தான் காயல்பட்டினம் ஹாமிதிய்யா திருக்குர்ஆன் ஹிஃப்ழு மத்ரஸாவில் பயின்று ஹாஃபிழுல் குர்ஆன் ஸனது பெற்ற மாணவர் என்றும், தான் ஹாஃபிழாக உருவாவதற்கு - மத்ரஸா முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் தன் பெற்றோர் மிகவும் துணை புரிந்ததாகவும் கூறிய அவர், அமீரகத்தில் தான் பணியாற்றும் நிறுவனம், இப்போட்டியில். பங்கேற்க இந்தியன் முஸ்லிம் ஃபோரம் தனக்களித்த தூண்டுதல், போட்டியில் பங்கேற்கையில் அபூதபீ காயல் நல மன்ற நிர்வாகிகள் தனக்களித்த முழு ஒத்துழைப்பு ஆகியவற்றுக்காக அவர் நன்றி தெரிவித்துப் பேசினார்.
அபூதபீயில் முதன்முறையாக நடைபெறும் ல் திருக்குர்ஆன் மனனப் போட்டியில் முதலிடம் பெற்றமைக்காக, ஹாஃபிழ் எச்.எல்.இஸ்ஸத் மக்கீயை - பலரும் வெகுவாக பாராட்டினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக