மத்திய பாஜக ஆட்சியின் மதசார்பின்மைக்கு எதிரான செயல்பாடுகளை பொதுமக்கள் மத்தியில் எடுத்துச்சென்று விழிப்புணர்வூட்டும் வகையில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ‘மதச்சார்பற்ற இந்தியா எதிர்கொள்ளும் சவால்கள்’ என்ற தலைப்பில் நேற்று (18.10.2015) சென்னை மண்ணடி தம்புச் செட்டித் தெருவில் பெருந்திரள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
மனிதநேய மக்கள் கட்சியின் மத்திய சென்னை மாவட்ட செயலாளர், இ.எம்.ரசூல் தலைமையில் நடைபெற்ற இப்பொதுக்கூட்டத்தில் மமக அமைப்பு செயலாளர்கள், ஏ.அஸ்லம் பாஷா எம்.எல்.ஏ, யாகூப் உட்பட ஏராளமான ஆண்கள், பெண்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் உயர்நிலைக்குழு தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ, தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., உயர்நிலைக்குழு உறுப்பினர் செ. ஹைதர் அலி, பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது, பொருளாளர் ஓ.யூ.ரஹ்மத்துல்லா ஆகியோர் உரையாற்றினார்கள்.
இப்பெருந்திரள் பொதுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
தீர்மானம்: 1
கடந்த அக்டோபர் 6 அன்று சென்னை தாம்பரத்தில் நடைப்பெற்ற மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை இந்த பெருந்திரள் பொதுக்கூட்டம் வரவேற்கின்றது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தலைமை நிர்வாகிகளுக்கு இந்த பெருதிரள் பொதுக்கூட்டம் தமது வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறது.
தீர்மானம்: 2
இந்தியாவின் மதச்சார்பின்மையை சிதைக்கும் சக்திகளுக்கு வலுவூட்டும் மத்திய அரசை கண்டித்து, தங்களது சாகித்திய விருதுகளை திருப்பி அளித்து துணிச்சலாக மத்திய அரசுக்கு எதிராக தமது கண்டனங்களை பதிவுசெய்துள்ள 20 எழுத்தாளர்களுக்கு இந்த பெருந்திரள் பொதுக்கூட்டம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது. ஐயா பெரியாரால் வார்க்கப்பட்ட தமிழ்நாட்டில் சாகித்திய அகாடமி விருதுகளைப் பெற்ற தமிழ் எழுத்தாளர்களும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்த முன்வர வேண்டும் என இப்பெருந்திரள் பொதுக்கூட்டம் வலியுறுத்துகிறது.
தீர்மானம்: 3
இந்திய மக்களின் உணவு உரிமையில் தலையிடுகின்ற பயங்கரவாத சக்திகளின் செயல்பாடுகளை ஊக்குவிக்கும் போக்கை உடனே நிறுத்தி, அவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குகின்ற வேலையில் மத்திய அரசு ஈடுபடவேண்டும் என்றும் மத்திய அரசு இதில் உரிய நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் தலையிட வேண்டுமென்றும் இப்பெருந்திரள் பொதுக்கூட்டம் வலியுறுத்துகிறது.
தீர்மானம்: 4
மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்றப் பேரவையில் வைத்த கோரிக்கையை ஏற்று தஞ்சை மண்டலத்தில், காவேரி படுகையில் செயல்படுத்தவிருந்த மீத்தேன் திட்டத்தை ரத்து செய்த தமிழக அரசுக்கு இப்பெருந்திரள் பொதுக்கூட்டம் நன்றி தெரிவித்துக்கொள்கிறது.
தீர்மானம்: 5
இந்திய நாட்டின் பண்முகத்தன்மையை சிதைக்கும் வகையில் பொது சிவில் சட்டம் தொடர்பான சர்ச்சைகளை கிளப்பி வருகின்ற போக்கை இப்பொதுக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது, அனைத்து மக்களுக்குமான தனியார் சட்ட உரிமைகள் தொடர்ந்து நீடிக்கப்பட வேண்டும் என இந்த பெருந்திரள் பொதுக்கூட்டம் வலியுறுத்துகிறது.
தீர்மானம்: 6
புனித ஹஜ்ஜின் போது நடைபெற்ற விபத்தை மையமாக வைத்து முகநு£லில் வெறுப்பு பிரச்சாரம் செய்த ஒருவரை மதுரை, திருமங்கலம் காவல்துறையினர் கைதுச் செய்ததற்கு இப்பெருந்திரள் பொதுக்கூட்டம் தமது நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக